Home Blog Page 30

வடக்கில் ஆசிரியர் இடமாற்றத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்துக! – தவறும் அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை என்றும் ஆளுநர் உத்தரவு

வடக்கு மாகாணத்தில் ‘சேவையின் தேவை கருதி’ ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே, வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திட்டங்களை முன்னெடுப்பதில் நிலவும் சவால்களை இனங்கண்டு, அவற்றை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன் பின்னர் விசேட கருத்துகளைத் தெரிவித்த ஆளுநர்,

“வழங்கப்பட்ட எந்தவொரு இடமாற்றமும் மேன்முறையீடு காரணமாக நிறுத்தப்பட்டால், அந்த வெற்றிடத்துக்குப் பதிலாக உடனடியாக மாற்று இடமாற்றமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். நடப்பாண்டுக்கான இடமாற்றங்களை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.” – என்று தெரிவித்தார்.

பாடசாலைகளில் இடம்பெறும் சட்டவிரோதப் பண அறவீடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்ட ஆளுநர்,

“இலவசக் கல்வி நடைமுறையில் உள்ளபோதிலும், பாடசாலைகளில் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களிடம் பணம் அறவிடும் செயற்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது தொடர்பில் எனக்கு தினமும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. சில பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், குறிப்பிட்ட சில பெற்றோர்கள் ஊடாகப் பணத்தை அறவிடும் செயற்பாட்டை முன்னெடுத்துவிட்டு, அதற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என நழுவப் பார்க்கின்றனர். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்குத் திடீர் களப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கு, இருப்பில் பதிவு செய்யப்படாமல் அன்பளிப்புகள் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதிபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இவ்விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரமே இச்சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.” – என்று வலியுறுத்தினார்.

மாகாண மட்டப் பண்பாட்டுப் பெருவிழாவை இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்யும் வகையில், பிரதேச மற்றும் மாவட்ட மட்டப் பண்பாட்டுப் பெருவிழாக்களை முன்கூட்டியே நடத்தி முடிப்பதற்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், எதிர்வரும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, ‘வர்ண இரவு’ விருதுகளுக்கான பரிசுத் தொகைகள் தொடர்பில் அனைத்துத் தரப்பினருடனான விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளரைக் கேட்டுக்கொண்டார்.

சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான விசாரணைகளைக் காரணம் காட்டி அவர்களின் ஓய்வூதியம் இழுத்தடிக்கப்படுவது தொடர்பிலும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும், எவ்விதத் தவறுகளும் இழைக்காதவர்கள் தமக்குரிய காலத்தில் எவ்விதத் தாமதங்களுமின்றித் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.” – என்றும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உலகச் சந்தையைக் காரணம் காட்டி மக்களை முட்டாளாக்க வேண்டாம்!

அரசிடம் 7 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து நாட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, கொவிட் காலத்தில் எரிபொருள் வரிகளைக் குறைக்கக் கோரினார். ஆனால் இன்று 92 வகை பெற்றோலுக்கு 117 ரூபாயும், டீசலுக்கு 100 ரூபாயும் வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்த வரியையாவது நீக்கி மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை.” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என்று சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தானில் 26 சதவீதமும் வியட்நாமில் 19 சதவீதமுமே விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகளை முன்வைத்தார். உலகச் சந்தையைக் காரணம் காட்டி மக்களைத் தொடர்ந்து முட்டாளாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“சிங்கள – தமிழ் புத்தாண்டு நெருங்கும் வேளையில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் கடும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு நிலவியபோதும், மருந்தும் உணவும் தடையின்றி வழங்கப்பட்டன. ஆனால், இன்று போதிய கையிருப்பு இருப்பதாகக் கூறும் அரசாங்கம், மக்களை ஒருவேளை உணவிற்கே வழியில்லாத நிலைக்குத் தள்ளியுள்ளது” என்றும் அவர் சாடினார்.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவே விலை உயர்த்தப்பட்டதாக அரசு கூறுவது வேடிக்கையானது என்று தெரிவித்த அவர், பொய்களைக் கூறுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு உண்மையான நிவாரணத்தை வழங்குமாறு அரசை வலியுறுத்தினார்.

“மத்திய கிழக்கு போர்ச் சூழலால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெல்ல ஒன்றிணைவோம்”

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி, நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் ஒரு தேசமாக நாம் இழந்த பொருளாதார வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் குறிப்பிட்டார்.

இதற்காக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும், அதில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு , தரவு மையங்கள் போன்ற பொருளாதார வாய்ப்புகள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிட்டல் மயமாக்கலுக்காக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை எப்படியாவது வெளியிட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் (COYLE) 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ‘தலைமுறை தலைமுறையாக வலுவான நாளையை உருவாக்கும் இன்று’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது.

எந்தவொரு பொருளாதாரமும் அதன் மீதான நம்பிக்கையிலேயே முன்னேறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வர்த்தகர்கள், நிதித் துறையில் பணியாற்றுவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பொருளாதாரம் குறித்த நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும், அவநம்பிக்கை எப்போதும் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் என்றும் தெரிவித்தார்.

இன்று ஒரு தேசமாக நமக்குத் தேவைப்படுவது அசைக்க முடியாத, அதேநேரம் வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய ஒரு பொருளாதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தையே நாம் தற்போது கட்டியெழுப்பி வருகிறோம் என்றார்.

உள்ளக அதிர்வுகளை நாம் வெற்றிகொண்டாலும், தற்போது மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஒரு வெளிப்புற அதிர்வு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 42% அதிகரித்துள்ளதால் உலகச் சந்தையில் கடும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

இது உள்நாட்டு நுகர்வோர் மத்தியிலும் நம்பிக்கையற்ற தன்மையை காணக் கூடியதாக இருந்தது. மார்ச் 1ஆம் திகதி 4500 கிலோ லீட்டராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதி 10,500 கிலோ லீட்டராக அதிகரித்துள்ளது.

2022 இல் டொலர் தட்டுப்பாட்டினால் நெருக்கடி ஏற்பட்ட போதும் இம்முறை ஏற்பட்டிருப்பது விநியோகப் பாதைகள் முடங்கியதால் வந்த விநியோக நெருக்கடியாகும். இதனைத் தனித்தனியாக அல்லாமல் அனைவரும் கூட்டாக நின்று எதிர்கொண்டு வெல்ல முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் ‘பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை’ அமைத்துள்ளதுடன், விநியோகத்தைத் தடையின்றிப் பேண நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோர் தலைமைத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபை , நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காளராக ஆற்றி வரும் பணியை ஜனாதிபதி பாராட்டினார். அதன் புதிய தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் புதிய தலைவர் சுரேன் சந்திரரத்ன, முன்னாள் தலைவர் மஞ்சுள விஜேசுந்தர மற்றும் சிரேஷ்ட உப தலைவர் டேன் டி சில்வா ஆகியோரும் இதன்போது உரையாற்றினர். புதிய தொழில்முனைவோர்களுக்கு ஒரு புதிய நாளையை உருவாக்குவதே தனது எதிர்பார்ப்பு என புதிய தலைவர் சுரேன் சந்திரரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்:

இந்த இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபைக்கும் எனக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. அன்று எமது கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து என்னிடம் பல கேள்விகளை முன்வைத்தீர்கள். நாம் ஆட்சிக்கு வந்து இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

அன்று உங்களுக்கு இருந்த கேள்விகள் இப்போதும் இருக்கிறதா? எமது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், அது இன்று நீங்கியிருக்கும் என்று நான் கருதுகிறேன்.ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு நமது தாய்நாட்டை ஒரு வெற்றிகரமான நாடாக மாற்றுவதே இப்போது நம் முன்னுள்ள பணியாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாடு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு எதுவும் எஞ்சாது. அனைத்தும் முடங்கி விடும். அது சமூகக் கட்டமைப்பிற்கு எவ்வளவு பெரிய அழிவைக் கொண்டு வரும் என்பதற்கு அண்மைக் காலத்தில் நமக்கு கசப்பான அனுபவங்கள் உள்ளன. எனவே, ஒரு அரசாங்கம் என்ற வகையில் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதே எமது முதல் பொறுப்பாகும்.

நாம் பதவியேற்கும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு விரிவான கடன் திட்டத்தில் இணைந்திருந்தோம். அதில் சில இலக்குகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த இலக்குகளைத் தாண்டி, பொருளாதாரம் குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பல காரணிகள் உள்ளன.

இலங்கை வரலாற்றில் மிகக் குறைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை 2025 இல் பதிவு செய்தது. நடைமுறைக் கணக்கு மீதியை மேலதிகமாக மாற்றியது, பல தசாப்தங்களுக்குப் பிறகு 2025 இல் 17.2% வருமானத்தைப் பதிவு செய்தது மற்றும் இலங்கைக்கு அதிகப்படியான வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கிடைத்த ஆண்டாக 2025 ஐ மாற்றியது போன்றவை எமது விசேட வெற்றிகளாகும்.

இப்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. ஆனால் நமக்குத் தேவை அசைக்க முடியாத பொருளாதாரம். வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

ஆனால் தற்பொழுது எமக்கு வெளி அதிர்வுகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வலயத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் சந்தைகளினால் பிணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பல்வேறு துறைகளினால் பிணைக்கப்பட்டுள்ள உலகில் ஏற்படுகின்ற எந்தவொரு அதிர்வும் எம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய அதிர்வுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமான விடயமாகும்.

பொதுவாக, மார்ச் மாத தொடக்கத்தில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை சுமார் 70 டொலராக இருந்தது. இப்போது அது 100 டொலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 42% அதிகரிப்பு. மசகு எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது.

எனவே, உலகில் உள்ள அனைவரும் இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் பங்காளர்களாக மாறிவிட்டனர். மேலும் சமூக நடத்தை குறிப்பிட்ட நெருக்கடி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் பொது மக்களை குறை சொல்லவில்லை. எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டின் விளைவுகளுக்கு நம் நாட்டு மக்கள் முகங்கொடுத்தனர்.

தீயில் கருகிய ஒருவர் தீப்பொறியைக் கண்டாலும் பயப்படுவார் என்று ஒரு பழமொழி உண்டு. அதனால்தான் மக்கள் எரிபொருள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் எரிபொருளை சேமித்து வைக்கத் தொடங்குகிறார்கள். மார்ச் முதலாம் திகதி எங்கள் டீசல் விற்பனை 4500 கிலோலீட்டராக இருந்தது. மார்ச் 3 ஆம் திகதி எங்கள் டீசல் விற்பனை 10 500 கிலோலீட்டராக அதிகரித்தது.

பெட்ரோல் விற்பனை சுமார் 4000 கிலோலீட்டரிலிருந்து 9000 ஆக அதிகரித்துள்ளது. இப்போது அது மீண்டும் 6000 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இதிலிருந்து யாரும் தனியாக பாதுகாப்பாக இருக்க முடியாது என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் இதற்காக ஏதாவது செய்து அதை எதிர்கொண்டால், நாம் அனைவரும் இதிலிருந்து மீண்டு வரலாம்.

இந்த வெளிப்புற அலுத்தம் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் நாம் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. நமது எரிபொருள் சந்தையில் 47% வெளிப்புற நிறுவனங்களின் கைகளில் உள்ளது. எனவே, நாம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். மேலும் எரிபொருளை சாதாரண நுகர்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

2022 நெருக்கடிக்கு என்ன காரணம்? உலகின் விநியோகப் பாதைகள் தடைப்பட்டதால் அல்ல, எரிபொருள் கையிருப்புக்கள் தாக்கப்பட்டதால் அல்ல. எரிபொருளை இறக்குமதி செய்ய நம்மிடம் டொலர்கள் இல்லாமை தான் அதற்குக் காரணம். ஆனால் இப்போது நமக்கு அந்தப் பிரச்சினை இல்லை. நம்மிடம் 7.2 பில்லியன் வெளிநாட்டு கையிருப்பு உள்ளது. எனவே இன்று ஒரு நெருக்கடி வந்தால், அது விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளால் தான் ஏற்படும்.

எனவே, அதற்குத் தேவையான அனைத்து மாற்று வழிகள் குறித்தும் நட்பு நாடுகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை வழங்குவதே எமது பொறுப்பு.

அதன் சீர்குலைவு இந்தப் பொருளாதாரத்தில் நாம் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகள் பலவற்றை குறுகிய காலத்திற்கு நிறுத்திவிடும். எனவே, ஒரு அரசாங்கமாக எங்கள் ஒட்டுமொத்தத் திட்டம் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை உறுதி செய்வதாகும். நாம் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்க முடியும்.

ஆனால் நாம் அனைவரும் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அதை கணிக்க முடியும். இந்த போர் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால், நமது கணிப்புகள் அர்த்தமற்றதாகிவிடும்.

தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் போருக்கு பாரிய சக்தியை உருவாக்கியிருக்கும் ஒரு சகாப்தம் இது. எனவே, இந்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் என்ன சூழ்நிலையை உருவாக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது. குறுகிய காலத்தை நாம் கணிக்க முடியும். ஆனால் அந்த காலத்திற்கு அப்பாலும் போர் தொடர்ந்தால், உலகில் யாராலும் அதை கணிக்க முடியாது.

எனவே, இந்த இரண்டு மாதங்களுக்கு வலுசக்தி விநியோகத்தை நாங்கள் வழங்குவோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இருப்பினும், விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். நான் எண்ணெய் கிணற்றின் உரிமையாளர் அல்லது எரிபொருள் நிறுவனத்தின் பிரதிநிதி என்று இலாபம் ஈட்டுவதற்காக இதைச் செய்யவில்லை. இருப்பினும், ஒரு அரசாங்கமாக, தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

அதற்குத் தேவையான அனைத்து மூலோபாயங்களையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம். உள்ளக அலுத்தத்தை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் வெளிப்புற அலுத்தத்தை எதிர்கொள்ள எங்களுக்கு சிறிது காலம் ஆகும். நாங்கள் வெற்றிகரமான பாதையில் இருந்தோம். எனவே, நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். ஆனால் அந்த அதிர்ச்சியை நாங்கள் மிகச் சிறப்பாக சமாளித்து அதை அமைதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

எனவே நாம் அனைவரும் இந்த அதிர்ச்சியை ஒன்றாக எதிர்கொள்வோம். நாம் அனைவரும் நம்மைப் பற்றியும் பொதுவாக அனைவரையும் பற்றியும் சிந்தித்து முடிவுகளை எடுக்கவும் நடைமுறைகளை மேற்கொள்ளவும் இதுதான் நேரம் என்று நான் நம்புகிறேன்.

எனவே, ஓரளவிற்கு, நுகர்வு முறைகளில் சில மாற்றங்கள் தேவை. உலகில் நெருக்கடியில் சிக்கிய நாடுகள் அவற்றின் வழக்கமான நுகர்வு முறைகளின் அடிப்படையில் மீளவில்லை. நெருக்கடியான நேரத்தில், நாம் அனைவரும் சிறிது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, அனைவரும் சிறிது நிதானத்தைக் கடைப்பிடித்து, விவேகமான பொருளாதார நடவடிக்கைகளில் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை நாம் அனைவரும் ஒன்றாக வெற்றி கொள்ள இதுவே வழி.

மேலும் எங்களிடம் ஒரு நீண்ட திட்டம் இருந்தது. டிஜிட்டல் மயமாக்கல் அதன் ஒரு முக்கிய பகுதியாகும். நாம் சிறந்த வாய்ப்புகளை இழந்த ஒரு நாடு. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் மூலம் உலகம் எப்போதும் புதிய பொருளாதாரங்களை உருவாக்கி வருகிறது. கடந்த நூற்றாண்டில், உலகில் பல்வேறு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய
பிரவேசங்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு இணையாக நமது தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் இணைக்கத் தவறிவிட்டோம்.

எனவே, உலகத்துடன் நாம் முன்னேறிச் செல்ல முடியவில்லை. டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் இந்த சகாப்தத்தில், புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதார வாய்ப்புகளாக மாறிவிட்டன. எனவே, இந்த சகாப்தத்தில் புதிய தொழில்நுட்பங்களின் பொருளாதார வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் ஊடாக இந்த சகாப்தத்தில் அடையப்பட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு அரசாங்கமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

டிஜிட்டல் மயமாக்கலிலும் நாம் பாரிய பிரவேசத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 6.5 பில்லியன் ரூபாவை டிஜிட்டல் மயமாக்கலுக்காக செலவிட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்க்கிறோம். அதன் மூலம், நமது அரச பொறிமுறையில் எழுந்துள்ள அனைத்து பின்தங்கிய நிலையும், திறமையின்மையும் குறைக்கப்படும்.

நாங்கள் தற்போது முழு அரச கட்டமைப்பையும் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளில், நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பங்கு உங்கள் கைகளில் உள்ளது. நீங்கள் உங்கள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் அல்லது மும்மடங்காக்க வேண்டும். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள். ஒரு அரசாங்கமாக எமது வகிபாகம் உங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதாகும். உங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தற்போதைய வர்த்தகத்தை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் 100% வளர்த்து, உங்கள் வர்த்தகத்தை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒரு பகுதியாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர்கள், இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் புதிய தலைவர் சுரேன் சந்திரரத்ன, முன்னாள் தலைவர் மஞ்சுள விஜேசுந்தர, சிரேஷ்ட உப தலைவர் டேன் டி சில்வா உட்பட அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர புடின் முயற்சி: ட்ரம்ப் எதிர்ப்பு!

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்தியஸ்தம் வகிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வந்துள்ளார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்.

ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன.

இதன் காரணமாக டெஹ்ரானிலும், டெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசிக்கும் வீடுகளிலும் கூட கரும்புகை சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலும் கூட புகை மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இதனால் அங்குள்ள நோயாளிகள் மூச்சுவிட முடியாமல் திணறி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை (கிரெம்ளின்) செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ ஈரான் மீது ராணுவ நடவடிக்கை தொடங்குவதற்கு முன், பிரச்சினையின் தொடக்க நிலையிலேயே அதை தீர்ப்பதற்காக பல்வேறு யோசனைகளை ஜனாதிபதி புடின் தெரிவித்தார். இதில் பல யோசனைகள் இப்போதும் பரிசீலனைக்கு உகந்தவை. இந்த விவகாரத்தில் ரஷ்யா தன்னால் முடிந்த அளவு உதவி செய்யத் தயாராக உள்ளது.

மேலும் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. என்றாலும் இதற்கு பல புரிதல்கள் மற்றும் பல ஒப்பந்தங்கள் தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நாங்கள் சற்று பொறுமை காக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் தொலைபேசியில் பேசியதற்கு மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த தொலைபேசியின் நோக்கம் என கிரெம்ளின் தெரிவித்தது.

இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஈரான் விவகாரத்தில் புதின் உதவி செய்ய விரும்புகிறார். இருப்பினும், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நீங்கள் இன்னும் உதவியாக இருக்க முடியும் என்று நான் புதினிடம் தெரிவித்தேன்” என்றார்.

விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்

எரிபொருள் கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதியும் அமைச்சரும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசின் முறையற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

“உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் தற்போதைய சூழலில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே, அரசு இந்தச் சுமையை மக்கள் மீது ஏற்றியுள்ளது. முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் காலத்தை இழுத்தடித்தமையே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகும்.

விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், நெல்லுக்கான நியாயமான விலையைத் தீர்மானிக்க அரசு தவறியுள்ளது. உர விநியோகத்திலும் பாரிய தாமதங்கள் நிலவுகின்றன. உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதை விடுத்து, இறக்குமதிக்கே அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது.

நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச ரீதியிலான தொடர்பாடல்கள் மிகவும் பலவீனமடைந்துள்ளன. தகுதியற்ற நபர்கள் பொறுப்புகளில் இருப்பதாலேயே சர்வதேச ரீதியில் நாடு சிக்கல்களை எதிர்கொள்கின்றது. இது குறித்து ஜனாதிபதி உடனடியாக அவதானம் செலுத்தி உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அரசியல் கூட்டணிகள் அல்லது மே தினக் கொண்டாட்டங்கள் குறித்துச் சிந்திப்பதை விட, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தீர்வு காண அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.” – என்றார்

தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே தகவல் தரவில்லை’

“இந்து சமுத்திரத்தில் ஈரான் போர்க்கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவால் இலங்கைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் (10) நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“தாக்குதல் நடத்திய தரப்போ அல்லது தாக்குதலுக்கு உள்ளான தரப்போ எமக்கு எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

இரு நாடுகளுக்கிடையிலான போரின்போது ஒரு நாடுமீது நடத்தப்படவுள்ள தாக்குதலை மூன்றாம் தரப்பு நாட்டுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றில்லை.

கடற்படைக்கு இது பற்றி எவ்வாறு தகவல் கிடைத்தது என்பது குறித்து எனக்கு துல்லியமாக தெரியாது.

அந்தப் பகுதியில் சில சடலங்கள் மற்றும் உயிர் காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மீட்பு நிலையத்திற்கு செய்தி கிடைத்தது.

பொருளாதாரக் கண்காணிப்புக் குழு கூடியது!

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயலாளராகவும் அழைப்பாளராகவும் செயற்படுகிறார்.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் துமிந்த ஹுலங்கமுவ , கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தலைவர் மங்கள விஜேசிங்க , வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப்,

இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) உள்ளிட்டோர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகள் மற்றும் அந்த நிலைமையில் சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற ரீதியில், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் அந்த வலய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள் மற்றும் முதலீடு என்பவற்றிலே எரிபொருள் இறக்குமதி தங்கியுள்ளது. அதனால் இலங்கைக்கு வெளிப்புற பொருளாதார அதிர்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை மற்றும் அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.

12 ஆவது நாளாக தொடரும் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது!

மத்திய கிழக்கு போர்ச்சூழல் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று (11) முக்கிய இரு தீர்மானங்கள் தொடர்பில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன.

ஈரானின் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் வழித்தடங்களுக்கான அச்சுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து முதலாவது தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகள், பிரிட்டன் உட்பட மேலும் சில நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

மறுபுறத்தில் ஈரானின் நட்பு நாடான ரஷ்யாவும் தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ளது.

எந்தவொரு நாட்டையும் பெயரிடாமல் பொதுவான அமைதி மற்றும் பேச்சுக்கான அழைப்பு விடுக்கும் வகையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளின் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அது உண்மையை மறைப்பதாகவும் ஈரான் தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளை, மத்திய கிழக்கில் இடம்பெறும் வான்வழித் தாக்குதல்கள் ஐநா சாசனத்திற்கு எதிரானது என்று பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஏற்கனவே எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு போர் இன்று 12 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது உக்கிர தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றது.

ஈரான் வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரானிய பெண் வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்கள் உட்பட எழுவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால் ஈரானில் இவர்களுக்கு உயிர்பயம் மற்றும் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அரசு மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளது.

சிட்னி விமான நிலையத்தில் வைத்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசப்பட்டு, எவ்வித அழுத்தமுமின்றி அவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் தங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

உள்துறை அமைச்சர் டோனி பர்க் இந்தச் செயல்முறையை நேரில் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான விசா ஆவணங்களை உடனடியாக வழங்கினார்.

தற்போது தஞ்சம் புகுந்துள்ள இந்த ஏழு பேருக்கும் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (11.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...

உயர்தரத்தில் 3 A எடுத்துச் சாதனை படைத்த யாழ். இந்து மாணவன் அக்சயன் திடீர் மரணம்!

0
  உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர் ஒருவர், திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இணுவில் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி...