Home Blog Page 181

ஜனாதிபதி செயலர் – பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் ஆதரவளிக்கும் என்றும், இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளரிடம் பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்தார்.

பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தலைவர் Matthieu John இந்நிகழ்வில் பங்கேற்றார்.

இடர் முகாமைத்துவ பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும்!

பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தவேளையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை உரியவாறு இயங்கவில்லை என்பது தெரியவருகிறது.   அபாயத்தை முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்திருந்தால், இழப்புகளை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம்.

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தபோது, இடர் முகாமைத்துவ நிலைய பொறிமுறை ஏன் உரியவாறு செயற்படாது போனது என்பதை நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், செய்திச் சேவைகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் 15 நாட்களாக எச்சரிக்கை விடுத்த போதிலும், இதுபோன்ற ஆபத்து இருந்தபோதிலும் இடர் முகாமைத்துவ பொறிமுறை ஏன் முறையாக இயங்கவில்லை என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றன.

அனர்த்தம் குறித்து அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதிருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது.

சுனாமியிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்தப் பேரழிவிலிருந்தேனும் நாம் பாடம் கற்றுக்கொண்டு, நமது நாட்டில் ஏற்படும் பல்வேறு வானிலை மற்றும் காலநிலை தாக்கங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும்.” என்றார்

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நடந்தது என்ன?

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

 பிரதேச மக்கள் பயன்படுத்தும் தோட்ட வீதிகளை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்க

 பெரும் போகத்தில் நெல் பயிரிடக்கூடிய வகையில் நீர்ப்பாசனங்களை மறுசீரமைக்குக

 கிரிகரி வாவி மதகின் தொழில்நுட்ப செயற்பாடுகளை நீர்ப்பாசனத் திணைக்களம் பொறுப்பேற்க வேண்டும்

 கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாளர் பற்றாக்குறையை நிரப்ப ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துக -ஜனாதிபதி

நுவரெலியா மாவட்டத்தில் காய்கறிகளுக்கு பற்றாக்குறை கிடையாது – அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கும் திட்டத்தை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதில் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (08) காலை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 19,780 குடும்பங்களைச் சேர்ந்த 63,121 பேர் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும், நுவரெலியா மாவட்டத்தில் மின்சாரம், நீர் வழங்கல், தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இங்கு விரிவாக ஆராய்ந்தார்.

காய்கறி மற்றும் உருளைக்கிழங்கு பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் பயிற்செயகைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி அறுவடை 25% மட்டுமே குறைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நுவரெலியா மாவட்டத்தால் நாளாந்த காய்கறி விநியோகத்தை மேற்கொள்ள முடியுமான போதிலும், தற்போது நாளாந்த மரக்கறித் தேவையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி பற்றாக்குறை இருப்பதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் வெளியான தவறான செய்தியே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

காய்கறி பயிற்செய்கைக்கு ஏற்பட்ட சேதம், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் சொந்தமான காணியின் அளவு குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் காய்கறி பயிற்செய்கை ஆரம்பிப்பதற்காக மரக்கறி விதைகளை வழங்கும் நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

விதைகளின் விலை அதிகரிப்பு காரணமாக உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நுவரெலியா மாவட்ட வீதிக் கட்டமைப்பை மீளமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டம் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. மக்களின் போக்குவரத்து வசதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்த புனரமைப்புப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற எந்த நிறுவனத்தின் கீழும் வராததால் 611 தோட்டங்களுடன் தொடர்புடைய வீதிகள் புனரமைக்கப்படாதிருப்பது குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமான ஆனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் மற்றும் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் அனைத்து வீதிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று உடனடியாக புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தினார்.

பெரும் போகத்தில் நெல் வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் நீர்ப்பாசனக் கட்டமைப்பை உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதோடு கொத்மலை நீர்த்தேக்கம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதே வேளை அகரபத்தன பாலம் இடிந்து விழுந்ததால், மக்களுக்கு மேலதிகமாக 8 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும், பாலத்தை உடனடியாகப் பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மலைநாட்டின் ஊடாகச் செல்லும் வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அவற்றை துரிதமாக மறுசீரமைத்து அபிவிருத்தி செய்வதற்காக திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தினார்.

கிரிகரி வாவி மதகின் தொழில்நுட்ப செயல்பாடுகளை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவருவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை மீளமைக்கும் திட்டம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு எழுந்துள்ள பணியாளர் தட்டுப்பாடுகளை தற்காலிகமாக பூர்த்தி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த 551 பாடாசலைகளில் 490 பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதிக்குள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அன்றைய தினம் முடிந்தளவு பாடசாலைகளை தொடங்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்க முடியாத பாடசாலை மாணவர்களை அருகிலுள்ள பாடாசலைகளுக்கு அனுப்பவும், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கவும் பணிப்புரை வழங்கினார்.

அத்தோடு வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார வசதிகளின் செயல்பாடு குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. மருத்துவ விடுதிகள் சேதமடைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன் போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதோடு அந்த வசதிகளை வழங்குவதற்கு ஏற்ற வேறு கட்டிடங்களை அடையாளம் கண்டு அறிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் அதனை விடுவிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கடந்த 05 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை அதற்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறும் அது குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தினார்.

வீடுகளை இழந்த மக்களுக்கான இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் நாட்டின் இதயமாக விளங்கும் மத்திய மலையகத்தை பாதுகாக்கவும் நீண்டகால வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார்.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி, நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.ஜி. விஜேரத்ன, கே. கலைச்செல்வி, அனுஷ்கா திலகரத்ன, வி. ராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின்கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 8 பில்லியன் டொருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இழப்பை இலங்கையால் தனித்து ஈடுசெய்ய முடியாது.

எனவே, இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரசு அமீகரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் இணைத்தலைமையின்கீழ் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்.
உலகில் வேறு நாடொன்றில் அனர்த்தம் ஏற்பட்டு உலகின் பார்வை அந்நாடு பக்கம் திரும்புவதற் முன்னர் இந்த மாநாட்டை நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுகை சங்கம் உட்பட சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளின் மாநாட்டையும் நடத்த வேண்டும்.” என்றார் உதய கம்மன்பில.

சஜித் – ரஷ்ய தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஷ்ய தூதுவருக்கு இங்கு விளக்கமளித்து, மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், சேதடைந்துபோன ரயில் போக்குவரத்துப் பாதைகள், வீதிக் கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீள புனர்நிர்மாணம் செய்வதற்கும் தேவையான ஆதரவுகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறே, இந்த இக்கட்டான நேரத்தில், இதுவரைக்கும் ரஷ்ய அரசு நல்கிய ஆதரவிற்காக எதிர்க்கட்சித் தலைவர், முழு இலங்கை மக்களின் சார்பாக தமது நன்றிகளை ரஷ்யத் தூதுவர் Mr. Levan Dzhagaryan அவர்களிடம் தெரிவித்துக் கொண்டார்.

நீண்டகால நண்பர்களாக இரு நாடுகளுக்கும் இடையே காணப்பட்டு வரும் வர்த்தக ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்தத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறும், வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இது பெரும் உறுதுணையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

கண்டியில் தோட்டப்பகுதிகளுக்குரிய விநியோக கட்டமைப்பு சீராக்கப்பட வேண்டும்!

கண்டி மாவட்டத்தில் தூர பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களுக்கான விநியோகக் கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளதால் மக்கள் பரிதவிக்கின்றனர். எனவே, விநியோகக் கட்டமைப்பை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“பேரிடரால் கண்டி மாவட்டம் நிலைகுலைந்துள்ளது. அதுவும் பெருந்தோட்டப்பகுதிகளில் நிலைமை மோசம். கண்டி மாவட்டத்தில் நகர் பகுதி மற்றும் நகரை அண்டியுள்ள தோட்டப்பகுதிகளுக்குரிய விநியோகக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயம். இது விடயத்தில் தன்னார்வ அடிப்படையில் செயல்பட்ட அனைத்து மனிநேய செயல்பாட்டாளர்களுக்கும் பாராட்டுகள்.

அதேபோல கண்டி மாவட்டத்தில் தூர இடங்களில் உள்ள தோட்டப்பகுதிகளுக்குரிய விநியோகக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து என்பன தடைபட்டுள்ளன. குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விநியோகக் கட்டமைப்பு இல்லாததால் அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதில்லை. போக்குவரத்து வசதி இல்லாததால் நிவாரண உதவிகளை முன்னெடுக்க செல்பவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளுக்கு வரமுடியாத நிலையும் உள்ளது.

எனவே, விநியோகக் கட்டமைப்பை சீர்செய்து, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பின பின்னர் நீண்டநாள் பிரச்சினைகள் பற்றி பேசி நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்கலாம். தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உயிருக்கே முன்னுரிமை, முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.” எனவும் வேலுகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையா விளக்கு நினைவுத் தூபி உடைப்பு: அமைச்சர் கடும் கண்டனம்!

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இத்தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை எந்த விதமான எதிர்மறை கைகளும் பாதிக்க அரசு அனுமதிக்காது.

மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இப்படியான நடவடிக்கைகளைத் தடுக்க சமூக ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம்!

ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

வட ஜப்பானின் ஹோன் தீவிலுள்ள ஆவோமோரி, ஹொக்காடியோ தீவின் தென் பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது.
பல கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதைத் தொடர்ந்து ஜப்பானின் வடகடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 10 அடி உயரத்துக்கு சுனாமி பேரலை கடற்கரை பகுதிகளை தாக்கக்கூடும் என ஜப்பான் அரசு தரப்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனால் கடற்கரை பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 0.5 முதல் 0.7 மீட்டர் என்ற உயரத்தில் தான் கடல் அலைகள் எழும்பின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஆவோமோரி டவுன் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த சிலர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின.
ஆவோமோரி, ஹொக்காடியோ பகுதியில் நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக குடியிருப்புகளில் சுவர் மற்றும் மாடங்களில் வைக்கப்பட்ட பொருட்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் விபத்து சம்பவங்களும் ஏற்பட்டன.

 

மரக்கறி விலைப்பட்டியல் (9.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (9.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (9) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கண்டனம்!

0
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான்...

வீதியில் நீர்பெருக்கெடுத்து ஓடுவதால் மாணவர்கள் அவதி!

0
மஸ்கெலியா நிருபர் - செ.தி.பெருமாள் பொகவந்தலாவ நகரில் இருந்து சென்மேரிஸ் கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதி, மழைக் காலங்களில் நீரோடையாக மாறுவதால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முறையாகப்...