Home Blog Page 246

போதை ஒழிப்பு சமருக்கு கடற்றொழிலாளர்களுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்!

இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18.10.2025) நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட பிராந்திய கட்டளைத்தளபதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், எதிர்கால இலக்குகள் சம்பந்தமாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

துறைமுகங்களை நவீனமயக்காமல், நவீன மீன்பிடி முறை உள்ளிட்ட நடவடிக்கைகள்மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அரசியல் பலம் மூலம் காரியங்களை சாதித்தது அந்த காலம். எனவே, கடல் அட்டை பண்ணை நடவடிக்கை உட்பட கடற்றொழில் சார்ந்த நடவடிக்கைகளின்போது அனைத்து நடவடிக்கைகளும் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே இடம்பெறும். அரசியல் விளையாட்டு இங்கு எடுபடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார்.

அத்துடன், எமது கடற்றொழிலாளர்களை சில போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். அந்த மாபியாக்களின் வலைகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது.

சட்டவிரோத நடவடிக்கையென்பது எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கும். எனவே, போதைப்பொருள்களை முடிவுகட்டுவதற்குரிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு கடற்றொழிலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

கடல்மார்க்கமாகவே அதிகளவு போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, கடற்றொழிலாளர்களை அந்த கும்பல் இலகுவில் இலக்கு வைக்கலாம். இது பற்றி மீனவ அமைப்புகள் விளிப்பாக இருக்க வேண்டும். தமது தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தால் சட்டத்தன் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு அத்துமீறல்களே இடம்பெறுகின்றன. இப்பிரச்சினை முழுமையாக தீர்ப்பதற்குரிய இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேபோல கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பவற்றை வலுப்படுத்துமாறு நான் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

“தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம்”

ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

கடல் மார்க்கத்தில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். அனர்த்த காலங்களில் இலங்கை விமானப்படை ஆற்றிய பரந்தளவிளவிலான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

‘சுரகிமு லகபர’ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் நீல வானத்தைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் 03வது சமுத்திர படைப்பிரிவு, தாய்நாட்டைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொண்டுவரும் உயர்ந்த சேவை, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டும் வகையில், ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டன.

இலங்கை வான்வெளியைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் உறுப்பினர்களாக விமானப்படையில் இணைந்த 66வது, 67வது மற்றும் 68வது கெடெட் அதிகாரி பாடநெறியை பூர்த்தி செய்த அதிகாரிகளை விமானப் படை அதிகாரிகளாக நியமித்தல் மற்றும் 103வது இலக்க பறக்கும் கெடெட் அதிகாரி பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பறக்கும் அதிகாரி சின்னம் அணிவித்தல் என்பன முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.

பாடநெறியில் அதிவிசேடமான திறமைகளை வெளிப்படுத்திய கெடெட் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விசேட விருதுகள் வழங்கப்பட்டன.

பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

இன்று, 66 கெடெட் அதிகாரிகள் மிகவும் ஒழுக்கமான மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சிக்குப் பிறகு அதிகாரி பதவிக்கு பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த அதிகாரிகளின் வாழ்க்கையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். இலங்கை விமானப்படையில் இது மிகவும் அரிதான வாய்ப்பாகும். எனவே, உங்கள் பெற்றோர் உங்களைப் பற்றி முதலில் பெருமைப்படுவார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளை ஒரு மரியாதைக்குரிய, தொழில்முறை பணியில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கனவும் உள்ளது.

இன்று, உங்கள் பெற்றோரின் நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள். இலங்கைத் தாய்க்காக எங்கள் விமானப்படைக்கு மிகவும் துணிச்சலான, இளம், துடிப்பான குழுவை கொண்டு வருவதில் அவர்கள் செய்த பங்களிப்பிற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இன்று நீங்கள் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய மற்றும் மிகவும் தொழில்முறையுடன் கூடிய மற்றும் திறமையான இராணுவத்தில் இணைகிறீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் பொறுப்பு இந்த நற்பெயரையும் மரியாதையையும் தொடர்ந்து பாதுகாப்பது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு அதிகாரி செய்யும் எந்தவொரு தவறான செயலும் முழு விமானப்படையின் நற்பெயரையும் பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் இனி மேலும் ஒரு சாதாரண இளைஞன் அல்ல. நீங்கள் ஒரு இராணுவத்தின் நற்பெயர், மரியாதை மற்றும் மதிப்பை உங்கள் தோள்களில் சுமந்த ஒரு அதிகாரி. அந்த இராணுவத்தின் மரியாதை மற்றும் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், நமது தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பொறுப்பு உங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

நமது தாய்நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பு உங்களைச் சார்ந்தது என்பதை நாங்கள் அறிவோம். இது ஒரு தனித்துவமான மற்றும் ஈடுசெய்ய முடியாத பொறுப்பாகும். நமது தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உயர்ந்த பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் பிணைப்பும் எங்களுக்கு உள்ளது.

மேலும், நமது கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறீர்கள். இன்று நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்புகளில், நாடென்ற வகையில் நமது கடற்கரையின் எல்லைகளைக் கண்காணித்து அதன் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், நமது கடல் எல்லை ஊடாக குறிப்பாக சட்டவிரோத குடியேற்றவாசிகள், சட்டவிரோத பொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் அண்மைக்காலத்தில் ஆயுதங்கள் கூட நாட்டிற்குள் எடுத்துவரப்பட்டதை நாம் கண்டிருக்கிறோம். எனவே, கடல் எல்லையைப் பாதுகாப்பது என்பது தாய்நாட்டின் மற்றும் தாய்நாட்டில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையாகும். அந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்று எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

குறிப்பாக இன்று, போதைப்பொருள், அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் அந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல் மற்றும் அரச இயந்திரம் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அதன் ஆழத்தையும் அளவையும் நாம் அளவிட முடியும். இது வெறும் போதைப்பொருள் கடத்தல்களோ வெறும் குற்றச் செயல் மேற்கொள்ளும் கும்பல்களின் செயல்பாடுகளோ அல்ல. இது அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அரச இயந்திரத்தின் சில பகுதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதற்கு பங்களித்துள்ளன. அந்தப் பேரழிவு நமது கிராமங்களுக்கும் பரவி வருகிறது. எனவே, அந்தப் பேரழிவைத் தடுப்பதில் கடல்சார் கண்காணிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, அந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்தி, தாய்நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காகப் பணியாற்றும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், நமது நாட்டில் இடம்பெறும் திடீர் அனர்த்தங்களின் போது ஈடுசெய்ய முடியாத பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்மையில் எல்ல பகுதியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உங்கள் தலையீட்டை முழு நாடும் அவதானித்தது என்பதை நான் அறிவேன். உங்கள் பணி ஒரு முக்கியமான பணி என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் விமானம் மூலம் வழங்க வேண்டிய ஆதரவு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் மிகவும் திறமையாகச் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

மேலும், நமது நாட்டிற்குத் தேவையான விமானிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளை பயிற்றுவித்து தொடர்ந்து பேணும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று நீங்கள் நமது நாட்டின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாகவும்,பொறுப்புவாய்ந்தவர்களாகவும் முக்கியத்தும் பெறுகிறீர்கள்.

இன்று, இந்த நாட்டில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் தொழில்முறைமை அவசியம். இன்று, நம் நாட்டில் உள்ள பல தொழில்களின் தலைவிதி மிகவும் நம்பிக்கைக்குரியதாக இல்லை. அதன் பாதுகாப்பிற்காகவே தொழில்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அதன் பாதுகாப்பின்மைக்காக செயற்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கை
உள்ளது. பிரஜைகளின் வரிப் பணத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் மற்றும்
சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவர்களில், மக்களுக்கு எதிராக இந்தத் தொழிலை பயன்படுத்தும் ஒரு சிலரும் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இன்று, நம் நாட்டின் அரச இயந்திரத்தில் தொழில்முறை குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், நமது விமானப்படை அதன் தொழில்முறையை மிகவும் வலுவாகப் பாதுகாத்துள்ளது என்பதை பெருமையுடனும் பொறுப்புடனும் கூறலாம்.

எனவே, ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை மற்றும் திறமை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் கூடிய அரச சேவை எங்களுக்குத் தேவை. எனவே, உங்களிடம் மிகவும் தொழில்முறையான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உங்களிடம் மிக உயர்ந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்கள் சிரேஸ்ட அதிகாரிகள் உங்களைக் கண்காணிக்கிறார்கள். தொழில்முறை, மரியாதை மற்றும் புகழ் வழங்கப்பட்ட இந்த சேவையை நீங்கள் அதே வழியில் தொடருவீர்கள் என்று அவர்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த நாட்டின் பொதுமக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பொறுப்பை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறார்கள். இவை அனைத்தையும் போலவே, உங்களை நானும் ஜனாதிபதி என்ற வகையில் மிகுந்த நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் கண்காணிக்கிறேன்.

எங்கள் தாய்நாட்டையும் மக்களையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் பேரழிவிலிருந்து விடுவிக்க வேண்டும். அதில், ஒரு அரசியல் அதிகாரம் என்ற வகையில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நாங்கள் முறையாக நிறைவேற்றுவோம். விமானப்படை அதிகாரிகளாக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற வலுவான நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. எனவே, நீங்கள் பிரவேசித்துள்ள இந்த சந்தர்ப்பம் ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் தொழிற்துறை வாழ்க்கையிலும், உங்கள் எதிர்காலத்திலும் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். இந்த பெறுமதியான வாய்ப்பை நீங்கள் தவறவிடாமல் உங்கள் எதிர்காலம், தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனுக்காக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற வலுவான நம்பிக்கையுடன் உங்களை வாழ்த்துகிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படைப்பிரிவுகள் , கெடெட் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!

 

பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்​தானில் செயல்​படும் தெக்​ரிக் இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தான் அடைக்​கலம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டி வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தெக்​ரிக் இ தலி​பான்​களை குறிவைத்து கடந்த வாரம் ராணுவ தாக்குதல் நடத்தியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கனிஸ்தான், பதில் தாக்குதலை நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், 2 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள இரு தினங்களுக்கு முன்பு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கனின் பாக்டிகா மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உயிர்த்தியாகம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மாகாண தலைநகர் ஷரானாவில் ஒரு நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடன் மேலும் 5 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.

துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் தியாகத்துக்கு ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆப்கன் விளையாட்டு சமூகத்துக்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்துக்கும் இது ஒரு பெரிய இழப்பு.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் அணி விலகுகிறது.
தியாகிகளுக்கு அல்லா உயர்ந்த பதவிகளை வழங்குவாராக. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவன் ஆசீர்வதிப்பாராக” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத சம்பளமாக ரூ. 54 ஆயிரம் வேண்டும்!

எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 54 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழில் ஆணையாளரால் அழைக்கப்பட்ட சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் சமூக மளிக்காதது அவர்கள் தாங்களுக்காக உழைக்கின்ற தொழிலாளர் சமூகத்தின்மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.

தாங்களுக்காக உழைத்துக் கொடுக்கின்ற தொழிலாளர்களை மதிக்க முடியாவிட்டால் தோட்டங்களை தொழிலாளர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுவதுதான் பொருத்தமானதாகும். உற்பத்தி அடிப்படையிலான சம்பள உயர்வு என்பது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு புளித்துப் போன விடயமாகும். இது ஏற்றுக் கொள்ள முடியாதாகும்.

ஊட்டச்சத்து இல்லாத பழைய தேயிலை செடிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு உற்பத்திகளை அதிகரிக்க முடியும்? முதலாளிமார் சம்மேளனம் இலங்கையின் தேயிலைத் துறையை வெளிநாடுகளுடன் அடிக்கடி ஒப்பிட்டு காட்டுகிறது. பறிக்கப்படும் கொழுந்தின் அளவு ஒப்பிட்டு காட்டப்படுகிறது.

ஆனால் வெளிநாடுகளில் தேயிலை செடிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறன என்பதை முதலாளிமார் சம்மேளனம் சென்று பார்த்து விட்டு வர வேண்டும். அங்கு தேயிலை செடிகளுக்கு எவ்வாறு உரமிடப்படுகின்றன. எவ்வாறு ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன. பழைய தேயிலை செடிகளுக்கு பதிலாக மீள்நடுகைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன.

என்பதுடன் சேர்த்து விளைச்சல் அளவையும் நோக்க வேண்டும். முதலீடுகளை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்துக் காட்டிய பின். உற்பத்தி அடிப்படையான சம்பளம் பற்றி ஆலோசிக்க முடியும். தேயிலை செடிகளில் கொழுந்து வராவிட்டால் அதற்குத் தோட்ட தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும்?

முதலாளிமார் சம்பளம் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். எது எவ்வாறினும் தொழில் ஆணையாளர் கூட்டிய சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு புற முதுகை காட்டுவது முதலாளிமார் சம்மேளனத்தின் தன்னிச்சையான எவரையும் மதிக்காத தான்தோற்றி தனத்தை காட்டுகிறது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதேபோல கடந்த சம்பள நிர்ணய சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபாய் சம்பள உயர்வை கோரியது. அவ்வேளையில் 2138 ரூபாவுக்கு குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என வீராப்பு பேசிய தற்போதைய அரசாங்கத்தின் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் சம்பள நிர்ணய சபைக்கு வராமல் ஒளிந்து கொண்டது ஏன்? எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஏன்? அன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு அந்த நிலைப்பாடு.

இன்று முதலாளிமார் சம்மேளனத்திற்கு. வால் பிடிப்பதற்கு இந்த நிலைப்பாடு. கடந்த முறை நாம் முன்வைத்த 1700 ரூபாய் சம்பளத்துக்கு ஆளும் கட்சியின் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும். இன்று சம்பளத்துக்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றோம் என்று சொல்லுகின்ற தொழிற்சங்கங்களும் சாதகமாக வாக்களித்திருந்தால். அன்றே 1700 ரூபாவை பெற்றிருக்க முடியும். இவர்கள் அரசியல் தொழிற்சங்க நலன்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு தங்களுடைய மனசாட்சியை தொட்டு தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

எப்போதுமே தொழிலாளர்களின் நலன்களுக்காக செயற்பட்டு வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசை வசைப்பாடி வரும் இவர்களின் உண்மையான வேஷம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. எம்மை துரோகிகள் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொன்னவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது தோட்டத்து தொழிலாளர்களை கட்டிக் காத்தவர்களாக ஏன் மாறவில்லை.

வார்த்தை ஜாலங்களில் மூலம் எம்மை வசைபாட முடியும். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அவ்வளவு இலகுவானதல்ல. இந்த கடினமான பணியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்திருக்கிறது.

தோட்டத் தொழிலாளர்களுக்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருத்தமான சம்பளத் தொகை முன்வைக்கப்படுகின்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் லாபத்தையும் தொழிற்சங்க நலன்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு சம்பள உயர்வுக்காக இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது.

எனினும் கண்களில் தொகையை காட்டி விட்டு பெற்றுக் கொள்வதற்கு முடியாத அளவில் சம்பளம் முறை தீர்மானிக்க முற்பட்டால் அதை போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பகுதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கைதிக்கு போதைப்பொருள்: உடந்தையாக இருந்த ஜெயிலர் கைது! 

 

 

கைதி ஒருவருக்கு போதைப்பொருளை வழங்குவதற்கு பெண் ஒருவருக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கையடக்கத் தொலைபேசியையும் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதிக்கு போதைப்பொருட்களை கொடுக்க உடந்தையாக இருந்ததாகவும் அவருக்கு 35 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்கவில்லை: ஜனாதிபதியை நம்புகின்றோம்!

” சம்பள நிர்ணயசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தீபாவளி பரிசு கிடைக்கவில்லை.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

எனினும், நாம் பொறுமை காக்கின்றோம். ஜனாதிபதி தான் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் நேற்று நடந்தது என்ன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்காக மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.ஜீ.எப். குணவர்தனவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய வெள்ளிக்கிழமை (17) சம்பள நிர்ணய சபை கூடியது.

கொழும்பு, நாரஹேன்பிட்டவிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 2 மணிமுதல் சுமார் ஒரு மணித்தியாலம் இக்கூட்டம் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும் இதில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

கம்பனிகள் இவ்வாறு முதற்கட்ட கூட்டங்களை புறக்கணிப்பதும், உதாசீனப்படுத்துவதும் வழமையான விடயமாகும். ஆனால் கடந்த காலங்களில் இந்த பேச்சுவார்த்தைகளில் ஆர்வமாகப் பங்கேற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியும் தற்போதைய பதுளை மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான கிட்னண் செல்வராஜ் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவிய போது தான் பதுளையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அந்த வகையில் சம்பள நிர்ணய சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பெருந்தோட்ட தொழிற்சங்கங்களில் 8 தொழிற்சங்கங்களும், அரசாங்கத்தின் சார்பில் 3 நியமன உறுப்பினர்களும் தொழில் திணைக்களத்துக்கு வருகை தந்திருந்தனர். தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சி.முத்துக்குமார், விவசாய தோட்ட தொழிலாளர் காங்ரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமி மற்றும் பி.ஜி.சந்திரசேன உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளே இதில் பங்கேற்றவர்களாவர்.

சம்பள நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு இரு தரப்பிலும் ஆகக் குறைந்தது இரு பிரதிநிதிகளாவது பங்கேற்க வேண்டும் என்பதே கோரமாகும். எனினும் இம்முறை கம்பனிகள் சார்பில் ஒருவர் கூட பங்கேற்காததால் சட்ட ரீதியாக சபையை கூட்ட முடியாது என சம்பள நிர்ணய சபையின் தலைவர் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமியால் இதன் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தற்போதைய வாழ்க்கை செலவுக்கேற்ப 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கோரம் இன்மையால் குறித்த யோசனை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. அத்தோடு தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் சம்பள நிர்ணய சபையின் தலைவரும் எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டு, நவம்பர் 20 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை தொழில் அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுக்கமைய அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர்களால் தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கம்பனிகளுக்கு தேயிலை நிர்ணய சபை கூடவுள்ளதாக முன்னதாவவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு பிரதிநிதியைத் தவிர வேறு எவரும் தம்மால் பிரசன்னமாக முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. கம்பனிகளின் இந்த தன்னிச்சையான செயற்பாட்டுக்கு தொழில் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மறு திகதி அறிவிக்கப்படாமலேயே சம்பள நிர்ணய சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

(எம்.மனோசித்ரா)

 

அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்

 

உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது.

இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களின் பார்வைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்.

இந்த மெழுகு சிலை ராமாயண அருங்காட்சியகம், 9,850 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களை ராமாயணம் கதை நிகழ்ந்த திரேதா யுகத்துக்கே நேரடியாக அழைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தி மையமாகவும், முக்கிய சுற்றுலாத்தலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் புராணம், தொழில்நுட்பம் மற்றும் கலைத்திறனை இணைக்கும் தனித்துவமான அனுபத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ராமாயண மெழுகு அருங்காட்சியகத்தின் உள்ளே ராமர், சீதா, லட்சுமணர், பரதன், அனுமன், ராவணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் 50 உயிருள்ள மாதிரி மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன.

மாகாணசபைத் தேர்தல் வேண்டும்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து!

” தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும், இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபைத் தேத்தல் தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு நான் இணைந்து அண்மையில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தேன். மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக எந்த வகையான காரணமும் சொல்லி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வைக்க வேண்டும், இந்தக் கோரிக்கையை அனைத்து தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் இலங்கையினுடைய அனைத்து கட்சிகளோடும் இணைந்தும் தனித்தனியாக முன் வைக்க வேண்டும் என்ற இணக்கத்தோடு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது என்று என்று நான் நினைக்கிறேன்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இலங்கை மக்கள் அனைவருடைய கோரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நடத்தப்பட வேண்டிய தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது.

ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளுடைய தலைவர்களோடும் இலங்கையினுடைய பல்வேறு சமூகங்களின் உடைய அரசியல் சமூக பிரமுகர்களோடும் நான் நடத்தி வருகின்ற சந்திப்புகள் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதல்ல. தேர்தல் இன்று வந்தால்தான் எப்படி ஒரு கட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பிரச்சினையே வரும். அந்த விடயங்களுக்குள் நான் எந்தவிதமான அக்கறையும் செலுத்துவதற்கு இல்லை. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நடந்தால் யார் மாகாணத்தின் முதலமைச்சர் என்பது தெரியவரும்.

அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மாகாண ஆட்சிக்கான தேர்தலை அரசை நடத்த வைப்பது, எப்படி நாங்கள் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும், மாகாண ஆட்சிக்கான அதிகாரங்களை எப்படி முழுமையாக முறையாகவும் பெற்றுக்கொள்வது என்பது பற்றியதுமான கலந்துரையாடலாகவே அமைந்தது. அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கு பற்றி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுவேதான் உரையாடலாக இருந்திருக்கும் .அது தொடர்பாக கட்சி எவ்வாறு அவற்றை முகம் கொடுக்கும் என்பது இப்போதைக்கு மிகப் பிரதானமான விடயம் அல்ல. அதற்கு முதலில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அரசை மாகாண சபைத் தேர்தலை நடத்த வைக்க வேண்டும்.” – என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (18.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...