ஈரான் போரில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்!
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை பென்டகன் முன்னாள் பட்ஜெட் அதிகாரி எலைன் மெக்கஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மேலும், குவைத் விமானம் தவறுதலாகச் சுட்டதில் மூன்று எஃப்-15இ ரக விமானங்கள் விழுந்து நொறுங்கின.
ஈராக் வான்பரப்பில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்கள் சேதமடைந்து தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிநவீன ‘எம்.கியூ-9 ரீப்பர்’ வகை ஆளில்லா உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் வைக்கப்பட்டுள்ள ரேடார் அமைப்புகளும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
கிரீஸ் நாட்டின் சூடா விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ போர்க்கப்பலிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 3 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ராணுவ சொத்துகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்த மோதலில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; சுமார் 290 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் இழந்த ராணுவத் தளவாடங்களை மீண்டும் வாங்குவதற்காக சுமார் 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை ஒதுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
32 ஆவது நாளாக தொடரும் போர்: கார்க் தீவை குறிவைக்கும் ட்ரம்ப்?
மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆலோசித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் படைகள் அங்கு களமிறக்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்துவருவதாகக் கூறப்படுகின்றது.
ஈரானின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு நிலையைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்புகின்றார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே வேளையில், பாகிஸ்தான் மூலமாக நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருப்பதாகவும், ஒரு ஒப்பந்தத்தை விரைவில் எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பி மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து படக்குழு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணி்க்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்புக் குழு மீண்டும் தனி நீதிபதியை நாடவும், தனி நீதிபதி இரு தரப்புக்கும் போதிய அவகாசம் அளித்து விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.
இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது தொடர்பாக நேரடியாக தணிக்கை வாரியத்தையே நாடவுள்ளதால், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக படத்தயாரிப்பு தரப்பி்ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பின்னர் இப்படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மார்ச் 17-இல் மறு ஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்த்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதாலும் படத்தில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாலும் படத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு மறு ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீடு தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை மாதம் இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் யாஷ் நடித்துள்ள ‘த டாக்ஸிக்’ படம் மார்ச் மாதம் வெளியாக இருந்தது. படத்தை ஜூன் 4-ஆம் திகதிக்குத் தள்ளி வைத்தனர். அதன் வெளியீட்டில் கவனம் செலுத்த இருக்கும் இந்நிறுவனம், அப்படம் வெளியான பிறகே ‘ஜனநாயகன்’ படத்தில் கவனம் செலுத்தும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!
IPL தொடரின் இன்றைய 3ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த பலத்துடன் களமிறங்குகிறது சென்னை அணி.
அதேநேரத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, முதல் 2 வார காலம் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
மரக்கறி விலைப்பட்டியல் (30.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அஜிங்க்ய ரஹானே மற்றும் ஃபின் ஆலன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். அஜிங்க்ய ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களும், ஃபின் ஆலன் 17 பந்துகளில் 37 ரன்களும் குவித்தனர்.
மிடில் ஆர்டரில் அறிமுக வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.
221 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரையான் ரிகெல்டன் ஜோடி வானவேடிக்கை காட்டியது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பழைய ஃபார்முக்குத் திரும்பி, 38 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார். அவருக்கு இணையாக விளையாடிய ரையான் ரிகெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இவர்களின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் மும்பையின் வெற்றியை எளிதாக்கியது.
இறுதிக்கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார். 19.1 ஓவர்களிலேயே மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
மரக்கறி விலைப்பட்டியல் (29.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எமது எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ்தள பக்கத்தில் அவர் விசேட பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மத்திய கிழக்கு போர் இன்று 31 ஆவது நாளாக தொடர்கின்றது.
கியூபாதான் அடுத்த குறி!
“ வெனிசுலா மற்றும் ஈரானின் ராணுவ வெற்றிக்குப் பிறகான அடுத்த இலக்கு கியூபாதான்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், வெனிசுலா மற்றும் ஈரானில் அமெரிக்க ராணுவம் மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளதாக பாராட்டினார்.
அப்போது அவர், ‘‘நான் இந்த மகத்தான (அமெரிக்க) ராணுவத்தை உருவாக்கினேன். நீங்கள் ஒருபோதும் போரில் ஈடுபட வேண்டியிருக்காது என்று நான் அவர்களிடம் கூறி இருந்தேன்.
ஆனால், சில நேரங்களில் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சொல்லப்போனால் அடுத்தது கியூபாதான்’’ என தெரிவித்தார்.
எனினும் பின்னர், ‘‘நான் அப்படி சொல்லவில்லை என்று பாவித்துக்கொள்ளுங்கள். நான் அப்படி சொல்லவில்லை என்றே நினைத்துக்கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டார்.
வெனிசுலாவின் நட்பு நாடாக இருந்து வந்த கியூபா, அந்த நாட்டிடம் இருந்து எரிபொருட்களை பெற்று வந்தது.
கடந்த ஜனவரியில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றதை அடுத்து, கியூபாவுக்கான எரிபொருள் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது.
இது குறித்து குறிப்பிடும் ட்ரம்ப், ‘‘கடுமையான பொருளாதார நெருக்கடியை கியூபா சந்தித்து வருகிறது. கியூப அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்றே நான் நம்புகிறேன். அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா, ராணுவ ரீதியிலான நேரடி நடவடிக்கையை எடுக்கலாம்.
எனினும், ராணுவ மோதலை தவிர்க்கும் நோக்கில், அமெரிக்காவுடன் தங்கள் நாடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கியூப ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல் ஒப்புக்கொண்டுள்ளார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் கியூபா நட்பான கையகப்படுத்தலுக்கு உள்ளாகலாம்; உள்ளாகாமலும் போகலாம்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















