Home Blog Page 3647

‘கொரோனா சமூகத்தொற்றை மறைக்கிறது அரசு’ – சஜித் அணி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டைமீறி சமூகத்தொற்றாக மாறியுள்ளது. எனினும், அரச தரப்பிலிருந்து இந்த தகவல் மறைக்கப்படுகின்றது – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொற்று அரச பொறிமுறையின் கட்டுப்பாட்டைமீறி தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. நாளாந்தம் 800 -900 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் 300 ஐ நெருங்கியுள்ளது. எனினும், சமூகத்தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதனை அரசாங்கம் இன்னும் ஏற்கமறுக்கின்றது. அரச அதிகாரிகளும், அரசுக்கு தேவையான அறிவிப்புகளையே இது விடயத்தில் விடுத்துவருகின்றனர்.

முன்னாள் கொத்தணிகள் உருவாகின. மினுவாங்கொட, பேலியகொடை என அதற்கு பெயர் இருந்தது. தற்போது அவ்வாறானதொரு நிலை இல்லை. எல்லா இடங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதாவது சமூகத்தொற்று ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

குறுகிய காலப்பகுதிக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டம் அரசிடம் இல்லை. ” – என்றார்.

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 58 ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘மௌனம் காப்பதாக நினைக்காதீர் – பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்’ – திகா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (30) நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் மொட்டு கட்சிக்கு வாக்களித்த மக்களே இன்று அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்ச்சிக்கின்றனர். பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்வடைந்துவருகின்றன. சிலவேளை நாமும் அந்த பக்கம் சென்றிருந்தால் இந்நேரம் மக்களின் சாபத்துக்கு உள்ளாக வேண்டி இருந்திருக்கும்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது. ஜனாதிபதியும் இது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஆனால் அவரின் உத்தரவைக்கூட கம்பனிகள் ஏற்பதாக தெரியவில்லை. மறுபுறத்தில் அடுத்த பேச்சுவார்த்தையில் வெற்றி நிச்சயம் என வீராப்பு பேசிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே கம்பனிகளை ஒரு நிலைக்கு கொண்டுவரமுடியும். இதனை செய்வதற்கு மாற்று தரப்பினர் தயாராக இல்லை. சம்பள விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம்.  ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கமே அறிவித்தது. எனவே, அதற்கு அழுத்தம் கொடுத்துதான் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

நாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிடவேண்டாம். சம்பள விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் விழிப்பாக இருந்திருக்காவிட்டால், தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டு இந்நேரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பார்கள்.

அதேவேளை, எமது ஆட்சியில் 7 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீட்டை குருவிக்கூடு என விமர்சித்து, 20 பேர்ச்சஸ் காணியை பெற்றுக்கொடுக்கப்போவதாகவும், சிளப் வீடுகள் அமைக்கப்படும் சூளுரைத்தவர்கள், இன்று 10 பேர்ச்சஸே வழங்குவதற்கே நடவடிக்கை எடுத்துள்ளனர். ” – என்றார்.

க.கிசாந்தன்

நுவரெலியாவிலும் ஏற்றப்பட்டது கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முதல் நுவரெலியாவிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்படி முற்கட்டமாக சுகாதார துறையினருக்கு இன்று (30.01.2021) காலை நுவரெலியா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

சம்பிக்க ரணவக்கவுக்கு என்ன பதவி? கூடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த மத்திய செயற்குழுக்கூட்டம் பெப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது சில பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது தலைவர், செயலாளர், பொருளாளர், தவிசாளர் உட்பட மேலும் சில பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

சம்பிக்க ரணவக்கவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.  இந்நிலையிலேயே அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.

24 ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைப்பு

ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இவ்வருடம் மே மாதம் சீனாவில் நடைபெறவிருந்த 24 ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு மெய்வல்லுநர் சங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய வலய நாடுகளின் ஒரு தகுதிகாண் போட்டியாகவும், வரப்பிரசாதமாகவும் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் அமைந்திருந்தது.

தற்போது அந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது ஆசிய நாடுகளைச் சேர்ந்த மெய்வல்லுநர்களுக்கு பாரிய இழப்பாக அமைந்துவிட்டது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், இலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் உலக மெய்வல்லுனர் தரவரிசையில் ஆசிய நாடுகளுக்கான பிரிவில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் திட்டமிட்டபடி நடைபெற்றால் அங்கு வீரர்கள் வெளிப்படுத்துகின்ற திறமைகளை வைத்து ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

அடுத்த ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் 2024இல் தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குவைட்டில் நடைபெறவிருந்த நான்காவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரை இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரையும், சீனாவின் சன்யா நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழா, ஆசிய மரதன் ஓட்ட சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய உள்ளக விளையாட்டு விழா என்பவற்றை ஒத்திவைக்க ஆசிய ஒலிம்பிக் சங்கம் கடந்த மாதம் நடவடிக்கை எடுத்தது.

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு

பாகிஸ்தான் சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், புனரமைப்புக்கு பின் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட, கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர் என்ற அந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக, அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன என சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்களைக் கவனிக்கும் அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் அமீர் ஹஸ்மி நேற்று தெரிவித்தார்.

அந்த கோவிலின் நிர்வாகம், ஓர் உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் முழுவதும் பல இந்து கோவில்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில், சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோவிலும் அடங்கும் என்று அமீர் ஹஸ்மி கூறினார். பெஷாவரில் உள்ள இந்து கோவில்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையின சமூகத்தினராக இந்துக்கள் உள்ளனர். அரசு புள்ளிவிவரத்தின்படி அங்கு 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதியுடன் ஜோடி சேரும் உலக அழகி’

விஜய்யின் புதிய படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘மாஸ்டர்,’ அவருடைய 64-வது படம். இதையடுத்து அவர் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன் இயக்குகின்றார். இவர் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய்க்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என்று பேசப்படுகிறது.

இவர், 2010 ஆம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில், மூன்றாவது இடத்தை பிடித்தவர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நடித்து இருந்தார். சில வருட இடை வெளிக்குப்பின் மீண்டும் அவர் தமிழ் பட உலகுக்கு வருகிறார்.

‘தொழிலாளர்களுக்காக இணைந்து செயற்பட தயார்’ – மலையக மக்கள் முன்னணி அறிவிப்பு

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படுவதற்கு மலையக மக்கள் முன்னணி தயாராகவே இருக்கின்றது. தொழிலாளர் நலன்சார் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.”  என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமானவேலுசாமி இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (30) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளவிடயத்தில் அமைச்சரவை தொடர்ந்து பல தீர்மானங்களை எடுத்துவருகின்ற போதிலும் இதனுடைய உண்மைத்தன்மை என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளது

அதற்கு காரணம் மலையக மக்கள் சார்பாகவும் அவர்களுடைய கருத்துகளை அமைச்சரவையில் தெரிவிப்பதற்கும் அமைச்சர் ஒருவர் இல்லாமை பெரும் குறையாகும். ஏனெனில் இந்த விடயத்தில் தொழில் அமைச்சர் ஒரு கருத்தையும் ஏனைய அமைச்சர்கள் ஒரு கருத்தையும் அமைச்சரவை ஊடக பேச்சாளர் ஒரு கருத்தையும் கூறிவருகின்றனர்.

எனவே உண்மையான கருத்தை அறிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒரு இருக்க வேண்டியது கட்டாயமாகும்.மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இல்லாமை பெரும் குறையாகவே இருக்கின்றது.

1000 ரூபா அடிப்படை சம்பள விடயத்தில் எந்த தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்கோ அல்லது ஒத்துழைப்பு வழங்குவதற்கோ மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் தயாராகவே இருக்கின்றது. நாங்கள் தொழிலாளர் நலன் சார்ந்த அனைத்து விடயங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவே இருக்கின்றோம்.

எதிர் கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையில் நானும் இல்லை.எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இல்லை என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த பல வருடங்களாக இந்த 1000 ரூபா பிரச்சினை இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கமும் இதனை தீர்த்து வைப்பதற்கு உரிய அழுத்தத்தை கொடுக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் வாக்களித்து கொண்டு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் இதனை செய்யவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.” – என்றார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

வடக்கில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்து தமக்கான கொவிட் -19 தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் தவறவிடுவோர் தடுப்பூசி ஏற்றும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகர் மருத்துவர் கமலநாதனுக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

இந்திய தூதுவர், சஜித் சந்திப்பு!

0
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் அமைந்துள்ள ‘இந்திய இல்லத்தில்’ நேற்று  (12) மாலை இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள்...

200 MM மழை வீழ்ச்சி!

0
மேல், சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று 200 மி.மீ. இற்கும் அதிகமான மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.