Home Blog Page 220

நுகேகொடை கூட்டத்தில் தமிழரசுக் கட்சி பங்கேற்காது!

“எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலே விசேடமாக வரப் போகின்ற வரவு – செலவுத் திட்டம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒரு கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றோம்.

எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற வகையில் தன்னுடைய வரவு – செலவுத் திட்ட யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றார். அதற்குப் பிறகு இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று 14 ஆம் திகதி அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். அதற்குப் பிறகு குழுக்கள் மட்டத்தில் விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு இடம்பெற்று அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். இந்த விடயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ந்தோம். நாடாளுமன்றக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய நிலைப்பாடுகளை அல்லது தங்களுடைய கருத்துக்களைச் சொன்னார்கள்.

மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் என்னவிதமாக இதனை அணுக வேண்டும் என்கின்ற தங்களுடைய கருத்துக்களைச் சொன்னார்கள். இறுதி முடிவு எதுவுமே எடுக்கப்படவில்லை.

நாங்கள் ஜனாதிபதி தன்னுடைய யோசனைகளை எதிர்வரும் 7ஆம் திகதி முன்வைத்த பிறகு இரண்டாம் வாசிப்பு முடிவடைவதற்கு முன்னதாக எங்களுடைய அரசியல் குழுவோடு நாடாளுமன்றக் குழுவும் இணைந்து வாக்களிப்பில் எப்படிக் கலந்துகொள்வது என்பது சம்பந்தமான இறுதி முடிவெடுப்பது எனத் தீர்மானித்திருக்கின்றோம்.

அதைத் தொடர்ந்து நாங்கள் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயற்படுகின்ற விடயம் சம்பந்தமாகப் பேசப்பட்டது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியோடு தலைவரும் நானும் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் உரையாடி இருக்கின்றோம். அது சம்பந்தமாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றோம். அந்த நிலைப்பாட்டில் அவர்களும் இணங்கி வருவார்களாக இருந்தால் நாங்கள் முன்னர் இருந்ததைப் போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரோடு இணங்கிச் செயற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, அப்படியாக இணங்கிச் செயற்பட முன்வருமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பும் விடுக்கின்றோம். மத்திய செயற்குழுவிலே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோடும் நாங்கள் இது சம்பந்தமாக பேசலாமா என்ற விடயமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. சகல தமிழ்த் தரப்புக்களோடும் பிரதான தலைமைத் தமிழ்க் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அனைவரையும் இணைந்து செயற்படுமாறு அழைத்து விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரோடு வைத்தியர் சத்தியலிங்கம் சுவிஸ் விஜயத்தின் போது சம்பாசனைகளில் ஈடுபட்டிருக்கின்றார். அது பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டைத் தமிழ்க் கட்சிகள் முன்வைக்குமா என்கின்ற ஒரு கேள்வி இருக்கின்றது. ஆகவே, அது சம்பந்தமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இறுதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ அரச காலத்தில் அபாபோதைய குழுவுக்கு முன்வைத்த யோசனை ஒன்று இருக்கின்றது. அதுதான் நாங்கள் இறுதியாக ஓர் அரசுக்கு முன்வைத்த யோசனை. நாங்கள் அதனை மற்றவர்களுக்கும் காண்பிப்பது என்று தீர்மானித்திருக்கின்றோம். அவர்கள் அதில் இணங்கி வருவார்களாக இருந்தால் அதை ஒரு பொது நிலைப்பாடாக நாங்கள் அரசுக்குத் தெரிவிக்க முடியும் என்று தீர்மானித்திருக்கின்றோம்.

ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தமிழரசுக் கட்சி ஒரு கோரிக்கை விடுத்திருக்கின்றது. எப்படியான விடயங்களை நாம் கதைப்பது என இதற்கு முன்னர் நடந்த மத்திய செயற்குழுவிலே எடுத்த தீர்மானத்தின் அமைவாக தலைவரும் நானும் கையெழுத்திட்டு அரசியல் தீர்வு சம்பந்தமாக அவரோடு பேசுவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் இருவரையும் (தலைவர், செயலாளர்) சேர்த்து பத்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும், நேரம் ஒதுக்கித் தருமாறும் நாங்கள் அவரிடத்திலே கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்தக் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப் போகும்போது அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலே கலந்துகொள்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். ஆகவே, அவர் திரும்பி வந்த பிறகு ஒரு நினைவூட்டல் கடிதமும் நான் அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் ஜனாதிபதியிடத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எனினும் எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.

இதற்கு முன்னர் பல தடவைகளிலே பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்து செயற்படுகின்ற போது எங்களுக்கு அழைப்புகள் விடுப்பார்கள். நாங்கள் சில வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக இணைந்து பணியாற்றுகின்றோம். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சில வேலைத்திட்டங்களிலே எங்களோடு இணைந்து வருகின்றவர்களோடு சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், பொதுவாக ஓர் எதிர்க்கட்சிக் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பயணிக்கத் தயாராக இல்லை.” – என்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் சஜித்!

 

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புது டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, தொடர்புகள் மற்றும் பரஸ்பர முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரின் அர்ப்பணிப்புகள் குறித்து பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக, அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுமொரு முறை, மீண்டெழுந்து நிற்பதற்குத் தேவையான பயன்பெறும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா பெற்றுத் தந்தமைக்கு தலையீடு செய்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சியைத் திட்டமிடுவதற்காக இன்றைய காலத்தைப் பயன்படுத்துவது குறித்து பல கருத்துக்களை எஸ். ஜெய்சங்கர் இங்கு முன்வைத்தார்.

இலங்கைப் பொருளாதாரத்தில் கண்டு வரும் முன்னேற்றங்கள், தொடர்ச்சியாக நடந்து வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான திட்ட வரைபடம் குறித்து அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்தார்.

இதன்பிரகாரம், 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் போது, ஐ.எம்.எப். வேலைத்திட்டத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் சவால்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோடிட்டுக் காட்டினார்.

இதன் பொருட்டான பிராந்திய முதலீடு மற்றும் ஒத்துழைப்பால் ஆதரிக்கப்படும் ஒரு நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தின் அவசியப்பாடு தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு பல யோசனைகளை இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.

மேலும், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் கொள்ளவுத் திறனை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு, வலயமைப்பு தொடர்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்தார்.

சமுத்திர, விமான இணைப்புச் சேவைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள இரு நாடுகளிடையேயான மின்சார இணைப்புக் கட்டமைப்பின் இடைத் தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு மதிப்பாய்வு செய்தனர்.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும், கடல்சார் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பேணிச் செல்வதற்கு இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து, பிராந்திய பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் கண்டு வரும் இந்தியப் பெருங்கடல் சார் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கத்தில் இலங்கையின் வகிபாகம் குறித்தும் இவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

21 ஆம் திகதி கூட்டம்: ரணிலுக்கு எதிராக நாமல் போர்க்கொடி?

நுகேகொடை கூட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை ஸ்ரீங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ககூடாது எனவும், மாறாக அவர் பங்கேற்றால் தான் வரப்போவதில்லை எனவும் நாம ல் ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல் வெளியானது.

இதனையடுத்தே குறித்த கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அறிவிப்பு விடுத்தார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானகவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

“ அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ரணிலோ, மைத்திரியோ, நாமலோ எவரையும் பங்கேற்க வேண்டாம் என எவரும் கூறவில்லை. முதலாவது கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளை அழைப்பதில்லை என்ற முடிவை ஏற்பாட்டுக்குழுவே எடுத்தது.

இது முதல் பேரணிதான், இத்துடன் அது நின்றுவிடப்போவதில்லை. அது தொடரும். அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்களில் தலைவர்களை களமிறக்குவோம்.” – என்று குறிப்பிட்டார்.

2026 இல் விஜய்தான் முதல்வர்: த.வெ.க. பொதுக்கூட்டத்தில் சபதமேற்பு!

 

 

2026 ஆம் ஆண்டில் விஜய் தமிழக முதல்வராக சபதம் ஏற்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது.

இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து கட்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அண்ணை தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். என்ற உறுதிமொழியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி வாசிக்க, அனைவரும் எழுந்து நின்று ஏற்றனர்.

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் வரவேற்புரை ஆற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்,
“எண்ணற்ற சோதனைகளைத் தாண்டி வந்துள்ளோம், இன்று அரசியலின் மையப்புள்ளி விஜய்தான். கழகம் தொடங்கி 2 வருடம் 9 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால், நம் தலைவரின் உழைப்பு, அர்ப்பணிப்பு 30 ஆண்டுகளைத் தாண்டியது. இவை அனைத்துக்கும் அடித்தளம் ஒரு தனி நபர்தான்.

நம்முடைய எதிரிகள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லைவிஜயை யாரும் எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இவர் தாய்மார்களின் நம்பிக்கை, தமிழ் மண்ணின் நம்பிக்கை. நமது கட்சி சாதாரணக் கோட்டை கிடையாது. இது தொண்டர்களின் உழைப்பால் கட்டப்பட்டுளள இரும்புக்கோட்டை. ” என்று குறிப்பிட்டார்.

2026-ல் நம் தலைவர் முதல்வராக அமர்வதற்கு நாம் அனைவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக நாம் இருக்கிறோம். அதற்கான தொடக்கம்தான் இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர்.

கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை நாடாளுமன்றத்துக்கும், இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நாடாளுமன்ற ஒருமைப்பாட்டினது மதிப்புகளுக்காக இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகளை இச்சந்திப்புச் சுட்டிக்காட்டின.

வெள்ளவத்தை “கற்பகம்” காட்சியறையை மீள திறப்பு!

வெள்ளவத்தை “கற்பகம்” காட்சியறையானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பால் வெள்ளவத்தை பொஸ்வெல் பிளேஸில் செவ்வாய்க்கிழமை(04) நவீன வசதிகளுடன் மீள திறந்து வைக்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டு முதல் தலைநகர் கொழும்பு, வெள்ளவத்தையில் இயங்கி வந்த “கற்பகம்” பனை சார்ந்த உற்பத்திகள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையமானது கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் “கற்பகம்” வெள்ளவத்தை காட்சியறையை நவீன வசதிகளுடன் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்சியறையை திறந்து வைத்து உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்,

வடக்கு, கிழக்கு மக்களின் கற்பகத்தருவான பனையானது அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பல பொருட்களை அள்ளித் தருவதோடு கலாசாரம், பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் மிகவும் பின்னி பிணைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையிலும் கூட வடக்கு கிழக்கில் சமூக பொருளாதாரத்தில் பனை முக்கிய பங்கு வகித்தது.

வெள்ளவத்தையில் மீளத் திறக்கப்பட்டுள்ள இக் காட்சியறை மூலம் தலைநகரில் வாழும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகியோர் வடக்கு, கிழக்கு மக்களின் பனை சார்ந்த உற்பத்திகள், பனை அபிவிருத்தி சபையின் உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலகுவாக அமையும் எனவும் தெரிவித்தார்.

பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு “கற்பகம்” காட்சியறைகளை விஸ்தரிக்க தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், பனை சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்வதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

வீண் விரயங்களைக் குறைத்து வருமானங்களை அதிகரிக்க அர்ப்பணிப்புடன் தங்களது கடமைகளை மேற்கொள்ளுமாறும் ஊழியர்களிடம் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி: 60 இற்கு மேற்பட்டோர் பலி!

 

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 மேற்பட்டோர் பலியாகினர்.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2026 பட்ஜட்: மக்களுக்கு நிவாரணம்: வரி அதிகரிப்பு இல்லை!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2026 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த வரவு- செலவுத் திட்டம் எவ்வாறு அமையும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது நேற்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“ வரி அதிகரிப்பு இடம்பெறாது என்பதை ஜனாதிபதி அறிவித்துவிட்டார். இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். அது எவ்வாறு இடம்பெறும் என்பது பற்றி ஜனாதிபதி தமது உரையில் தெளிவுபடுத்துவார். உற்பத்தி பொருளாதாரம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

வாழ்த்துகிறோம்: ஆனால் 21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்கமாட்டோம்!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எனினும், எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அதேவேளை, குறித்த போராட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ட்ரம்ப் எதிர்ப்பாளர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி!

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த நகரத்திற்கு மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகக் கட்சி சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார்.
அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாக களம் இறங்கினார்.

அக்டோபர் 25 ஆம் திகதி வாக்கு பதிவு ஆரம்பமாகி நவம்பர் 4ஆம் திகதிவரை நடந்தது.

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது.

ஜோஹ்ரான் மம்தானி ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

ஈரான் வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள்...

ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு நடைபெறும் 36 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7...

ஹங்குராங்கெத்த ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு

0
நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இலங்கையில் முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட வரலாற்றுச்...