நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
டிசம்பரில் டில்லி பறக்கிறார் ரில்வின் சில்வா!
ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் டில்லி பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் முதல் வாரமளவில் அவர் டில்லி செல்லக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எனவே, பாதீடு நிறைவேற்றப்பட்ட பின்னரே ரில்வின் சில்வா இந்தியா பறக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.
ரில்வின் சில்வாவுடன் ஜே.வி.பியின் உயர்மட்ட பிரமுகர்கள் சிலரும் செல்லவுள்ளனர் எனவும், இந்தியாவில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி. குழு கடந்த மாதம் சீனா சென்றிருந்தது. இந்நிலையிலேயே டில்லியும் அழைத்துள்ளது.
1987 காலப்பகுதியில் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.வி.பி.போராடியது. இதில் ரில்வின் சில்வாவும் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் அவரை டில்லி அழைத்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025 ஒக்டோபர் மாதத்திற்கான சுற்றுலா வருமானம், 186.1 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
ஜனவரி-ஒக்டோபர் காலகட்டத்தில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த மொத்த வருமானம், 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை 1,972,957 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியா 443,622 பார்வையாளர்களுடன் மிகப்பெரிய மூல சந்தையாகத் தொடர்ந்து வருகிறது.
அதைத் தொடர்ந்து பிரித்தானியா 180,592, ரஷ்யா 144,308, ஜெர்மனி 123,053 மற்றும் சீனா 115,400 வருகைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைக்காக அல்ல கொள்கைக்காகவே ஆதரவாக வாக்களிப்பு!
“ எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பதவி, சலுகைகள் வழங்கப்பட்டே ஆதரவாக வாக்கு பெறப்பட்டது. ஆனால் நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கி மலையக எம்.பிக்களின் ஆதரவை பெற்றோம்.”
இவ்வாறு சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
டெல்லி குண்டு வெடிப்பு: 4 வைத்தியர்களின் அங்கீகாரம் ரத்து
டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது.
வைத்தியர்களான முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோருக்கு தேசிய மருத்துவப் பதிவாளர் வழங்கிய அங்கீகாரத்தை எம்எம்சி உடனடியாக ரத்து செய்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்த மருத்துவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மருத்துவராகப் பணியாற்ற முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: பிரதான சூத்திரதாரி எங்கே?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என உறுதியளித்து தேசிய மக்கள் சக்தி வாக்கு வேட்டை நடத்தியது. ஆனால் பிரதான சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விசனம் வெளியிட்டார்.
இது தொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,
“ பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பிறந்த நாள் இன்றாகும் (நேற்று). அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது சேவை தொடர வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என பேராயரிடம் இவர்கள் உறுதியளித்திருந்தனர். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அவ்வாறு நடந்ததா? சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டாரா எனவும் எதிர்க்கட்சி தலைவர் வினவினார்.
மரக்கறி விலைப்பட்டியல் (16.11.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
என்.பி.பி. அரசின் பயணத்துக்கு ஆதரவு: பதவிகள் பெறமாட்டேன்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிபெறவுள்ளதாக வெளியாகும் தகவலை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை பெறப்போவதில்லை. எனினும், இந்த அரசாங்கத்தின் பயணத்துக்கு எனது ஆசிர்வதம் உள்ளது. ஏனெனில் ஊழல் வாதிகளுக்கு இடமளிக்கப்படவில்லை.” என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
“ நாட்டை பாதுகாப்பதற்காக திர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்று கூடுகின்றனராம். நாட்டை நாசமாக்கிய தரப்பினரே இவ்வாறு பேரணி நடத்த வருகின்றனர். 70 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி செய்த மேற்படி தரப்பினரால் அக்காலப்பகுதியில் நாட்டுக்காக செய்யமுடியாததை இனி எவ்வாறு செய்வார்கள்?
இன்று அரசியல் கலாசாரம் மாறிவிட்டது. இப்படியானவர்களை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை.” – என்றார் பொன்சேகா.
தமிழரசுக் கட்சி பிரமுகர்களை சந்தித்தார் இந்திய தூதுவர்!
அரசாங்கத்துடன் இணையமாட்டோம்: சஜித் அணியுடனான உறவு தொடரும்!
பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் 2026 வரவு செலவு திட்ட இரண்டாவது நிலை வாசிப்பில் ஆதரவாக வாக்களித்தோம், தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஊதியத்தை அதிகரிக்கவில்லை என்றால் அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் உள்ள தனது அலுவலகத்தில் (15) சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் கட்சி அல்லது எதிர்க்கட்சியைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் கொண்டு வந்த நல்ல திட்டங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.
2026 ஆம் ஆண்டுக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.400 சம்பள உயர்வை வழங்கும் என்று கூறுவதால் அதற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
ஏதாவது ஒரு காரணத்திற்காக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.
வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அரசாங்கத்தின் பக்கம் மாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்தவர்களையே தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்” என்றார்.
பொதுமக்களின் சார்பாக அரசாங்கம் முன்வைக்கும் எந்தவொரு நல்ல திட்டத்தையும் நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம்.
பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் இடத்தில் நாங்கள் எப்போதும் நிற்போம்.
பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக ஐக்கிய மக்கள் சக்தி எம் மீது எந்த வெறுப்பும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் ரீதியாக முன்னேறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.
கஜரூபன் திவ்யா நுவரெலியா















