ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வூட்லண்ட் (Woodland) பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று அதிகாலை முதல் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, தற்போது ஒருவழிப் பாதையாக (One-lane) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வீதியை முழுமையாக வழமைக்குக் கொண்டுவரும் துப்புரவுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், மேலும் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு, மலைநாட்டு வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸாரும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நுவரெலியாவில் பாடசாலைகள் மூடல்
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நேற்றும் இன்றும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்ததாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், வரும் நாட்களில் நிலவும் வானிலைச் சூழலுக்கு ஏற்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது அல்லது விடுமுறை அளிப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்










