போதைப்பொருள், போதை வஸ்துகள மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாம் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிரானவர்கள் அல்லர், இத்தகைய குற்றங்களுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,
“போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களைக் கூறி அதற்கு எதிராக எதிர்க்கட்சி செயல்படுகிறது என ஜனாதிபதி கூறியது தவறு.
நீதியை நிலைநாட்டும் நடவடிக்கை மற்றும் சட்டத்தின் ஆட்சியின்படி சாத்தியமான அனைத்தையும் செய்து போதைப்பொருளை இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரைப் போன்ற கடுமையான தண்டனைகளைப் பெற்றுக் கொடுங்கள்.
இராணுவத்தைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்புக்காக முன்நிற்பதாக ஜனாதிபதி கூறினாலும், இன்று சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா செல்ல முடியாது. சவேந்திர சில்வாவுக்கு சில நாடுகளுக்குச் செல்ல முடியாது. இதற்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எக்னலிகொட, லசந்த மற்றும் தாஜுதீன் ஆகியோரைக் கொலை செய்தவர்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சிரச, சியத போன்ற ஊடக நிறுவனங்களை தீ வைத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் தாக்கியவர்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறினாலும், 2 வருடங்கள் கடந்தும் இன்னும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன நீக்கப்படவில்லை.” – என்றார் சஜித்
