Home Blog Page 3818

கொரோனாவின் பிடிக்குள் இருந்து 3,380 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 23 இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,380 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 777 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.  மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 710 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கடும் காற்று, மண்சரிவால் நுவரெலியாவில் 60 வீடுகள் சேதம்!

கடும் காற்று, அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடும் காற்று, மண்சரிவால் 60 வீடுகள் பகுதியளவு தேமடைந்துள்ளன என்றும், ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, அடை மழையால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவல் – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,721 ஆக உயர்வு

மினுவாங்கொட கொரோனா கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 113 பேர் நேற்று மாலை இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஐந்து பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள். எஞ்சிய 108 பேர், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று இனங்காணப்பட்ட நோய் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 130 ஆகும்.

இதன் பிரகாரம், மினுவாங்கொட கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது.

310 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – குழந்தை பலி! ஐவர் படுகாயம்!!

ஹப்புதளை பகுதியில் விகாரகலை என்ற இடத்தில் ஆட்டோவொன்று விபத்திற்குள்ளாகியதில் ஒன்றரை வயது குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுநனர் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, நேற்று (14) மாலை 6 மணியளவில் பெரகலை–வெள்ளவாயா பிரதான வழியில் கீழ்விகாரகலை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டுநர் உட்பட ஆறுபேர் பயணித்த இவ் ஆட்டோ, பாதையைவிட்டுவிலகி 310 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் ஒன்றரை வயதுடைய சிறுவன், ஸ்தலத்திலேயே பலியானார். ஒருபெண் உட்பட ஐந்து பேர் கடுங்காயங்களுக்குள்ளாகி, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைஅரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமுற்று ஆபத்தான நிலையிலுள்ள இருவர், தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏனைய மூவர், ஹப்புத்தளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

எம். செல்வராஜா, பதுளை

’20’ தொடர்பில் 5 நாட்கள் விவாதம்கோர எதிரணி முடிவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஐந்து நாட்கள் விவாதம் கோருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை மறுதினம் (16) வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போதே 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஐந்து நாட்கள் விவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கோரவுள்ளது. எனினும், இரு நாட்கள் விவாதத்தை வழங்குவதே அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது என தெரியவருகின்றது.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகர் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொரோனா’ – 2ஆவது தடுப்பூசியையும் கண்டுபிடித்துவிட்டோம் – ரஷ்யா

கொரோனா வைரசுக்கு எதிராக 2ஆவது தடுப்பூசியையும் கண்டுபிடித்துவிட்டோம். 3ஆவது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார்.

’ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இந்த ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை பரிசோதனை செய்துவருகிறன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய அதிபர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

எபிவேக்கொரோனா என என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சைபீரியாவில் உள்ள வெக்டர் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் தொடங்கவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த போதும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இந்த தடுப்பூசியின் 3-ம் கட்டபரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதால் 3-ம் கட்ட பரிசோதனை முழுமையடைவதற்கு முன்னதாகவே எபிவேக்கொரோனா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷிய அதிபர் புதின், செயின் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்த சுவ்மகோவ் நிறுவனத்தின் மேலும் ஒரு தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதானையில் உள்ளதாகவும், கூறிய விரைவில் கொரோனாவுக்கான 3-வது தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.

’ஸ்புட்னிக் 5′ தடுப்பூசியை தொடர்ந்து மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கிவிட்டதாகவும் 3-வது தடுப்பூசியில் விரைவில் உருவாக்கிவிடுமோம் என ரஷியா அதிரடியாக தெரிவித்துள்ள நிகழ்வு உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்கவில் அமுலுக்கு வந்தது ஊரடங்கு! அடங்க மறுத்த 142 பேர் கைது!!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிலும் இன்று (15) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலுக்குவந்துள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு ஊரடங்கு அமுலில் இருந்தாலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவன அடையாள அட்டையை, ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே 18 பொலிஸ் பிரிவுகளில் அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்கின்றது. ஊரடங்கு உத்தரவைமீறிய 142 பேர் இதுவரை கைது செய்துள்ளனர்.

டில்லி அணி வெற்றிநடை – புள்ளிப்பட்டியலிலும் முதலிடம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை தோற்கடித்து டெல்லி அணி 6ஆவது வெற்றியை பெற்றது.

8 அணிகள் இடையிலான 13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு துபாயில் நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணிக்கு உற்சாகமான தொடக்கம் கிடைக்கவில்லை. பிரித்வி ஷா (0), அடுத்து வந்த ரஹானே (2 ஓட்டங்கள்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேற்றினார்.

இதன் பின்னர் ஷிகர் தவானும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அணியை சிக்கலில் இருந்து விடுவித்து தூக்கி நிறுத்தினர். அபாரமாக ஆடிய தவான் நடப்பு தொடரில் 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது 180 ரன்களை நெருங்கும் போல் கணிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்தது. அணியின் ஸ்கோர் 95 ரன்களை (11.4 ஓவர்) எட்டிய போது தவான் (57 ரன், 33 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்ரேயாஸ் கோபாலின் பந்து வீச்சில் ‘ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்’ அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார்.

இதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்திய ஸ்ரேயாஸ் அய்யர், வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்டின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை விரட்டினார். இதில் ஒரு பந்தை பென் ஸ்டோக்ஸ் பிடித்து விட்டு தடுமாறி எல்லைக்கோட்டை தாண்டி விழுந்தார். பந்தை உள்பக்கமாக வீசுவதற்குள் அவரது கால் தரையை தொட்டதால் அது சிக்சராக மாறியதுடன் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதத்தையும் கடந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்குக்கு 53 ரன்களும் (43 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கஸ் ஸ்டோனிஸ் 18 ரன்களும் (19 பந்து), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 14 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் திணறிப்போன டெல்லி அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன் விளாசி தடாலடி தொடக்கம் கொடுத்தார். ஆனால் 2-வது விக்கெட்டுக்கு கால்பதித்த ஸ்டீவன் சுமித் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

இதன் பின்னர் பென் ஸ்டோக்சும், சஞ்சு சாம்சனும் துரிதமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 86 ரன்களை (10.2 ஓவர்) எட்டிய போது பென் ஸ்டோக்ஸ் (41 ரன், 35 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சனும் (2 சிக்சருடன் 25 ரன்) பெவிலியன் திரும்ப ராஜஸ்தான் நெருக்கடிக்குள்ளானது. அதைத் தொடர்ந்து ரியான் பராக் 1 ரன்னிலும், ராபின் உத்தப்பா 32 ரன்னிலும் நடையை கட்ட, டெல்லி அணியின் கை ஓங்கியது.

கடைசி 2 ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய ரபடா அந்த ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சரின் (1 ரன்) விக்கெட்டை சாய்த்ததோடு 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.

இதையடுத்து கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவையாக இருந்தது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே வீசினார். முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானின் ஹீரோவாக திகழ்ந்த ராகுல் திவேதியா களத்தில் நின்றும் இந்த முறை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி 8 ரன் மட்டுமே எடுத்தது.

20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திவேதியா 14 ரன்னுடன் களத்தில் இருந்தார். தோள்பட்டை காயத்தால் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாதியில் வெளியேறியதால் ஆட்டத்தின் பிற்பகுதியில் ஷிகர் தவான் அணியை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது. டெல்லி தரப்பில் தேஷ்பாண்டே, நோர்டியா தலா 2 விக்கெட்டும், ரபடா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 6-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் சந்தித்த 5-வது தோல்வியாகும்.

‘800’ படத்தில் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த மாட்டோம்’ – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

” உலக சாதனை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ‘800’ என்ற படத்தில் எந்தவித அரசியலும் கிடையாது.” – என்று குறித்த படதயாரிப்பு நிறுவனமான டி.ஏ.ஆர் மோஷன் பிக்சர்ஸ் விளக்கம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“இது முற்றிலும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை – விளையாட்டு சம்மந்தப்பட்டப் படமே தவிர எந்தவித அரசியலும் கிடையாது. ஆனால், இந்தப் படம் பல வழிகளில் அரசியல் மயமாகக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் விளையாட்டுப் படம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பலத் தடைகளைத்தாண்டி உலகளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையம்சம்.

இளம் தலைமுறையினரும் வருங்கால விளையாட்டு வீரர்களும் தங்கள் கனவுகளை அடைய இப்படம் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டங்களைக் சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளைக் கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையை மட்டுமே விதைக்க விரும்புகிறோம். ” – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கொரோனா தாக்கம் – கொழும்பில் வாழ்பவர்கள் விழிப்பாகவே இருங்கள்’

கம்பஹா மாவட்டத்தைபோல் கொழும்பு மாவட்டத்துக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் வைத்திய ஜயருவன் பண்டார இன்று (14) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொவிட் – 19 வைரஸ் என்பது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. எனவே, ஆள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் அது வேகமாக பரவக்கூடும். எனவேதான் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடந்தகாலங்களில் கோரியிருந்தோம்.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் குறுகிய பிரதேசத்துக்குள் அதிகளவானவர்கள் வாழ்கின்றனர், வீடுகளிலும் அதிகளவானவர்கள் இருக்கின்றனர். எனவே, வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அது வேகமாக பரவக்கூடும். ஆகவே மக்கள் தனது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

33 ஆவது கொத்தணிபரவல்மூலம் (மினுவாங்கொட) கொழும்பு மாவட்டத்தில் 160 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில்போல் கொழும்பில் கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம் தற்போதைக்கு மேற்கொள்ளப்படவில்லை. எது எப்படியிருந்தாலும் மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான வசதிகள் உள்ளன , நோயாளிகளுக்கான கட்டில்களும் போதுமாளனவு இருக்கின்றன.” – என்றும் அவர் கூறினார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிநடை தொடருமா?

0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்...

ஈரானியர்களின் தற்துணிவை பாராட்டிய புடின்!

0
நாட்டின் இறையாண்மைக்காக போராடும் ஈரான் மக்களின் தற்துணிவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் நேற்று தன்னை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார். அத்துடன், அமைதி முயற்சி வெற்றியளிப்பதற்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (28.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...