நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 1,500 க்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு: 21 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு

சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாகத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

“நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாகச் சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

அத்துடன், இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக 61 பேர் சந்தேக நபர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். வரும் 21 ஆம் திகதி அவர்களுக்கான அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, மஹரச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 925 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குருவிட்ட உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலச்சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.

இச்சம்பவங்களின் உள்ளக மற்றும் வெளியகத் தொடர்புகள் குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைய, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Related Articles

Latest Articles