நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
ஜெனிவா தீர்மானம் குறித்து சபையில் விவாதம் நடக்குமா?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, விரைவில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவதற்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் நாட்டிற்கு வருகை தருவதாலும், இரு நாடுகளுக்கும் இடையே பல இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாலும், இந்த விவாதத்திற்கு வேறு திகதியை நிர்ணயிக்கப்படும்.
வெளிவிவகார அமைச்சின் குழு நிலை விவாதத்தின் போது தொடர்புடைய விவாதத்திற்கான நேரத்தை இரண்டு மணி நேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இல்லையேல் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் கலந்துரையாடிய பின்னர் விவாதத்திற்கு வேறு திகதியை நிர்ணயிக்கலாம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரக் குழுவில் கலந்துரையாடி, திகதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கூறினார்.
இன்றும் மழை!
தாழ் அமுக்கப் பிரதேசமானது இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நிலைகொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது தாழ் அமுக்கமாக விருத்தியடைவதுடன் இன்று மாலையளவில் தமிழ் நாட்டின் வட கரை மற்றும் தென் ஆந்திரப் பிரதேசங்களின் ஊடாக நகர்ந்து செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இலங்கையின் வட கரையை அண்மித்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று நிலைகொண்டுள்ளதனால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு , காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
மொட்டு கட்சியின் வாக்கு வங்கி அதிகரிப்பாம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிச்சென்ற ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் கட்சி வலுவடைந்துவருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அவ்வாறு கூறினார்.
” தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியானது 3 சதவீதமாகவே இருந்தது. எனினும், அது 69 லட்சமாக அதிகரித்தது. அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குரிய 66 லட்சம் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு சென்றடைந்தது.
ஆனால் தற்போது ஆதரவாளர்கள் கட்சியை நோக்கி வருகின்றனர். கிராமிய மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பலமடைந்துவருகின்றது.
2029 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தற்போதே ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பை கட்சி விடுக்காது.” எனவும் ன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்: 28 ஆம் திகதி இறுதி முடிவு!
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதிப்படுத்தப்படும். ஒக்டோபர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலின்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் உள்ள தாமதம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களே நாங்கள். அதனை தக்கவைக்கும் எண்ணம் இல்லை. எனினும், சட்டமொன்றை இரத்து செய்யும்போது அதனை விஞ்ஞானப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அமுல்படுத்தவுள்ள புதிய சட்டவரைவை தயாரிப்பதற்குரிய குழு எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளது.
அன்றைய தினம் சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்த பின்பு பொதுமக்கள் கருத்துக்காக சமூகத்தில் ஒரு மாதத்துக்கு விடப்படும்.
ஒக்டோபர் 28 ஆம் திகதி குழு அறிக்கையை வழங்கினால், சட்டமூலம் தயார் என்ற அறிவிப்பை எம்மால் நவம்பர் முதல் வாரத்தில் விடுக்க முடியும். நாட்டின் பாதுகாப்பு கருதி, புதிய சட்டம்வரும்வரை இருக்கும் சட்டத்தை பயன்படுத்த நேரிடும்.” – என்றார் நீதி அமைச்சர்.
மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோமென என்.பி.பி. அஞ்சுகிறது!
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.
” உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 23 லட்சத்தால் குறைவடைந்தது.
மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் இந்நிலைமை மேலும் மோசமாகும். மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது. முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.” எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவதற்கு ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, சனே டகைச்சி புதிய அமைச்சரவையை உருவாக்க உள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணிக் கட்சிகள் இடம்பெறும் வகையில் அவரது அமைச்சரவை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி கடந்த மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 4-ம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது. சனே டகைச்சி 183 வாக்குகளும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
6 மாவட்டங்களில் அடை மழை: 8,346 பேர் பாதிப்பு: மூவர் பலி!
கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் ஆறு மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 2, 052 குடும்பங்களைச் சேர்ந்த 8,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (21) மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவால் 335 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
அதேவேளை, மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அவற்றை குறித்த காலத்தில் நிறைவு செய்ய முடியாமை காரணமாக பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாகியுள்ள சிக்கல்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் தொடர்பிலும் இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர்.
அவ்வாறு தாமதமான பட்டப்படிப்புகளின் தரத்தைப் பாதுகாத்து, அவற்றை விரைவில் நிறைவுசெய்யவும் இதுவரை முடிக்கப்படாத பணிகளை திறம்பட முடிக்கவும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திற்கு தெரிவித்ததுடன், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணிக்குழாமினர் ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தொடர்ந்து அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருடன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பீ.ஆர். வீரதுங்க, செயலாளர் சாருதத்த இளங்கசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.















