Home Blog Page 31

மரக்கறி விலைப்பட்டியல் (11.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்கப் படையினரிடம் ஒப்படைத்த நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் குடும்பங்களின் உறவினர்களுக்கு இன்னும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது என்பது இன்னும் வெகுதூரத்தில் உள்ளது என்பதைக் கோடிட்டுக்காட்டும் இத்தகவல்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்காக 2017ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவடைந்த நாளில், முல்லைத்தீவில் வீதியில் இறங்கி, தனது தந்தைக்கு நீதி கோரிப் போராடும் யுவதி ஒருவரினால் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை சர்வதேச மகளிர் தினத்தன்று வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பங்கேற்புடன், தமிழ்த் தாய்மார்கள் தமது அன்புக்குரியவர்களைப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த வட்டுவாகல் பாலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டப் பேரணியில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினரான சதுர்ஜனா, தனது தாயாரால் அரசாங்கப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது தந்தைக்கு மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அண்மையிலும் ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“2009 யுத்தத்தின் போது அம்மா அப்பாவை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக அம்மா சொன்னார். அதற்குப் பிறகு எமக்கு எதுவுமே தெரியாது. இத்தனை வருடங்களாக அப்பா எங்கே என்ற கேள்விக்கு பதிலே இல்லை. அண்மையிலும் அப்பாவுக்கு மரணச் சான்றிதழ் எடுக்குமாறு ஒரு கடிதம் வந்தது. எமக்குச் சரியான முடிவொன்று இல்லாமல் நாம் ஏன் மரணச் சான்றிதழை எடுக்க வேண்டும்? எமது அம்மா அப்பாவை இராணுவத்திடம் ஒப்படைத்தார். இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை. இவ்வளவு காலமாகப் பதில் வழங்காத அரசாங்கத்திற்கு நாம் ஏன் அப்பாவுக்கு மரணச் சான்றிதழ் எடுக்க வேண்டும்? நாம் அதனை எடுக்கமாட்டோம். எமது அப்பா எங்கே என்று சொல்லும் வரை நாங்கள் அதை எடுக்க மாட்டோம்.”

வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது நெருங்கிய உறவினர்களுக்குத் தற்போதைய ஆட்சியின் கீழாவது நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையிழந்திருக்கும் நிலையில் தனது தந்தைக்கு நீதி கோரிப் போராடும் சதுர்ஜனா ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேலும் கூறுகையில், வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவினர்களின் கதி வெளிப்படுத்தப்படும் வரை அடுத்த தலைமுறையும் கூட அவர்களுக்காக நீதி கோரும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

“இப்போது அனுர வந்து புதிய புதிய சட்டங்களைப் போட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். நான் ஒவ்வொரு வருடமும் ஒரேயொரு கேள்வியைக் கேட்கிறேன், எங்கள் அப்பா எங்கே? இவ்வளவு காலமாக எங்கள் அப்பா வருவார் என்று அம்மா எதிர்பார்ப்புடன் இருக்கிறார். நாங்களும் அந்த எதிர்பார்ப்பிலேயே இருக்கிறோம். எங்கள் அப்பா இல்லையென்றால் அதுவும் பரவாயில்லை. நீங்கள் ஏதோ ஒன்று செய்திருக்கிறீர்கள்…

நாட்டின் நிலைமை… அவையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் சிறிய பிள்ளைகளாக இருந்தோம், எமக்கு எதுவும் புரியவில்லை. நாங்கள் பலவற்றைத் தாண்டி வந்துவிட்டோம். இனிமேல் எங்களுக்கு ஒரேயொரு கேள்விக்கு மாத்திரம் பதில் வேண்டும். எங்கள் அப்பா எங்கே? எங்களுக்கு எங்கள் அப்பா வேண்டும். அவர் இல்லையென்றால் அதற்குப் பதில் வேண்டும். அவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்குக் பதில் வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உயிரோடு இருக்கும் வரை, இங்கே என் தங்கை இருக்கிறாள். அடுத்த தலைமுறை வரை இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருப்போம். இனிமேல் வரும் தலைமுறை வரை இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருப்போம். எங்களுக்கு ஒரு பதில் கிடைக்கும் வரை நாங்கள் இங்கிருந்து போகமாட்டோம்.”

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு யுத்தம் இரத்தக் கறைகளுடன் முடிவுக்கு வந்த நாள் முதல் காணாமலாக்கப்பட்ட தம் கணவன்மார்கள், புதல்விகள், புதல்வர்கள், சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்களைத் தேடி 2017ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களை ஆரம்பித்த தமிழ்ப் பெற்றோர்களில் குறைந்தது 400 பேராவது இதுவரை நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமலாக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களுக்காக நீதி கோரும் தொடர் போராட்டத்தின் 9 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ்த் தாய்மார்கள் தமது அன்புக்குரியவர்களைப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த வட்டுவாகல் பாலத்தின் ஊடாக முன்னெடுத்த போராட்டப் பேரணியில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களுக்கு ஒருவரைக் கூடக் கண்டுபிடித்துக் கொடுக்கத் தவறிய, 2018 பெப்ரவரி 28 அன்று நிறுவப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) மீது பாதிப்புக்குள்ளானவர்களில் எவருக்குமே நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்டார்.

“அவர்கள் OMP என்று ஒன்றை கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தவர்களிடம் எங்கள் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் விடயங்களைத் தெளிவுபடுத்தியது. மிகவும் தெளிவான சாட்சியங்களுடன் ஐந்து நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின்னர் நாங்கள் வழங்கிய அந்த ஆவணங்களைக் கூட அவர்கள் காணாமலாக்கியிருந்தார்கள். அதன் பின்னர் நாம் அவர்களை எவ்வாறு நம்புவது என்ற உணர்வுதான் எங்களுக்கு ஏற்பட்டது.”

இம்முறை சர்வதேச மகளிர் தினம் வடக்கு கிழக்கு பெண்களுக்குத் தமது உறவினர்களைத் தேடும் ஒரு துக்க தினமாகும் என்பதை நினைவூட்டிய சுப்பிரமணியம் பரமானந்தம், நீதிக்காக அவர்கள் சர்வதேசத் தலையீட்டையே எதிர்பார்ப்பதாக ஊடகவியலாளர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

“அன்று முதல் இன்று வரை நாம் சர்வதேசத்தையே நம்புகிறோம். சர்வதேசம் எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். நாம் சர்வதேச சமூகத்திடம் கோருகிறோம், சர்வதேச அமைப்புகளிடம் கோருகிறோம். எங்களைக் கண் கொண்டு பாருங்கள். எமக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையைப் பாருங்கள். எனவே சர்வதேசம் எங்களைப் பார்த்து எங்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாருங்கள். இன்று சர்வதேச மகளிர் தினமாக இருந்தாலும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு இன்றைய தினம் தமது உறவினர்களைத் தேடும் ஒரு துக்க தினமாகும்.”

நீதி கோரி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தற்போது நாட்டில் நடைமுறையிலுன்ன பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் (PTA) பயன்படுத்திய அரசாங்கம், இப்போது அதற்காக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) என்ற சட்டத்தைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் தமிழ் மக்கள் அது குறித்து மிகவும் அவதானிப்புடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டுமென, போராட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“இலங்கை அரசாங்கம் எமது உறவினர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்குப் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. இன்று வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அமுலில் உள்ளது.

அந்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் கைதுகளை மேற்கொண்டு எமது போராட்டத்தை ஒடுக்கும் அரசாங்கம், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டம் என்ற புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகின்றது. எனவே எமது போராட்டங்களை ஒடுக்கி, எமது உறவினர்களைத் தேட இடமளிக்காமல், இந்நாட்டிற்குள் தனது ஆட்சியைப் பலவந்தமாக முன்னெடுப்பதற்காக இந்த அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றது.”

தற்போது நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைத் மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 29,069 கையொப்பங்கள் இடப்பட்ட ஆவணம் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைப்பதற்காக பெப்ரவரி மாத இறுதியில் தமிழ் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணம் தபால் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.

இனப்படுகொலையின் நினைவுச் சின்னத்தைப் போன்ற வட்டுவாகல் பாலத்தைக் கூட அபிவிருத்தி என்ற போர்வையில் அழிப்பதற்கும், தமிழ் இனப்படுகொலையின் அடையாளமே இல்லாமல் துடைத்தெறிவதற்கும் அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிவானந்தன் ஜெனிற்றா இதன்போது அரசாங்கத்தின் மீது மேலும் குற்றம் சாட்டினார்.

உலகத் தரம் வாய்ந்த நடிகர்கள்

தற்போது மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரின் தரப்பினர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இனப்படுகொலையின் பங்காளர்கள் என்பதைப் போராட்டத்தில் கலந்துகொண்டு நினைவூட்டிய வன்னி மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு கிழக்கில் சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு அழிவை ஏற்படுத்துவதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மத்திய கிழக்கு போர் நிலைமை குறித்துக் கவலையடைந்து உலகத் தரம் வாய்ந்த நடிகர்களைப் போல நடிப்பது வேதனைக்குரியது எனத் தெரிவித்தார்.

“அண்மையில் ஒரு யுத்தம் நடந்தது. இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. அது தெரியும். அந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லோரும். எங்களுக்கு அழிவை தேடித்தந்தவர்கள்தான். அது ஒரு பக்கம். ஆனால் மனிதாபிமானம் என்ற வகையில் சிறுவர்கள், சிறுவர்கள், பெண்கள் பாதிப்புக்குள்ளாக்கக்கூடாது. துன்புறுத்தக்கூடாது, அவர்களை அழிக்கக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழர்களிடம் மனிதாபிமானம் நிறையவே இருக்கிறது.

ஆனால் எங்கள் நிலத்தில் குண்டு போட்டு எங்களை அழித்த மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச கோஷ்டி சிறுவர்கள், சிறுவர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு அந்நிய நாடுகளைப்பற்றி கதைக்கிறார்கள். நாங்கள் பக்கதில்தானே இருந்தோம்? இப்படி எங்களை அழிக்கும்போது உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. இப்போது நீங்கள் உலக மகா நடிகர்களாக நடிப்புத்திறனை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதுதான் வேதனையாக இருக்கிறது.”

தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கி மிக விரைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது தற்போதைய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

“இந்த அரசாங்கமாவது வந்தவுடன் ஒரு மாறுதலாக எங்களுக்கு அதை செய்யும் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நாங்கள் கதைத்து விட்டோம். கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இவர்களும் அதற்கான முடிவுகளை தரவில்லை. முடிவுகளை விரைவில் தந்து இந்த மக்களுக்கு இதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு. உங்களது இலங்கை அரசாங்கத்தின் எல்லைப் பரப்புகளில் நாங்கள் பூர்வீக தமிழர்கள்.

அப்போது எங்களை தவிர்த்து இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் தான் என்று சொல்ல முடியாது. சிங்களவர், தமிழர், முஸ்லிம் எல்லா மக்களுக்கும் உரியது இந்த நாடு என்றால் நாங்கள் உங்களுடைய பிரஜைகள். எங்களுக்கான நீதி நியாயத்தை நீங்கள் வழங்கத்தான் வேண்டும். அதை தாமதிக்காமல் வழங்கி கூடிய விரைவில் இந்த உறவுகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

யுத்தம் முடிவடைந்தபோது அரச இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் போன மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தம் உறவினர்களுக்கு நாட்டுக்குள் நீதி கிடைக்கவில்லை எனக் குற்றம் சுமத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், சுமார் பதினேழு வருடங்களாக நீதிக்கான சர்வதேசத் தலையீட்டையே ஒருமித்த குரலில் கோரி வருகிறது.

மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: சஜித் அணி தகவல்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது.

அவ்வேளையில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த கெஹலியவை ஆதரிப்பது தவறு, மனசாட்சியின் பிரகாரம் மொட்டு கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என ஜே.வி.பி. கோரி இருந்தது.

எனவே, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் குமார ஜயகொடி விடயத்திலும் ஜே.வி.பியினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்.

நாம் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவோம். எம்.பிக்களின் கையொப்பம் திரட்டிய பின்னர் அது சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.” – என்றார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ
நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 3,990 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் எடையுள்ள சிறிய சிலிண்டர்களின் விலைகளும் முறையே 120 ரூபா மற்றும் 56 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளன.

12.5 kg by Rs.300 to Rs. 3,990,
5kg by Rs.120 to Rs.1,602,
2.3 kg by Rs.56 to Rs.750

பதுளை மாவட்டச் செயலாளராக சுனில் கலகம பதவியேற்பு

 

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான சுனில் கலகம அவர்கள், அனைத்து மதச் சடங்குகளிலும் கலந்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இன்று (10) பிற்பகல் பதுளை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் பதுளை மாவட்டச் செயலாளர் / மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

2000 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த அவர், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவி பணிப்பாளராக தனது அரசுப் பணியை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் சட்டமும் ஒழுங்கும் அமைச்சில் உதவி செயலாளராகவும், குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தில் பிரதி கட்டுப்பாட்டாளராகவும், அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பிரதி தூதராகவும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் ஆலோசகராகவும், கொழும்பு மேலதிக மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தில் மூத்த உதவி செயலாளராகவும், கொழும்பு மாநகர சபையில் நகரச் செயலாளராகவும், தெஹிவளை–கல்கிசை மாநகர சபையில் நகர ஆணையாளராகவும், அரசுத் தொழில் நிறுவனத் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பசளை வள தொடர்பான இராஜாங்க அமைச்சில் நிர்வாக செயலாளராகவும், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சில் மேலதிக அபிவிருத்தி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பதுளை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்கும் முன்பு, அவர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் மேலதிக செயலாளராகவும் (அபிவிருத்தி) பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– நடராஜா மலர்வேந்தன்
பசறை நிருபர்

‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’

 

“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஈரான் பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஈரானில் மக்களால் நடத்தப்பட்ட லயன் மற்றும் சூரிய புரட்சி ஆகியவை வீரத்தின் உச்சபட்ச பாராட்டுக்குரியது.

அப்போது தெருவில் சுடப்பட்டு காயமடைந்த ஒருவரை தீயணைப்பு வீரர் தூக்கிச் சென்றார். ஆனால், அவரையும் அவர்கள் கொன்றனர். அது எனக்கு மறக்க முடியாதது.

ஈரான் புரட்சிகரப் படைகளை அழித்து இஸ்லாமியக் குடியரசின் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதற்கான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீர்மானத்திற்கு ஈரானிய மக்களின் பரந்த ஆதரவு உள்ளது. தற்போதைய ஆட்சி ஈரானியர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். பொதுமக்களின் பாதுகாப்பும், ஈரானின் தேசிய உள்கட்டமைப்பின் பாதுகாப்பும் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்றார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மதகுரு அமைப்பான ஈரானின் நிபுணர்கள் சபை, ஞாயிற்றுக்கிழமை மறைந்த தலைவர் அயத்துல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியை (56வயது) அந்தப் பதவிக்கு நியமிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் இந்தப் பேட்டியை அளித்துள்ளார்.

தனது தந்தையை விட கடுமையான போக்கைக் கொண்டவர் என்று கூறப்படும் அயத்துல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி காமேனி, 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானின் மூன்றாவது உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழக அகதிகள் நாடு திரும்புவதற்கு விசேட உதவி!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகப் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார்.

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இவ்விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பில், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஐ.ஓ.எம். நிறுவனத்தால் வழங்கப்படவுள்ள உதவிகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்து விவரிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலும் ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் தமது தாய்நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆளுநர் இதன்போது விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த ஐ.ஓ.எம். பிரதிநிதிகள், யு.என்.டி.பி. நிறுவனத்துடன் இணைந்து அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘லன்ரேன்’ செயற்றிட்டம் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். அத்துடன், அப்புதிய செயற்றிட்டத்தின் ஊடாக, இவ்வாறு நாடு திரும்பும் ஏதிலிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

இவ்விசேட சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

“மத்திய கிழக்கின் போர் நிலைமை குறித்த இலங்கையின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது”

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார்.

இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, அந்த ஆதரவை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கின் போர் நிலைமை குறித்து இலங்கையின் நிலைப்பாட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் (அரசியல்) Justine Boillat இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டணமின்றி வீசா நீடிப்பு!

மத்திய கிழக்கு ஊடாக மேற்கொள்கின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது.

இதன்போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் அப்பிராந்தியத்திற்கு 2026.02.28 தொடக்கம் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதனால் இலங்கையில் இருந்து வெளியேறிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டவர்கள் தமது வீசா காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ளது.

இவ்விசேட நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான பயணிகளுக்கு மாற்று வழிப்பயணங்களை தயார் செய்வதற்கு இயலுமை கிடைக்கும் வரைக்கும் இலங்கையில் சட்டபூர்வமாகத் தங்கியிருப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கமைய 2026.02.28 ஆம் திகதி தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படவிருந்த விமானப் பயணங்களை இரத்துச் செய்தமையால், எமது நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ள வெளிநாட்டவர்களுக்கு 14 நாட்கள் காலப்பகுதிக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறான விமான பயணங்கள் இரத்துச் செய்யப்படல் நிலைமை நீடித்தால் அவர்களது வீசாவை நீடிப்பதற்கான காலத்தை மேலும் 14 நாட்கள் வரை கட்டணமின்றி நீடிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றார்.

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இடைக்கால பஸ் கட்டண மறுசீரமைப்பிற்கு இந்த எரிபொருள் விலைத்திருத்தம் பொருந்தாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இடைக்கால பஸ் கட்டண மறுசீரமைப்பிற்கு உரிய வீதத்தை விட குறைந்த அளவிலேயே டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டீசல் விலை அதிகரிப்பிற்கு இணையாக பாடசாலை பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பாடசாலை பஸ் உரிமையாளர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

பல தடவைகள் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதும் கட்டணத்திருத்தங்களை மேற்கொள்ளாதிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி தெரிவித்தார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...