டெங்கு நோயார்களுக்கு வீட்டு வைத்தியம் வேண்டாம்!

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு, பொரளை தேசிய ஆயுர்வேத மருத்துவமனையில சிறப்பு சிகிச்சை மையமொன்று எதிர்வரும் ஜூலை 31 வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது.

ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை பெற முன்வருவோர் இந்தச் சிறப்பு மையத்துக்கு வரலாம் என வைத்தியசாலை இயக்குநர் டாக்டர் பராக்ரம ஹேமச்சந்திர தெரிவித்தார்.

அதேவேளை, தகுதியான வைத்தியர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவப் பயிற்சி மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத வீட்டு வைத்தியங்கள் அல்லது மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் எனப் மூத்த ஆலோசகர் மருத்துவர் சமந்த ஆரியரத்ன டெங்கு நோயாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாகப் பப்பாளி இலைச் சாறு போன்ற வீட்டு வைத்தியங்களுக்கு எதிராக எச்சரித்த அவர், இதுபோன்ற வைத்தியங்களை உட்கொண்ட பிறகு சில டெங்கு நோயாளிகளுக்குக் கடுமையான பாதிப்புகளும் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்களின் அடிப்படையில் மருந்துகளையோ வீட்டு வைத்தியங்களையோ தயாரித்து உட்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களை டாக்டர் ஆரியரத்ன கேட்டுக்கொண்டார்.

தகுதியான மேலைத்தேய அல்லது ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே டெங்கு நோயாளிகள் உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles