Home Blog Page 248

26ஆம் திகதி வடக்கில் மின்தடை

26ஆம் திகதி வடக்கில் மின்தடை

ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.

மின்கட்டமைப்பில் அவசியம் தேவையான மாற்றத்தைக் கொண்டுவரவே இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை யாழ். மாவட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

எனவே, இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் போரை முடிப்பதிலும் ட்ரம்ப் தீவிரம்: புடினை சந்திக்கவும் ஏற்பாடு!

FILE PHOTO: U.S. President Donald Trump and Russia's President Vladimir Putin talk during the family photo session at the APEC Summit in Danang, Vietnam November 11, 2017. REUTERS/Jorge Silva/File Photo - RC1287F1C9B0

 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான 2ஆம் சுற்று பேச்சு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை இரு நாடுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன.
எனினும், போர் நிறுத்த பேச்சுகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவருகின்றன.

இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன்-ரஷியா மோதலுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடத்தக்க தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இதனிடையே, ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டார். இந்த சூழலில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இன்று ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பின்போது உக்ரைனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷியா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று ரஷ்ய ஜனாதிபதி புதினை தொடர்பு கொண்டு டிரம்ப் பேசினார். அந்த உரையாடலின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், விரைவில் புதினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அலாஸ்காவில் இருவரும் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு: நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் ஏற்கனவே குற்றக் காட்சி விசாரணை பொலிஸாரின் (SOCO) காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலம் பகுப்பாய்வுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் அகழ்வாய்வுப் பணிகள் விசேட தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரால் நடத்தப்பட்டன.

ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில், எதிர்கால வைத்திய பகுப்பாய்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வோஷான் ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி 2025 நவம்பர் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க திகதி நிர்ணயித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.

தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட நான்காவது பெரிய மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (17.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

யார் இந்த ஜே.கே. பாய்? உள்ளாட்சி தேர்தலின்போதே செவ்வந்தி தப்பியோட்டம்: செவ்வந்தி ஒப்பரேஷன் பகுதி – 02

 

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பியோடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்த ஜே.கே. பாய் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சூத்திரதாரியென சந்தேகிக்கப்படுகின்றது. இவருக்கு நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

எனவே, இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழு உறுப்பினர்கள், வடக்கு கடல் பகுதி ஊடாக வெளிநாடுகளுக்கு படகில் தப்பிச்செல்வதற்குரிய ஏற்பாடுகளை இவரே செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அந்த கோணத்திலும் தற்போது விசாரணை இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாயில் உள்ள நபரொருவர் ஊடாகவே முதலில் ஜே.கே பாய்க்கு பொறி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரை பிடித்தால்தான் செவ்வந்தி பற்றிய தகவல்கள் தெரியவரும் என்பதை பொலிஸார் அறிந்திருந்தனர்.

இதற்கமைய ஜே.கே. பாய் கைது செய்யப்பட்டிருந்தாலும் செவ்வந்தியின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை ஆரம்பத்தில் அவர் பொலிஸாருக்கு வழங்கவில்லை. அப்போதுதான் இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்பொன்று பறந்துள்ளது.

இலங்கையிலுள்ள ஜே.கே. பாயின் குடும்ப விவரம் மற்றும் அவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி தொலைபேசியில் பாடமெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை செவிமடுத்து, நெடுநேரம் மௌனம் காத்த ஜே.கே பாய், இஷாராவை தான் ஒப்படைத்த முகவர் பற்றிய தகவலை வழங்கியுள்ளார்.

அந்த முகவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் ஊடாக நேபாளத்தில் செவ்வந்தி பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் பெறப்பட்டுள்ளது. பின்னர் ஜே.கே. பாய் ஊடாக அழைப்பு ஏற்படுத்தப்பட்டு, செலவுக்கு பணம் வந்துள்ளது, இந்த இடத்துக்கு வா என இடம்பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய செவ்வந்தி மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.

ஜே.கே. பாய் தற்போது சிஐடி விசாரணைப் பொறிக்குள் உள்ளார். எனவே, அவரின் ஆட்கடத்தல் வலையமைப்பு பற்றி தீவிரமாக ஆராயப்பட்டுவருகின்றது.

அதேவேளை, கொலைச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் 2 மாதங்கள்வரை செவ்வந்தி மத்துகம மற்றும் மித்தெனிய பகுதிகளில் தலைமறைவாகி இருந்துள்ளார். அதன்பின்னரே வெளிநாடு சென்றுள்ளார். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடந்த மே மாதம் காலப்பகுதியிலேயே அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டு பயணம்: மூவரடங்கிய குழுவை நியமித்தது ஐதேக!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரல, ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோரே இந்த மூவரடங்கிய குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் முகாமைத்துவக் குழு கடந்த வாரம் ஏகமனதாக அனுமதியளித்தது. இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக் குழுட்டத்திலும் இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய குறித்த யோசனைக்கு செயற்குழுவிலும் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 9ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கொழும்பில் கூடியது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய சகல உறுப்பினர்களது பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவதற்கு ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டது.

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது ஆபத்து!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால் இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு சுயாதீன மாகாணமாக உதயமாகிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் இலங்கை பெடரல் (சமஷ்டி) ராஜ்ஜமாகிவிடும். குறிப்பாக வடக்கு மாகாணசபை சுயாதீன சபையாக மாறும். அவர்களின் தேவைக்கேற்ப சட்டங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

இவ்வாறானதொரு நிலைமைக்கே பிரபாகரன் முயற்சித்தார். அதற்காக 30 வருடங்கள் போரிட்டார். போர் மூலம் அடைய முடியாமல்போனதை வேறு வழியில் அடைவதற்குரிய முயற்சியாகவே இது உள்ளது. எனவே, 13 ஐ அமுலாக்க கோரும் யோசனை சுயாதீன நாடான இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

வெளியக பொறிமுறையில் உள்ள அச்சுறுத்தலை நாம் உணரவேண்டும். அது எமது படையினருக்கு ஆபத்தாக அமையும்.” – என்றார் சரத் வீரசேகர.

2028 இல் காத்திருக்கும் சவால்கள் குறித்து சஜித் எச்சரிக்கை!

மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நாடு வங்குரோந்தடைந்தது. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூகமயப்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் ஏமாற்று பேச்சுக்களால் நாட்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு இன்று வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15) மாத்தளை நகரில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, முன்னாள் பாராளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார உள்ளிட்ட மாவட்ட மட்ட பல அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

” 2028 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளப் போகும் சவால்கள் தொடர்பில் நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில், ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலர் கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டி காணப்படுகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வேகப்படுத்த வேண்டும். தொழிற்துறை, விவசாயம், சுற்றுலா மற்றும் சேவைத்துறைகள் உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

2028 முதல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். பெற வேண்டிய வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெறப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் வளர்ச்சி வேகம் முன்னேற்றம் காணாதவிடத்து, எம்மால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

IMF ஒப்பந்தம் குறித்து முந்தைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய பொருளாதார ஆலோசகர்களின் கருத்துப்படி, இவ்வாறு போகும் போக்கில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறுகின்றனர். இன்று இவ்வாறு கூறும் இதே பொருளாதார ஆலோசகர்களே 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் வேண்டியிருந்த சமயத்தில், இல்லை 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்துகிறோம் எனக் கூறி முடிவை எடுத்தனர்.

எமது நாட்டின் பொருளாதார நிதியல் தொடர்பான பரந்த ஆய்வை மேற்கொண்டு, எமது நாட்டின் நிதியியல் இயலுமையைக் கருத்திற் கொண்டே 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்தது.

இந்த இணக்கத்தை மாற்றி, 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்த முடிவை எடுத்த பொருளாதார ஆலோசகர்களே இன்று இவ்வாறு வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் நாடும் நாட்டு மக்களுக்குமே பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கம் பயணித்தது போலவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி பதவியையும், 159 பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையையும் கொண்ட இந்த அரசாங்கம், முந்தைய அரசாங்கத்தின் அதே இணக்கப்பாட்டையே இன்னும் பின்பற்றி வருகின்றது. இதனை மாற்றியமைத்து, எமது நிதியியல் இயலுமைகளுக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ளுமாறே நாம் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறோம். எம்மால் மீண்டுமொரு வங்குரோத்து நிலையை சந்திக்க முடியாது. முகம் கொடுக்கவும் முடியாது. நேர்மையாகவே நாம் இந்த கருத்துக்களை முன்வைத்து வருகிறோம். அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். முந்தைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டாம் என்றே சொல்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்குரோத்தடைந்த நாடு எனும் நாமமே நாட்டுக்கு கிட்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நாமாகவே இணக்கம் தெரிவித்துள்ளோம். எனவே, வரும் மூன்று ஆண்டுகளில் நாம் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அந்நிய செலாவணி கையிருப்பைப் பேணி வர வேண்டும். என்றாலும், இந்த அரசாங்கம் ஏமாற்று மற்றும் பொய்களையே சொல்லி வருகின்றது. ஏமாற்று நடவடிக்கைகளால் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியாது. நடைமுறை ரீதியான பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் வேறு, நாட்டு விவகாரம் என்பது வேறு. நாட்டை கருத்திற் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான பேச்சுக்களை வைத்து அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்தால் அது தற்காலிகமானது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் பொன்சேகா!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணை நடைபெற்றால் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்ற போது அதனைக் குழப்பும் விதமாக அரசுடன் இணைந்து செயற்படும் விதமாக சரத் பொன்சேகாவின் கருத்துக்களும் இருந்து வருகின்றன.

இறுதி யுத்தத்தின் போது இராணுவம் தொடர்சியாக மக்களை அழிக்கின்ற நடவடிக்கைகளின் போது கடும் ஆட்லறித் தாக்குதல்களை மக்கள் மீது பயன்படுத்தி வந்த சுழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்குக் கண்காணிக்கப்பட்ட ஒரு பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு என்னுடன் தொடர்புகளை மேற்கொண்டார்கள்.

அவ்வகையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற முயற்சிகளை மேற்கொண்டேன். குறிப்பாக 2009ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் முதல் இரவு 8 மணி வரை இருபக்கத் தொடர்புகளை மேற்கொண்டு இணக்கப்பாடு எற்படுத்தப்பட்டது.

குறிப்பாக இரண்டு ஆயர்களான இராயப்பு யோசப் ஆண்டகை மற்றும் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் அரசு நேரடியாகத் தொடர்பு கொண்டு அரச தரப்பில் பஸில் ராஜபக்‌ஷவும் நானும் வன்னி கட்டுப்பாட்டுக்குக் சென்று அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் வெளியில் வந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஆனால், பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தபோதும் இராணுவம் ஆட்லறித் தாக்குதலைத் தொடர்ச்சியாக மேற்கொண்ட நிலையில் எதற்காக இதனைச் செய்கிறீர்கள் என்ற போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லை, அவர் நாடு திரும்பிய பின்னர் தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடியே முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. எனினும், அந்தக் கூட்டத்தில் முடிவுகளை எடுக்கப்படாது தொடர்சியாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதனை ஏன் தொடர்ந்தும் இதனை செய்கிறீர்கள் எனக் கேட்டபோது தேசிய பாதுகாப்புக் கூட்டம் கூடும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது எனக் கூறப்பட்டது.

மேலும் வெள்ளைக்கொடியுடன்தான் வர முடியும் எனக் கூறப்பட்டது. இது சாத்தியப்பாடு இல்லாத விடயம் என்பதால் எனது இணக்கப்பாட்டை நான் முடிவுறுத்திக் கொண்டேன்.

காரணம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் மூலம் மக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சரி வராத நிலையில்தான் என்னுடனான தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளைக்கொடி விவகாரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் காணப்பட்ட போதும் தொடர்ச்சியான ஆட்லறித் தாக்குதல் மேற்கொள்ளப்படுவது மக்களை இல்லாது ஒழிப்பதற்கான சூழலைத்தான் அரசு செய்தது என்பதே நான் கூறும் விடயம். இது இனப்படுகொலையின் விவகாரமாகும்.

ஆனால், சரத் பொன்சேகா தற்போது கூறி வரும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் நான் கூற முடியாது. வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களைக் கொலைசெய்தார்கள் என்பது கடந்த காலங்களில் வெளிவந்த உண்மைகள் என்பது அனைவருக்கும் புரிந்த விடயம் ஆகும்.

சரத் பொன்சேகா தற்போது கூறும் விடயம், வெள்ளைக்கொடி தொடர்பாகத் தான் சாட்சி வழங்கத் தயார் என்பதே. உள்ளக விசாரணைக்குள் வெள்ளைக்கொடி விவகாரம் முடக்கப்படுவதற்கான அத்திவாரம் போடுகின்ற கருத்தாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

சரத் பொன்சேகாவும் சர்வதேச குற்றவியல் விசாரணைதான் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.” – என்றார்.

போர்க்குற்றச்சாட்டு குறித்து விசாரணை வேண்டும்: சரத் பொன்சேகா வலியுறுத்து

 

இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை இணைத்துக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொன்சேகா,

” சாட்சி இருந்தால், முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், இடம், சம்பவம், திகதி என்பன தெரிந்திருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் போலி தகவல்களை கருத்திக்கொள்ள வேண்டியதல்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் தமிழ் அரசியல் வாதிகளால் போலி கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இராணுவமும் தவறிழைத்தது என சிலர் துள்ளிக் குதிக்கின்றன. இப்படியான கருத்துகள் பற்றி விசாரிக்க முடியாது அல்லவா? விசாரணை நடத்துவதாக இருந்தால் ஏதேனும் மூலம் அவசியம்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

‘விசாரணை நடத்தப்பட்டாலும் அது தேசிய விசாரணையாகவே இருக்க வேண்டும். எனினும், வெளிநாட்டில் இருந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வைத்திருப்பது நல்லது. அப்போது வெளிப்படைத்தன்மை இருக்கும். ” – எனவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...