Home Blog Page 3797

135 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா! 2 ஆயிரம்பேர் சுய தனிமையில்!!

விசேட அதிரடிப்படையினர் உட்பட 2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2ஆவது கொரோனா அலைமூலம் இதுவரை 135 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சுமார் 300 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிப்பில் உள்ளனர். அத்துடன், விசேட அதிரடிப்படையினர் உட்பட 2 ஆயிரம் பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

களனி, இராஜகிரிய மற்றும் களுபோவில ஆகிய விசேட அதிரடி படை முகாம்களில் உணவு பிரிவுக்கு பொறுப்பாக உள்ளவர்கள், பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்ததாலேயே அங்கு கொரோனா பரவியது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். முகாம்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாமியாரை படுகொலை செய்த மருமகள்! நானுஓயாவில் பயங்கரம்!!

மாமியாரை கடுமையாகத் தாக்கி – 20 அடி பள்ளத்தில் தள்ளி மருமகள் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நேற்று (01) நானுஓயா, சமர்செட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

73 வயதுடைய வயோதிபப் பெண்ணே, 23 வயதுடைய மருமகளால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகமாறி, இறுதியில் கொலையில் சென்று முடிவடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்தவரின் மகன், வாய்பேசமுடியாதவரெனவும் தெரியவருகின்றது.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்

இலங்கையில் பிரபல அரசியல் பிரமுகராக இருக்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்திலுள்ள பல கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் மதுரை தஞ்சாவூர் திருச்சி சேலம் நாமக்கல் தேனி பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஜல்லிக்கட்டு சங்கத்தைச் சேர்ந்த குழுவினர் வழங்கியுள்ளனர்.பிரபல ஜல்லிக்கட்டு ஆர்வலரான செந்தில் தொண்டமானின் பிறந்த நாளை முன்னிட்டு 20 அடி உயரத்திற்கு கட் அவுட் வைக்கப்பட்டு அதற்கு முன்பாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.தமிழர்களின் பாரம்பரிய கலையான ஜல்லிக்கட்டை உலக அளவில் கொண்டு சென்ற வெற்றி வீரரான செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் கடல் கடந்தும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் தமிழர்கள் உயர்ந்த பதவிகளில் வகுத்து வருகிறார்கள் ஆனால் யாருக்கும் இதுபோன்று அவர்களுடைய பிறந்த நாளன்று கடல்கடந்து தமிழகத்தில் சிறப்பாக பிறந்தநாள் கொண்டாடியது இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ஆர்வலரான செந்தில் தொண்டமானின் தமிழ் கலாச்சாரத்திற்கு அவர் அளித்த பங்களிப்பின் காரணமாக அவருடைய பிறந்தநாள் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் தொண்டமானின் பிறந்தநாளுக்கு தமிழகம் ஆந்திரா மற்றும் புதுவையை சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

செந்தில் தொண்டமானின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தை பதிவிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு ஆர்வலராக தமிழ் கலாச்சாரத்தை உலக அளவில் கொண்டு சேர்த்திருக்கும் செந்தில் தொண்டமானுக்கு தமிழகத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஏற்கனவே ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கடந்த இருபது வருடங்களில் உருவாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பதுளையிலும் அவரது ஆதரவாளர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

நன்றி – படங்கள் : இந்திய ஊடகங்கள்

அனைத்து தோட்ட வீதிகளும் ‘காபட்’ பாதைகளாக மாற்றப்படும் – ரமேஷ் உறுதி!

” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அமரர். ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது குறித்த வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 3 கிலோமீற்றர் காபட் இடப்பட்டது. எனினும், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அத்திட்டம் அப்படியே நிறுத்தப்பட்டது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கு தற்போதைய ஆட்சியின் கீழ் எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  18 கிலோமீற்றர் தூரம் முழுமையாக காபட் இடப்படும். அதேபோல் இவ்வீதியில் உள்ள 5 பாலங்களை புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாதைகளை காபட் பாதைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் முன்னெடுக்கப்படும். விடயதானத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா அண்மையில் சில திட்டங்களை ஆரம்பித்துவைத்தார். அடுத்துவரும் நாட்களிலும் பணிகள் தொடரும். ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் மலையக அபிவிருத்திக்காக முழு பங்களிப்பையும் இ.தொ.கா. வழங்கும் என்பதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘நிவாரணத்திட்டம் தொடரும்’ – சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவோம்!

” ஹட்டனில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 10 தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டனர். 80 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் ‘நெகடிவ்’ என வெளிவந்துள்ளன. இது மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும், மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

புரட்டொப் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (2.10.2020) கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தையும் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் கூறியதாவது,

” இந்த வீதியை வைத்து சிலர் அரசியல் செய்தனர், எனினும், எனது தந்தையின் வேண்டுகோளுக்கமைய வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பணிகள் ஆரம்பித்து நடவடிக்கைகள் இடம்பெறுகையில், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் வந்த பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டன.

எனினும், தற்போதைய ஆட்சியின்கீழ் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. பெருந்தோட்டப்பகுதிகளில் 384 கிலோமீற்றர் தூரத்தை புனரமைப்பதற்கு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நாம் நன்றி கூறியாக வேண்டும்.

நுவரெலியா – டன்சின் பாதை மற்றும் கெமினிதன் வீதி ஆகியனவும் நிச்சயம் புனரமைக்கப்படும். வரவு – செலவுத் திட்டத்தின் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்றும் வழங்கினோம், இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. பணிகள் தொடரும்.

அட்டனில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, நகரத்தை மூடுமாறு வர்த்தகர்களிடம் கேட்டோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதனையடுத்து 80 பேரிடம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகள் ‘நெகடிவ்’ அதாவது வைரஸ் தொற்றவில்லை என வந்துள்ளது. இது திருப்தியாக இருக்கின்றது. எனினும், நாம் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 5,249 பேர் மீண்டனர்! 5,789 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 344 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,249 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 789 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

‘தீபாவளி முற்பணத்தில் கை வைத்துள்ள கம்பனிகள்’ – 2 ஆயிரம் ரூபா வெட்டு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி நிவாரண பொதி மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது நாட்டில் மிக வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. இன்று வரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஒரு மாத காலத்துக்குள் கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையை கருத்தில் கொண்டு தற்போது மேல் மாகாணம் முழுவதும், நாட்டின் மேலும் சில பகுதிகளிளும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த கொரோனா காலத்தை போன்று அல்லாது இம்முறை எவ்வித பேதமுமின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் மற்றும் 5000 ரூபா நிவாரண கொடுப்பன உரியவாறு வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் சுகாதாரத் துறை மிக மோசமான நிலையில் காணப்படுவது சில வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிடும் கருத்துக்களின் மூலம் காண முடிகிறது. பீசிஆர் பரிசோதனை இயந்திரம் பழுதடைதல், வெண்டிலேட்டர் பற்றாக்குறை போன்ற விடயங்களில் இதனை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் இன்று வரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இன்னும் சமூக பரவல் இல்லை என்ற கதையை சுகாதார அமைச்சர் கூறிக் கொண்டிருக்கிறார்.

கொரோனா தொற்றினால் அரச ஊழியர்கள், பொலிசார், பாதுகாப்பு படையினர், தனியார் ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் வெறுமனே பேச்சு மட்டத்திலேயே இருந்துள்ளதை காண முடிகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் அரசாங்கம் அறிவித்த விலையில் அரிசி, சீனி, செமன் போன்றவற்றை மக்கள் எங்கு வாங்கலாம் என தேடிக் கொண்டிருக்கிறார்கள். வர்த்தமானி அறிவித்தல் மற்றும் கட்டளைகளை பிறப்பிப்பது மாத்திரம் அரசாங்கத்தின் கடமை அல்ல அதனை முறையாக செயல்படுத்தி மக்களுக்கு நன்மை பயக்குவதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

எனவே இம்முறையும் இந்த கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வருமானம் இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் ‘திகா – உதயா’ நிவாரணத் திட்டத்தின் ஊடாக உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம். அதுபோல சில தனி நபர்கள் தொண்டு நிறுவனங்கள் இவ்வாறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. ஆனாலும் இவை போதுமானதாக இல்லை.

எதிர்வரும் வாரங்களில் தீபாவளி பண்டிகை வருகிறது மக்கள் தற்போது வருமான குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற விடயங்களால் மேலும் அவர்கள் சிரமத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த போதும் சில கம்பெனிகள் இம்முறை 8000 ரூபா மாத்திரமே வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இது மிகவும் அநீதியாகும். இந்த மக்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த ஆயிரம் ரூபாய் இன்னும் வழங்கவில்லை. ஆனால் இந்த தீபாவளி முன்பணம் என்பது அந்த மக்களின் சம்பள பணத்தில் மீள அறவிடப்படும் ஒன்றாகும். அதனையும் குறைத்து வழங்குவது அந்த மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். எனவே இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த கொடிய கொரோனா தொற்று இதுவரை இலங்கையில் 21 உயிர்களை பலியெடுத்துள்ளது. அதனால் இதன் கடுமையான தாக்கத்தை உணர்ந்து பொது மக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, இடைவௌியை பேணி, அடிக்கடி கைகளை கழுவி தங்களது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அநாவசிய பயணங்களை தவிர்த்து ஏனையவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய மகாண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டனில் பிரபல 1AB பாடசாலை ஒன்றின் அதிபர் வெற்றிடத்திற்கு  SLPS – I – ஐ கொண்ட அதிபர் ஒருவர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், மிகை ஊழியர் சேவையின் அடிப்படையில் தரம் 2 – ii இல் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட ஒருவர் அதிபராக இணைத்தது தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி  அதிபர் தரம் SLPS – I  – ஐ கொண்ட அதிபர் ஒருவர்,  மாகண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆனைக்குழுவில் முறைபாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் அவி /12/1101/530/035  இலக்கமும்  2012.08.08 திகதியும் கொண்ட அமைச்சரவை தீர்மானத்திற்கேற்பவும் கல்வி அமைச்சின் செயலாளரின் ED/04/60/07/18  இலக்கமும் 2013.01.03 திகதியும் கொண்ட சுற்றுநிருபங்களுக்குமைய மிகை ஊழியர் சேவையின் அடிப்படையில்   SLPS 2 – ii இல் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர் எனவும்

இவர்களுக்கு உரிய சேவை ஆசிரியர் சேவை என்பதும் 2 – ii அதிபர் தரத்திற்குரிய சம்பளத்தை பெறுவதைத்தவிர வேறெந்த வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் முதல் நியமனம் பெறும் பாடசாலையிலேயே கடமையாற்ற வேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானமும் கல்வியமைச்சின் சுற்று நிருபமும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இந் நிலையில் அண்மையில் ஹட்டன் கல்வி வலயத்தில் பிரபல பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்ற அதே தினத்தில் மிகவும் அவசரமாக மாகாண கல்வி அதிகாரி ஒருவரின் வட்சப் மூலமும் பெக்ஸ் மூலமும் அனுப்பட்ட இடமாற்ற கடிதத்தின் படி  புதிய அதிபர் நியமிக்கப்பட்ட விந்தையான சம்பவம் 22.10.2020 அன்று நிறைவேறியுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளர் முறையாக அதிபர் நியமனத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்த போதும் வலயக் கல்விப்பணிப்பாளருக்கும் மாகாண கல்வி அதிகாரிக்குமிடையிலான அதிகாரப் போட்டி இந்த நியமனத்தில் முழுமையாக செல்வாக்கு செலுத்தியுள்ளதாக பெற்றோர்களும் பழைய மாணவர்களும் விசனம் தெரிவிப்பதுடன் தகமை வாய்ந்த அதிபர் தங்கள் பாடசாலைக்கு நியமிக்கப்படவேண்டுமெனவும் மாகாண ஆளுநரிடமும் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் இப்பாடசாலைக்கு அதிபர் தரம் SLPS – I   ஐச் சேர்ந்த தகமை வாய்ந்த ஒருவரை நியமிக்க வலயக் கல்விப்பணிப்பாளர் மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு சிபார்சு செய்ததாகவும் மாகாண கல்விப்பணிப்பாளரும் சிபார்சு செய்து மாகாணக் கல்விச் செயலாளருக்கு முன்கூட்டியே (ஆகஸ்ட் மாதத்தில்) அனுப்பியிருந்ததாகவும் அறியமுடிகின்றது.

எனினும் அதிகார துஸ்பிரயோகம் செயற்பட்டுள்ள தரம் 2 ஐஐ ஐச் சேர்ந்த மிகை ஊழியர்; அவசர அவசரமாக தரம் 1யுடீ பாடசாலைக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.  மிகவும் அவசரமாக தரம் 1யுடீ பாடசாலைக்கு இத்தகைய ஒருவர் கல்வியமைச்சின் சுற்றுநிருபங்களை மீறி நியமிக்கப்பட்டதன் அடிப்படை அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமையையும் பின்புலத்தில் பிரபல அரசியல் வாதிகள் தொடர்புள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட SLPS – I    ஐச் சேர்ந்த அதிபர் உயர்கல்வித்தரம் உடையவர் 5 கல்வித்துறைசார் பட்டங்களைப் பெற்றவர். இந்த பாடசாலைக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் இவரையே இந்த பாடசாலைக்கு நியமிக்க வேண்டும் என ஹட்டன் கல்வி வலய கல்வி பணிப்பாளர் சிபார்சு செய்ய மாகாண கல்வி பணிப்பாளரும் சிபார்சு செய்து மாகாண செயலாளருக்கு அனுப்பப்பட்ட நிலையில் தகவல்களை இருட்டடிப்பு செய்து அவசர அவசரமாக தகைமையற்ற அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தகைமையுடன் விண்ணபித்தவருக்கு எதிராக இடம்பெற்றுள்ள  அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

இவ்வாறான நிலையிலேயே பாதிக்கப்பட்டவர்  இந் நியமனத்திற்கெதிராக மாகாண ஆளுநர் மற்றும் கல்விச் செயலாளருக்கும் மேன் முறையீடு செய்துள்ளதாகவும் தன் அடிப்படை உரிமை மிறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஊழல் மற்றும் மோசடிகள் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் அரசியல் பழிவாங்கல்களுக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தள்ளதாகவும்  அதி உத்தம ஜனாதிபதி மற்றும் ஒம்புட்மன் ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பொதுவாக மலையக கல்வித்துறையில் அதிகார துஸ்பிரயோகமும் அரசியல் செல்வாக்குடன் கூடிய நியமனங்களும் முற்றாக ஒழிக்கப்படு;ம் வரை கல்வியில் மாற்றம் சமூகமாற்றம் என்பன பகற் கனவே. இவ் அதிபர் நியமனத்தில்; மாகாண அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக முறைகேடு நிகழ்ந்துள்ளமையால் இந்த விடயத்துடன் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குமுவில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது என தெரிய வருகின்றது.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

‘கொரோனா’ தொற்றை மறைத்த இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினை ரகசியமாக மறைத்துள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு உலக நாடுகளை கட்டியாண்ட இங்கிலாந்து நாடும் தப்பவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.

இதேபோன்று, இங்கிலாந்து அரச குடும்பமும் இதற்கு விதிவிலக்கில்லை. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகன் மற்றும் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ், கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பாதிப்புகளுக்கு ஆட்பட்டு பின்னர் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தி கொண்டார்.

அதன்பின்பு ஒரு வார சிகிச்சை முடிந்து அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார். இதேபோன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில், ராணி எலிசபெத் பாதுகாப்பிற்காக லண்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினை ரகசியமாக மறைத்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அதே காலகட்டத்தில் கடந்த ஏப்ரலில் வில்லியமுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கென்சிங்டன் அரண்மனை வட்டார தகவலை அடிப்படையாக கொண்டு இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது பற்றி நாட்டிலுள்ளோருக்கு தெரிவிக்க விரும்பவில்லை. அதனால் தனது சிகிச்சை முறை உள்ளிட்ட விஷயங்களில் ரகசியம் காத்துள்ளார் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

’20’ ஐ ஆதரித்த அரவிந்தகுமார் ஆளுநருக்கும் பொன்னாடை போர்த்தினார்!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தலைமையில் மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஆகியோர் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மிலை இன்று (02) சந்தித்தனர்.

இதன்போது பதுளை மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், ஊவா மாகாணத்தில் பெரும்பாலான ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமை குறித்தும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆளுனரிடம் முன்வைக்கப்பட்ட மேற்படி விடயங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவுவிடுமாறு தமது செயலாளருக்கு உத்தரவிட்டார் என்று அரவிந்தகுமாரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...