கொழும்பு மாநகரசபை பட்ஜட் தோற்கடிப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட 29 தூதுவர்களை திருப்பி அழைக்கிறார் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட தூதுவர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை, திருப்பி அழைக்கத் தொடங்கியுள்ளது.
ட்ரம்பின் “அமெரிக்காவுக்கு முதலிடம் ” நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும் வகையில், அமெரிக்க இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை பரந்தளவில் மீளமைக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இதற்கமைய, குறைந்தது 29 நாடுகளில் உள்ள தூதுவர்களின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடையும் என்று இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பி அழைக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்டனர் என்று, ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அரசியல் நியமனங்கள் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை வெளியேறுமாறு முறைப்படியான அறிவிப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.
திரும்ப அழைக்கப்பட்டவர்கள் தங்கள் வெளிநாட்டு சேவை அந்தஸ்தை இழக்க மாட்டார்கள் என்றும், அதற்கு பதிலாக வேறு நியமனங்களுக்காக வொஷிங்டனுக்குத் திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திருப்பி அழைக்கப்படும் இராஜதந்திரிகளின் சரியான எண்ணிக்கை அல்லது அடையாளங்களை உறுதிப்படுத்த இராஜாங்கத் திணைக்களம் மறுத்துவிட்டது.ஆனால் இந்த நடவடிக்கையை ஒரு வழக்கமான செயல்முறை என்று விவரித்துள்ளது.
ஆபிரிக்காவில் இருந்து அதிகளவாக, நைஜீரியா, ருவாண்டா, செனகல் மற்றும் உகண்டா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், பிஜி, லாவோஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவில், ஆர்மேனியா, வடக்கு மசிடோனியா, மொண்டினீக்ரோ மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கான தூதுவர்களும் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் அல்ஜீரியா மற்றும் எகிப்தில் இருந்தும், தெற்காசியாவில், நேபாளம் மற்றும் சிறிலங்காவில் இருந்தும், மேற்கு அரைக்கோளத்தில் குவாட்டமாலா மற்றும் சுரினாமில் இருந்தும் தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
டித்வா புயலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு தெரியுமா? வெளியானது உலக வங்கி அறிக்கை!
இலங்கையை தாக்கிய தாக்கிய டித்வா புயல், 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதத்திற்கு சமம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றான இந்த சூறாவளி, 25 மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் 5 லட்சம் குடும்பங்களையும் கடுமையாக பாதித்தது.
வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்தை சீர்குலைத்தது.
அவசரகால பதில், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை வழிநடத்த சிறிலங்கா கிரேட் அறிக்கை சரியான நேரத்தில் மற்றும் முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.
இந்த மதிப்பீடு உலக வங்கியின் விரைவான, தொலைதூர, மாதிரி அடிப்படையிலான GRADE முறையைப் பயன்படுத்துகிறது.
இது உடல் சொத்துக்களுக்கு நேரடி பொருளாதார சேதத்தை மதிப்பிடுகிறது.
வருமானம் அல்லது உற்பத்தி தொடர்பான இழப்புகள் அல்லது மீட்பு மற்றும் மறுகட்டமைப்பிற்கான முழு செலவுகளும் அறிக்கையில் இல்லை.
4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி சேதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிர்ச்சியைக் குறிக்கிறது.
மிகவும் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் 689 மில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது பிரதானமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்டது.
வீதிகள், பாலங்கள், தொடருந்து மற்றும் நீர் வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளன. இது 1.735 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது சந்தைகள் மற்றும் சேவைகளுக்கான இணைப்பு மற்றும் அணுகலை சீர்குலைக்கிறது.
குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு மொத்தம் 985 மில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
விவசாயத்துறை 814 மில்லியன் டொலர் சேதத்தை சந்தித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் நெல் மற்றும் காய்கறி பயிர்கள், வாழ்வாதார விவசாயம், சோளம், கால்நடைகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு, அத்துடன் உள்நாட்டு மீன்பிடித்தலுக்கு சேதம், என்பன அடங்குகின்றன.
பள்ளிகள், சுகாதார வசதிகள், வணிகங்கள் மற்றும் பெரிய தொழில்துறை வசதிகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு பெரிதும் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை உடனடியாக அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் தையிட்டியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாகச் செயற்பட்டமைக்கும், அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யப்பட்டமைக்கும் மாணவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
இலங்கை வந்தார் ஜெய்சங்கர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை இலங்கை வந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையம் வந்த அவரை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க வரவேற்றார். இலங்கைக்கான இந்திய தூதுவரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
இந்திய பிரதமரின் விசேட பிரதிநிதியாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை அவர் நாளை சந்திக்கவுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித் திட்டங்கள் பற்றி அறிவிக்கப்படவுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்குட்பட்ட ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (22) நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும், எதிராக 03 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 02 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
இதற்கமைய, 09 மேலதிக வாக்குகளால் (12-3 என்ற அடிப்படையில்) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான ஆளும் தரப்பு வெற்றி கொள்ள முடிந்தது.
மஸ்கெலியா நிருபர்
ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் இலங்கை வருகின்றார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா பேருதவிகளை வழங்கிவருகின்றது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட உதவி திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இவ்வியத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச உதவி முறையாக நிர்வகிப்பு: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் எடுத்துரைப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியயவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயற்பட்டதற்கு மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பாராட்டு தெரிவித்தார்.
உலகின் ஏனைய நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டை முழுமையாகப் பயன்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், இந்த பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் அரசியல் அதிகார தரப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆற்றிய பணி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
இந்த வெற்றிக்கு, குறிப்பாக மாவட்டத் தலைமை முதல் பிரதேச மட்டத்தில் கீழ் மட்ட அதிகாரிகள் வரை அனைவரின் கூட்டு முயற்சியே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
கிடைக்கப்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பை முறையாக நிர்வகிப்பதற்கும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (22) நிறைவேற்றப்பட்டது.
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அக்கரப்பத்தனை பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே ஆட்சியமைத்துள்ளன. அச்சபையில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அண்மையில் வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டவேளை, அது தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்று மீண்டும் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.















