Home Blog Page 3819

தேசிய வைத்தியசாலையின் தாதிக்கும் கொவிட்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள்!
தேசிய வைத்தியசாலையின் தாதிக்கும் கொவிட்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை கொவிட் கொத்தணித் தொடரில் கொவிட் ஏற்பட்ட ஒருவர் மூலம் குறித்த தாதிக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட குறித்த தாதியுடன் பணியாற்றிய சக பணியாளர்களிடமும் இன்று பி.சீ.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களையும், பொதுமக்களையும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள் மட்டும், உரிய பிரிவுகளின் தொலைபேசி இலக்கங்கள் மூலம் அழைத்து உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை (15) காலை 5 மணி முதல் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பிரதேசத்தில் உள்ள சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஊரடங்க அனுமதிப் பத்திரமாக தமது அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்க அமுலில் உள்ள நிலையில் அது தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச சபை தலைவர் உட்பட 14 பேர் பிணையில் விடுவிப்பு

நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் உட்பட 14 பேர் இன்று (14.10.2020) விளக்கமறியலில் வைக்கப்பட்டு சரீர பிணையில் செல்வதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி, பபோத ஜயசேகர உத்தரவிட்டுள்ளார் என சட்டத்தரணி தேவராஜ் ஆதவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணி தேவராஜ் ஆதவன்,

“நானுஒயா ரதல்லை குறுக்கு வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றிற்கு அத்துமீறி நுழைந்ததாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் என கூறிக் கொள்ளும் பாருக் அப்துல் லதீப் என்பவர் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், பிரதேச சபை உப தலைவர் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் உட்பட 18 பேருக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு இன்று (14.10.2020) விசாரணைக்கு வந்த பொழுதே நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பபோத ஜயசேகர இன்று வழக்கில் ஆஜராகியிருந்த 14 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன்.பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜ் மற்றும் ஏனைய 18 பேருக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுரை நீதவானிடம் தமது கட்சிக்காரர்களுக்கு பிணை வழங்க அனுமதி கோரிய பொழுது கடுமையான நிபந்தனைகளுடன் தலா ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் செலவதற்கு அனுமதி வழங்கினார்.

இந்த வழங்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத ஏனைய நால்வருக்கும் நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டதுடன் அவர்களை அடுத்த நீதிமன்ற திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பபோத ஜயசேகர உத்தரவிட்டுள்ளதுடன் இந்த வழக்கை எதிர்வரும் 16.12.2020 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி தேவராஜ் ஆதவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘அப்பாவி தொழிலாளர்களை அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க எவ்வித பொறிமுறையும் இல்லை’

சீரற்ற காலநிலை அனர்த்தத்தால் பலாங்கொடை பின்னவல பகுதியிலுள்ள இரண்டு பெண் தொழிலாளர்கள் பலியாகியுள்ளமை அதிர்ச்சியளிப்பதாக சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மலையகப் பகுதியில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் சீரற்ற கால நிலையை மக்கள் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய அறிவுறுத்தல்களே அல்லது ஆபத்தான நேரத்திற்கான நடவடிக்கைகள் பற்றியோ எவருமே அக்கறை கொள்வதில்லை.
இயற்கை அனர்த்தங்கள் எமக்கு அழிவுகளையும் உயிரிழப்புகளையும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன.

“எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்ற பொதுவான அறிவுருத்தல்கள் மாத்திரமே அதுவும் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றனவே தவிர எமது அப்பாவி தொழிலாளர்களை இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து காப்பாற்றுவதற்கும் எதுவித திட்டங்களும் இல்லை அதுபோல் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதற்கான திட்டங்களும் இல்லை.

எமது மக்களின் வாழ்க்கையும் வாழும் உரிமைகளும் பெறுமதியற்றது போலவே இங்கு இடம் பெறும் சோகமான மரணங்களும் கூட பெறுமதியற்று போய் விடுகின்றன.
இன்று அநியாயமாக உயிரிழந்துள்ள பெண்களின் உழைப்பில் தங்கி வாழ்ந்த அனைவரினது எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு மாகாண சபைக்கு தனது வாரிசுகளை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இதுவெல்லாம் அறிக்கை விடுவதற்கான கருவாக மாத்திரமே அமையப் போகிறது.

வழி தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எம் தொழிலாளர்கள் தமது வாழ்வினை விடை தெரியாமலேயே முடித்துக் கொள்ளும் அவலம் முற்றுப் பெற வேண்டும்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகி மரணமான தொழிலாளர்களின் மரணங்கலெல்லாம் மரண சான்றிதழ்களோடே முற்றுப் பெற்று விட்டது.இவர்களுக்கு எவ்வாறு எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது அல்லது வழங்கப்பட்டதா என்பது கூட தெரியவில்லை. இந்த வரிசையில் இன்று பலாங்கொடை உயிரிழப்பும் பதியப்படுகின்றது.

காலநிலை சீர்கேடு தொடரும் வரை இவ்வாறான அனர்த்தங்களும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும் இதனைக் கட்டுப்படுத்தி எமது அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கமும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் மட்டுமின்றி நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களையாவது மலையக பிரதிநிதிகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 29 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 29 இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,357 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 668 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.  மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ரிஷாட் தலைமறைவு! 6 பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டை!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பியை கைதுசெய்வதற்காக சி.ஐ.டியின் ஆறு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் மன்னாரிலுள்ள ரிஷாட்டின் வீடுகளில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான தேடுதல் தொடர்கின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ரிஷாட்டை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ரிஷாட் பதியுதீனின் கணக்காளரும், ரிஷாட் பதியூதீன் தொடர்பான தகவல்களை மறைத்தமைக்காக அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 ஆல் அரசாங்கத்துக்கு ‘கோவிட் -20’ நோய் – மனோ சாடல்

நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு 4றியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசின் உள்ளே இப்போது 20 திருத்தம் தொடர்பில் பெரும் கலகம் நடைபெறுகிறது. எதிரணியில் நாம் இதை எதிர்ப்பதை போன்று அரசுக்குள் இருந்து பலர் எதிர்குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள்.

அமைச்சர்கள் விதுர விக்கிரமநாயக்க, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஜனாதிபதிக்கு நெருக்கமான கேவிந்து குமாரதுங்கவும் 20ஐ எதிர்க்கிறார். விஜயதாச ராஜபக்ச எம்பி இப்போது இரண்டாவது முறை 20 தி தொடர்பில் ஜனாதிபதிக்கு “காதல்” கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் இல்லை. அது ஒருதலைபட்ச காதல் போலிருக்கிறது. அரசுக்கு ஆதரவு அளித்த பல தேரர்கள், சமூக தலைவர்கள் எதிர்குரல் எழுப்புகிறார்கள். இதுதான் இன்று அரசை பிடித்துள்ள கோவிட்- 20 நோயாகும்.

இதை மறைக்கவே இன்று இந்த அரசு, வழமைபோல் இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. அதனாலேயே நண்பர் ரிசாத் பதுதீன் மீது கைது முயற்சி நடைபெறுகிறது. அவரை கைது செய்து விட்டு, நாட்டில் “ரிசாத் கைது” என செய்தி தலைப்பை உருவாக்க அரசு முயல்கிறது. இன்று சிங்கள மொழி தேசிய பத்திரிகைகளில், தலைப்பு செய்தி என்ன?

“ரிசாத் பதுதீனை கைது செய்ய சட்ட மாஅதிபர் அறிவுறுத்தல். ரிசாத்தை தேடி ஆறு பொலிஸ் குழுக்கள் வலை விரிப்பு”, என்பதே இன்றைய சிங்கள பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகள். இது அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில், பிழையான கருத்தை கொண்டு செல்கிறது. விபரம் அறியாத பாமர கிராமத்து சிங்கள மக்கள் மத்தியில், இன்று ரிசாத், உயிர்த்த ஞாயிறு தொடர்பில், கைதாகிறார் என்ற மாதிரியான செய்தி மயக்கத்தை அரசு பரப்புகிறது.

புத்தளம் மாவட்டத்தில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்களை, மன்னாரில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளுக்கு, இபோச பேரூந்து வண்டிகளில் கொண்டு சென்றது தொடர்பில், செலவான அரசு பணம் தொண்ணூறு இலட்சம். இது அப்போதே மீள செலுத்தப்பட்டு விட்டது. மேலும் இது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அரச நிதி அல்ல. இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மக்களின் வாக்குரிமை தொடர்பில், மக்கள் பிரதிநிதிகளுக்கு கடப்பாடு இருக்கிறது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் கடப்பாடு இருக்கிறது. அவர் இது பற்றி என்ன சொல்கிறார்?

இந்த உண்மைகளை மூடி மறைத்து, அரச வளங்களை தவறாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தி, பிணை வழங்க முடியாத, வழக்கில் ரிசாத்தை மாட்டி விட்டு, அரசு, தான் எதிர்கொள்ளும் “கோவிட்- 20” பிரச்சினைகளை மூடி மறைக்க முயல்கிறது.

2019ம் வருட ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற இடம்பெற்றதாக சொல்லப்படும் இந்த விவகாரம் தொடர்பில், சட்ட மாஅதிபர் இதுவரை தூங்கி கொண்டு இருந்தாரா? இல்லை, அவரும், இப்போது அரசியல் செய்கிறாரா?

அப்படியானால், இதே ராஜபக்ச அரசு, 2015ம் வருட தேர்தலில், தங்கள் தேர்தல் கூட்டங்களுக்காக பயன்படுத்திய அரச வளங்களுக்கான கட்டணங்களை மீள செலுத்தி விட்டதா? வாக்களிக்க அல்ல, தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மக்களை அழைத்து செல்ல பயன்படுத்திய இபோச பேரூந்து கட்டணங்கள், விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்,

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்த விமானபடை நிறுவன ஹெலிகொப்டர் வாடகை என பல கோடி ரூபாய்கள் நிலுவையில் இருக்கின்றன. ஆகவே இவர்களை எல்லாம், சட்ட மாஅதிபரால், கைது செய்ய உத்தரவு இட முடியாதா?

அரசாங்கம் என்ன செய்வது என தெரியாமல், சந்தைக்கு வந்து அன்றன்று வருமானம் தேடும் நாள்சம்பள தொழிலாளர்களை போல், ஒவ்வொரு நாளும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கிறது.

முதல்நாள், ரிசாத்தின் சகோதரர் ரியாத்தை குற்றமற்றவர் என விடுவிக்கிறது. மறுநாள், பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மீது பழி சுமத்தி அவரை காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்கிறது.

அடுத்த நாள், ஜாலியவை மீண்டும் கொழும்புக்கு கொண்டு வருகிறது. அடுத்தநாள், அரச எம்பீகளை கொண்டு ரியாத்தை கைது செய்யுங்கள் என கடிதம் எழுத வைக்கிறது. அப்புறம், இப்போது அரச வளங்களை தவறாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தி ரிசாத்தை கைது செய்ய முயல்கிறது.

ரிசாத், ரியாத் சகோதர்கள் மீது அரசுக்கு குற்றம் சுமத்த முடியவில்லையே. குற்றம் சுமத்திய அரசாங்கமே குற்றமற்றவர் என விடுவிக்கிறதே. ஆகவே உண்மையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள், இவர்கள் அல்ல.

கடந்த காலங்களில், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில், தம்மிடம் முழுமையான சாட்சியங்கள், தகவல்கள் இருக்கின்றன என்று பகிரங்கமாக பலமுறை கூக்குரல் இட்ட விமல் வீரவன்ச போன்றோரைதான் அரசு கைது செய்ய வேண்டும். பொய் சாட்சியம் கூறினார்கள் அல்லது இன்னமும் தங்களிடம் இருக்கின்ற தகவல்களை மறைக்கின்றர்கள் என விமல் வீரவன்ச மற்றும் அன்று வரிசையாக சிஐடி தலைமையகம் சென்ற அனைவரையும் அரசு கைது செய்து, உடன் விசாரித்து, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும்.

அதை விடுத்து, தன்னை பிடித்துள்ள இந்த “கோவிட்- 20” நோய்க்கு மருந்து தேடக்கூடாது. ஏனெனில் கோவிட்-19னை போல் இந்த நோய்க்கும் மருந்தில்லை.” -என்றார்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி – ஜீவன் தொண்டமான் பணிப்பு!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா- பட்டல்கெலே தொழிற்சாலைப் பிரிவில் நேற்றிரவு பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் கல்வியியற் கல்லூரி மாணவியொருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதனை கேள்வியுற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார்.
 
பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் , குடியிருப்புகளை விரைவில் புனரமைத்து கொடுக்குமாறும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பணிப்புரை விடுத்தார்.
 
அத்துடன், காயமடைந்த மாணவியை இராஜாங்க அமைச்சர் வைத்திய சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
 
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் பாரத் அருள்சாமி ,நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் குழந்தைவேல் ரவி ஆகியொருடன் உடனிருந்தனர். 

ஹட்டன் நகரில் மண்சரிவு – இரு கடைகள் சேதம்! இருவருக்கு காயம்!!

ஹட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாக இன்று (14.10.2020) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், இதில் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரு இளைஞர்கள் காமயடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவு ஏற்படும் போது மலிவு விற்பனை கடையில் ஐந்து பேர் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர் என்றும், இவர்கள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பினர் எனவும் அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருவருக்கு மட்டுமே சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

கடைக்கு பின்புறமாக இருந்த பாரிய மண்திட்டே இவ்வாறு சரிந்து வந்துள்ளது. இதனால் கடையில் உள்ள பொருட்களுக்கும் மற்றைய கடையில் ஒரு சமையலறைக்குமே சேதம் ஏற்பட்டுள்ளன.

இந்த மண்திட்டு தொடர்ந்து சரியக்கூடிய அபாயம் காணப்படுவதனால் கடையில் தங்கியிருக்க வேண்டாம் எனவும் மண்திட்டுக்கு மேல் ஒரு வீட்டில் வசிப்பவர்களும் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஹட்டன் நகரசபையின் தலைவர் எஸ். பாலசந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

” கடந்த சில தினங்களாக அட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் நிலை இருப்பதனால் கடைகளில் யாரும் தங்க வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

அத்தோடு மேல் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது மழை தொடர்ந்து பெய்துவருவதனால் மண் அகற்றுவது ஆபத்தானது எனவே மழை குறைந்த பின் மண் அகற்றுவதற்கான நடடிக்கை எடுப்போம்.” – என்றார்.

க.கிசாந்தன்

தேயிலை தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் பலி! பலாங்கொடையில் சோகம்

தேயிலைத் தோட்டத்தில் மரமொன்று முறிந்து விழுந்ததால் கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொட, பின்னவல- வலவ்வத்த பகுதியிலுள்ள அரசாங்கத்துக்குரிய பெருந்தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததால் மூவர் நசுங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். எனினும், இருவர் உயிரிழந்துவிட்டனர். மற்றைய பெண்ணுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றன. வலவ்வத்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரே பலியாகியுள்ளனர்.

பலாங்கொட பகுதியிலும் கடந்த சில நாட்களாக கடும் காற்றுடன் அடைமழை பெய்துவருகின்றது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ஐ.பி.எல். தொடரில் 9,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர்!

0
IPL வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ஆர்சிபி முன்னாள் தலைவர் விராட் கோஹ்லி. ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில்...

மழை தொடரும் சாத்தியம்!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும்...

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...