Home Blog Page 237

குளவிக் கொட்டு: ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு!

 

பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் 24.10.2025. வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களை தாக்கிய குளவி , இராணிகாடு தோட்ட பகுதியில் தெழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்களையும் தாக்கியுள்ளது.
இதில் 05 பெண் தொழிலாளர்களும் 01ஆண் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை பாதாளக் குழு எனக் கூறி நியாயப்படுத்தக்கூடாது!

 

“பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக் கூறி பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசு நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன்படி பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் அதேவேளை, மறுபுறம் பாதாள உலகக் குழுவினர் என அடையாளப்படுத்தப்படும் பலர் பொதுவெளியில் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இது பற்றிக் கருத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும் அதனைக் காரணமாகக் கூறி பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசு முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேண வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த வருடத்தில் இதுவரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இனிவரும் காலங்களில் இத்தகைய சட்டவிரோத படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விசாரணை!

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல் வாதிகளின் விபரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வெளிப்படுத்தப்படும். அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரால் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. அதன் அடிப்படையில் துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களை இயக்கியவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்துவார்.

அத்துடன், பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல் வாதிகள் தொடர்பான விவரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விரைவில் வெளியிடுவார்.” – எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸஸ குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்க!

பாதாள குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய வகையில் பாதுகாப்பு மீளாய்வை செய்து மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு,

” உள்ளுராட்சிசபை உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை தமக்குரிய மக்கள் சேவையை முன்னெடுக்கும்போது தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதாவது பாதாள குழுவானது சமூகத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

உரிய பாதுகாப்பு மீளாய்வின் பின்னர் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரச தரப்பில் கூறப்பட்டது. அந்த பாதுகாப்பு மீளாய்வு எப்போது நிறைவு பெறும்? வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை சுட்டுக்கொலை செய்தவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள்?

உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்றார் சஜித் பிரேமதாச.

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தாழ் அமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்குத் திசையில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது இன்று காலை 5.00 மணியளவில் மட்டக்களப்புக்கு வடகிழக்காக சுமார் 850 km தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது இன்றையளவில் மேலும் விருத்தியடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் மத்திய பகுதியுடன் இணைந்து காணப்படும். இந்த தாழ் அமுக்கம் மேலும் தீவிரமடைவதுடன் நாளையளவில் சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக மேலும் நாளை மறுதினமளவில் ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சூறாவளியாக வலுவடையும் பட்சத்தில் இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன் மொழியப்பட்ட “மொன்தா” எனும் பெயர் சூட்டப்படும்.

ஆனபடியால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

நம்பகரமான உள்ளக பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை!

மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்த, சர்வதேச பொறிமுறையை எதிர்ப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம், அரசாங்கம் முறைப்படி அறிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச பொறிமுறை சமூகங்களிடையே தேவையற்ற பிளவுகளை உருவாக்கும்.

சர்வதேச பொறிமுறைக்கு பதிலாக, மனித உரிமை மீறல் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்கான நம்பகமான உள்நாட்டு பொறிமுறையை நிறுவுவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த விவாதத்தின் போது, ​​ உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ​​அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்வதேச தலையீடு தொடர்பாக ஐ.நா அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்று சிறிலங்கா அரசு மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம் தெரிவித்துள்ளது.

நாங்கள் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்போம், ஆனால் மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கான ஒரு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயல்முறையிலேயே எங்கள் கவனம் இருக்கும்.

சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக உள்ளது, ஆனால் நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்களைக் கையாள ஒரு உள்நாட்டு பொறிமுறையில் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அனுர கருணாதிலக டில்லி பயணம்!

 

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்க ஒக்ரோபர் 27 முதல் 28 ஆம் திகதி வரை அவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வார் என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, மும்பை கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், துறைமுக உள்கட்டமைப்பு, தளபாடங்கள் மற்றும் நிலையான கடல்சார் வளர்ச்சியில் முன்னேற்றங்கள் குறித்து உலகளாவிய கடல்சார் தலைவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ​​துறைமுகங்கள் அபிவிருத்தி, கப்பல் போக்குவரத்து மற்றும் தளபாடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அமைச்சர் கருணாதிலக, இந்திய துறைமுகங்கள், கப்பல்துறை, நீர்வழிகள் அமைச்சர் சிறி சர்பானந்த சோனோவாலுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

இந்திய கடல்சார் வாரத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதுடன், கடல்சார் மற்றும் தொழில்துறை துறைகளைச் சேர்ந்த முன்னணி பிரமுகர்களையும் சந்திப்பார்.

அமைச்சரின் வருகையின் ஒரு பகுதியாக முக்கிய தள பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம், சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், துறைமுக நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதற்கும், கப்பல் போக்குவரத்து மற்றும் தளபாடங்களில் உலகளாவிய முதலீட்டை ஈர்ப்பதற்கும் ஒரு முக்கிய தளமாக செயற்படும் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரின் பங்கேற்பு, இலங்கைக்கும்இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான பொருளாதார கூட்டாண்மையையும், வர்த்தகம், தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது என்றும், இந்தியத் தூதரகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில்!

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club of Sri Lanka) தீர்மானித்துள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதம செயலாளர், வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் த மனேஜ்ட்மன்ட் க்ளப்பினருடன் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.10.2025) கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில் த மனேஜ்ட்மன்ட் க்ளப் வடக்குக்கான முதலீட்டாளர் மாநாட்டை ஒழுங்குபடுத்துகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், தொழில்துறை அமைச்சகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் இந்த மாநாட்டை முன்னெடுப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மாநாட்டுக்குத் தேவையான எமது வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் ஊடாக, எமது மாகாணத்தை மேம்படுத்த முடியும். உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு எமது மாகாணம் 4.2 சதவீதமே பங்களிப்புச் செய்கின்றது. அதனை ஆகக் குறைந்தது 10 சதவீதமாகவேனும் உயர்த்தவேண்டும். அதற்கு இவ்வாறான முதலீட்டாளர் மாநாடுகளும் அதன் ஊடாக எமது மாகாணத்தை நோக்கி முதலீட்டாளர்களும் வரவேண்டும்.

முதலீட்டாளர்கள் இங்கு வருகின்றபோது அவர்களுக்கான ஒத்துழைப்புக்களை அரசாங்க அதிகாரிகள் வழங்கவேண்டும். அதேநேரம், மக்களும் முதலீடுகளை எதிர்க்காமல் அந்த முதலீடுகள் ஊடாக எமக்குத் தேவையானவற்றை பேரம்பேசிப் பெற்றுக்கொள்ள வேண்டும், என்றார் ஆளுநர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் பங்கேற்றனர்.

செவ்வந்தியின் தொலைபேசி: நாமல் ராஜபக்ச கூறுவது என்ன?

“ செவ்வந்தியின் தொலைபேசியில் உங்களது பெயர் எவ்வாறு ‘சேவ்’ செய்யப்பட்டிருக்கும்.” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இன்று சிரித்தப்படியே பதிலளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

“ செவ்வந்தியின் தொலைபேசியை பரிசோதித்தவர்களிடம்தான் அது பற்றி கேட்க வேண்டும். செவ்வந்தியின் தொலைபேசியை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர்போல்தான் தெரிவிக்கின்றது.

அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது.” என்பதே மேற்படி கேள்விக்கு நாமல் வழங்கிய பதிலாகும்.

“மகே ராஜபக்ச (எனது ராஜபக்ச) என பெயரொன்று சேவ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதே…” எனவும் நாமலிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,

“ சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள்தான் கனவில்கூட வருகின்றனர்;. அந்த கட்சியிலும் (என்.பி.பி.) நாமல் ஒருவர் இருக்கின்றார், அது அவரா என்பதுகூட தெரியவில்லை. நாமல் என்ற பெயரை கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம். பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால்தான் எனது என எழுதி சேவ் செய்வார்கள்;. சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக்கூட இருக்கலாம். “ என்றார் நாமல் ராஜபக்ச.

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும்!

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் அரசியல் நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்தக் குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும், அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ஹட்டனில் மே 1 சித்தர் யாகம்!

0
ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஆஸ்ரமத்தின் குருநாதர் சுவாமி கணபதி அவர்களின் ஆசியுடன் எதிர்வரும் 01.05.2026 அன்று மாபெரும் சித்தர் யாகமும் அதனைத் தொடர்ந்து 02.05.2026 திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது. சுவாமி...

ஈரான் போருக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடர்பா? விசாரணை தீவிரம்!

0
ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக...

சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்! IPL 2026 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 37 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்...