இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 04 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர தின விழா இடம்பெறும்.
இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்றது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சுதந்திர தின நிகழ்வுக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவு சம்பந்தமாக கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சின் செயலாளர் பதிலளித்தார்.
“ சுதந்திர தின விழாவுக்காக 100 மில்லியன் ரூபா வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த செலவில் சுதந்திர தினத்துக்குரிய கம்பீரத்தன்மை குறையாமல் அதனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த முறை சுதந்திர தின விழாவுக்கு 69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனவே, இம்முறையும் அந்த செலவுக்குள் நிகழ்வை நடத்த முடியும்.” – எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, எதிர்கால இலங்கையை கட்டியெழுப்புவதற்காக சுதந்திர தின நிகழ்வை பயன்படுத்துவோம்.
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்கிவருகின்றனர். அந்த ஆதரவு தொடரட்டும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










