Home Blog Page 3827

சப்ரகமுவ மாகாணத்தில் 8 கொரோனா தொற்றாளர்கள்!

சப்ரகமுவ மாகாணத்தில் நேற்றுவரை (10) கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் 8 பேரும் பிரான்ண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா வைரஸ் தொற்றுக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் றம்புக்கனை வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட கொரோனா வைத்திய சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இரத்தினபுரி கேகாலை வைத்திய துறை உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதற்கிணங்க இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கிரியெல்ல எல்லாவள பிரதேசங்களை சேர்ந்த இரண்டு நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தில் இருந்து வரகாபொல பிரதேசத்திலிருந்து 3 பேரும் ருவன்வல்ல யட்டியாந்தோட்டை கேகாலை ஆகிய பிரதேசங்களிலிருந்து தலா ஒவ்வொரு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதால் இவர்களும் கொரோனா விசேட வைத்திய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி லக்மால் கோணார மற்றும் கேகாலை மாவட்டத்தின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி குமார் விக்ரமசிங்க ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இம்மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் .

எதிர்வரும் 28 ஆம் திகதியே இவர் இலங்கை வருகிறார் எனவும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார் எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சீனாவின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் இலங்கைவந்து திரும்பியுள்ள நிலையிலேயே, அமெரிக்காவும் பலம்பொருந்திய பிரதிநிதியொருவரை கொழும்புக்கு அனுப்புகின்றது

சுகாதார ஏற்பாடுகளுடன் உயர்தரப் பரீட்சை திங்கள் ஆரம்பம்! 362,824 பரீட்சாத்திகள்!! 2,684 நிலையங்கள்!!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் அது தொடர்பில் மாணவர்களுக்கும் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள 2 ஆயிரத்து 684 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 3 லட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கு இதுவரை அதற்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காதிருந்தால் விண்ணப்பதாரர் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உபயோகித்து பயிற்சி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, www.donets.lk என்ற இணையத்தளத்தில் www.slexams.com மூலம் தரவிரக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் பரீட்சை நிலையங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளை இணைத்துக்கொண்டு பரீட்சை நிலையங்களில் கிருமித் தொற்று நீக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பரீட்சை நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள், அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

‘இலங்கையில் இன்னும் 4ஆம் கட்ட கொரோனா அலை ஏற்படவில்லை’

இலங்கையில் இன்னும் கொரோனா 4 ஆவது அலை ஏற்படவில்லை என்றும் மூன்றாம்கட்ட அச்சுறுத்தலையே எதிர்கொண்டுள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிரணி பிரதம கொறடா லக்‌ஷமன் கிரியல்லவால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா சமூகத்தொற்று அபாயத்திலிருந்து தற்போது நாடு விடுபட்டுள்ளது என்ற அறிவிப்பை சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே நான் வெளியிட்டிருந்தேன். விஞ்ஞானப்பூர்வமாக 4 கட்டங்களாகவே இந்நோய் பரவல் கணிக்கப்படுகின்றது.

நோயாளி எவரும் இல்லை என்பது முதல் கட்டமாகும்,  ஆங்காங்கே நோயாளிகள் அடையாளம் காணப்படுதல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும் நிலையே 2ஆம் கட்டமாகும்.  கடற்படை, கந்தக்காடு போன்ற கொத்தணி பரவல்களே மூன்றாம்கட்ட அலையாக கருதப்படுகின்றது.

சமூகத்தில் வகைதொகையின்றி எல்லா இடங்களிலும் நோயாளிகள் அடையாளம் காணப்படுதல், எங்கிருந்து எப்படி அவர்களுக்கு தொற்று பரவியது என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை நான்காம் கட்டமாகும். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிலைமை காணப்படுகின்றது.

சமூகதொற்று குறித்த அறிவிப்பை நான் விடுப்பதற்கு முன்னர் 25 ஆயிரம் பேரை சமூகத்தில் இருந்து பரிசோதித்திருந்தோம். அவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்றவில்லை. நாளாந்தம் 10 பேரிடம் பிசிஆர் பரிசோதனை நடத்துமாறு பிரதான வைத்தியசாலைகளுக்கு அறிவித்திருந்தோம். அதன்போதும் எவரும் அடையாளம் காணப்படவில்லை. நிமோனியா போன்ற நோயினால் உயிரிழந்தவர்களின் மாதிரிகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

அதன்போதும் தொற்று ஏற்படவில்லை. இவற்றை அடிப்படையாகக்கொண்டே செப்டம்பர் 3 ஆம் திகதி நாட்டில் சமூகத்தொற்று இல்லை என்ற அறிவிப்பை விடுத்திருந்தேன். ஆனாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எமது நாட்டவர்கள் அழைத்துவரப்படுகின்றனர், எனவே, தொடர்ந்தும் அவதானமாக செயற்படவேண்டும் எனவும் கூறியிருந்தேன். எனது உரையின் ஒரு பகுதியை மாத்திரம் தூக்கிப்பிடிக்காமல் முழு உரையையும் செவிமடுக்குமாறு குறிப்பிட்டேன். சுவாசிக்கும்போதுகூட தொற்று பரவலாம் என்ற எச்சரிக்கையைக்கூட நான் விடுத்திருந்தேன். ” – என்றார் சுகதார அமைச்சர்.

இதன்போது எழுந்த லக்‌ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் ஏப்ரலில் விடுத்த அறிவிப்பு தொடர்பிலேயே நான் குறிப்பிட்டிருந்தேன், இவர் செப்டம்பர் பற்றி கதைக்கின்றார். ஏப்ரலில் எவ்வாறு குறிப்பிடமுடியும், எதனை அடிப்படையாகக்கொண்டு அறிவிப்பு விடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பவித்ராதேவி,

” எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் பொறுப்புடனேயே உரையாற்றியுள்ளேன். சமூகத்தில் தொற்று இல்லை என்பதாலேயே மாஸ் அணியாமல் எதிர்க்கட்சித் தலைவருக்குகூட நடமாட முடிந்தது. தேர்தலையும் எதிர்கொண்டனர். நாம் உண்மையையே கூறினோம். இலங்கையில் 4ஆவது கட்டம் இல்லை.” -என்றார்.

‘இலங்கையில் 4,523 பேருக்கு கொரோனா – 3,296 பேர் தப்பினர்’ – 1,214 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,296ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 214 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘இலங்கைக்கான சீனாவின் உதவி தொடரும்’ – ஜனாதிபதியிடம் தூதுக்குழு உறுதி

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளை வெற்றிபெறச் செய்வதற்கு தொடர்ச்சியாக உதவுவதாக  சீனாவின் உயர் மட்ட தூதுக்குழுவின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.

” சீனா, இலங்கை இருதரப்பு உறவுகள் தற்போது மிகவும் திருப்தியான நிலையில் உள்ளது. இந்த நற்புறவை பேணுவதும், மேலும் மேம்படுத்துவதும் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின் முன்னுரிமையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் இலங்கையின் சுயாதீனம், இறைமை, ஆற்புல ஒருமைப்பாட்டிற்காக சீனா குரல்கொடுக்கும்.” என்றும் சீன தூதுக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் சபை உறுப்பினர் மற்றும் சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் அலுவலக பணிப்பாளர் யங் ஜியேஷி தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக் குழு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர்.

நீண்ட காலமாக சீன வெளிவிவகார அமைச்சின் பல்வேறு பதவிகளை வகித்த யங் ஜியேஷி   2001-2005 காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான சீன தூதுவராகவும் 2007-2013 காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார். சீன ஆட்சி கட்டமைப்பில் அவர் உப பிரதமருக்கு நிகரானவர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது பெற்றுக்கொண்ட அமோக வெற்றி குறித்து சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கின் வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தெரிவித்த யங் ஜீயேஷி , தான் 35 வருடங்களுக்கு முன்னர் ஒரு மொழி பெயர்ப்பாளராக சீன தூதுக்குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்தார்.

நான்கு நாடுகளை உள்ளடக்கிய தனது ஆசிய சுற்றுப் பயணத்தில் முதலாவது நாடு இலங்கையாகும் எனக் குறிப்பிட்டதுடன், சீன ஜனாதிபதி இலங்கையுடனான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமையளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா – இலங்கை உறவுகளில் தற்போதைய நிலைமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்து உரையாடலை ஆரம்பித்த ஜனாதிபதி  , சீனா ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் குறித்த வேறுபாடின்றி இலங்கைக்கு உதவும் நீண்ட கால நண்பர் எனத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சீனா பெரும் ஒத்துழைப்பை வழங்கியது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இருதரப்பு உறவுகள் மேலும் மேம்பட்டது. நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பை ஜனாதிபதி  விசேடமாக நினைவுகூர்ந்தார்.

பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றுக்கு சீன பங்களிப்பு செய்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், துறைமுக நகர திட்டம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அவற்றில் சிலவாகும். ஹம்பாந்தோட்டையில் துறைமுகமொன்றை நிர்மாணிப்பது சீனாவுடையதன்றி இலங்கையின் எண்ணமாகும்.

அது அதிக வருமானத்தையும் தொழில்வாய்ப்புகளையும் கொண்டுவரும் சிறந்த திட்டம் என்பதை நாம் விளங்கியிருந்தோம். அதற்கு நிதி உதவியளிக்க சீனா முன்வந்தது.

பெரும்பாலான புவி அரசியல் பகுப்பாய்வுகள் இத்திட்டத்தை இலங்கையில் சீனா ஏற்படுத்தியிருக்கும் கடன் வலை என்றே அர்த்தப்படுத்தப்படுகின்றது. அது அவ்வாறல்ல என்றும், இந்த பாரிய திட்டம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. எனவே அதற்காக எமக்கு உதவுங்கள்’ என்று ஜனாதிபதி,  சீன தூதுக் குழுவிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னர் 13 முறை சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தான் சீனா அடைந்துள்ள அபிவிருத்தி முன்னேற்றங்களை நேரடியாக கண்டுகொண்டதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

‘ குறிப்பாக கிராமிய பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தியை நான் கண்டேன். இதற்கு நிகரான அபிவிருத்தியை எமது நாட்டிலும் குறிப்பாக கிராமங்களில் அதனை ஏற்படுத்துவது கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தனது இலக்காகும் என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் துறைமுக நகர திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பது தனது எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீனாவுடனான வர்த்தகத்தின் போது இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பாரியதாக இருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  அதனை குறைப்பதற்கு இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யும் பொருட்களின் அளவை அதிகரிக்குமாறும் தூதுக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

‘இலங்கையின் தனியார் துறை வலுவான நிலையில் உள்ளது. அவர்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அதற்காக சீன சந்தைவாய்ப்புகளை திறந்துவிடுங்கள். இலங்கையில் முதலீடு செய்யுமாறு சீன வர்த்தகர்களை ஊக்குவியுங்கள். இலங்கையில் சுற்றுலாவுக்காக சீனர்களை ஊக்குவியுங்கள்.

இலங்கையின் தேயிலை ஏலத்தில் பங்குகொள்ள சீனாவுக்கு முடியுமானால் அது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் பலமாகும்’ என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

உயர் தரத்தில் சித்தியடையும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு திறந்திருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்த இளைஞர் யுவதிகளுக்காக தொழிநுட்ப பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பது சீனாவுக்கு இலங்கையில் முதலிட முடியுமான துறையாகும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு பேச்சில் மட்டுமன்றி செயலில் உதவுவதற்கு சீனா தயாராக உள்ளது என்று யங் ஜியேஷி  குறிப்பிட்டார்.

இலங்கையுடன் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பொருத்தமான பல துறைகளை சீனா இனம்கண்டுள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய திட்டங்களை நிறைவுசெய்வதற்கு மேலதிகமாக விவசாயம், கல்வி, சுற்றுலா, நீர் வழங்கள், சுகாதாரம், மருத்துவ வழங்கள், நவீன தொழிநுற்பம்,

டிஜிடல் பொருளாதாரம், நீல பொருளாதாரம் மற்றும் தொழில் பயிற்சி என்பன அவற்றில் சிலவாகும். சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த கலந்துரையாடலை மீண்டும் ஆரம்பிக்கவும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகர திட்டத்தை விரைவாக நிறைவுசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீன தூதுக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இ.தொ.கா. உட்பட 5 சிறுபான்மையினக் கட்சிகள் ’20’ இற்கு ஆதரவு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐந்து சிறுபான்மையினக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஆகியனவே ’20’ ஐ ஆதரித்து வாக்களிக்கவுள்ளன.

தமது கட்சிகளின் ஆதரவை அரச உயர்பீடத்துக்கு மேற்படி கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன. எனினும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 20 தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 11 பேருக்கும், ஏனைய மூவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்ப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐக் கடந்துள்ளது. 3,296 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

‘கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது’ – சீனா பாராட்டு!

” சீனா கொவிட்-19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை உலக சுகாதார அமைப்பிற்கு தொடர்ந்து வழங்கும். இலங்கை கொவிட்-19 தொற்றை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது.”

இவ்வாறு  சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அலரிமாளிகையில் இன்று (9) நடைபெற்ற சந்திப்பின்போதே சீன பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் போது பெற்றுக் கொண்ட வெற்றி சீனாவிற்கு போன்றே இலங்கைக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டிய யெங் ஜியேச்சி  , அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களுக்கான ஊக்குவிப்புகளை சீன அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட ஏனைய திட்டங்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்பு ஏற்கனவே இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். கொவிட்-19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டவுடன் உடனடியாக அந்த உறவு தொடர்ந்து நீடிக்கும் என நாம் நம்புகின்றோம். சீனா, இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளின் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தமது இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் விரிவடையும் என நம்புவதாகவும், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோர் ஒன்றிணைந்து இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதன் ஊடாக பொருளாதார ஒத்துழைப்புடன் இரு நாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேலும் விரிவடையும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவின் உரை……

அதேவேளை, இச்சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச,

” உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இச்சுற்றுப்பயணத்தின் ஊடாக தற்போதுள்ள இருதரப்பு உறவை மீண்டும் உறுதிபடுத்துவதற்கு இலங்கைக்கும், சீனாவிற்கும் சாத்தியமாகியுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியமை குறித்து சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கொவிட்-19 தொற்று நிலைமைக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து மீள் எழுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சீன அரசாங்கத்துடனான எமது நீண்ட கால நட்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன்.

கொவிட்-19 தொற்று தாக்கத்தின் பின்னர், அரசாங்கம் உலகளாவிய ரீதியில் முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன்,  அதில் கொழும்பு துறைமுக நகரத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இலங்கைக்கு வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், அது ஏற்றுமதி வருவாயை உருவாக்குவதுடன், இலங்கையர்கள் விசேடமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவியாக அமையும்.” – என்றும் பிரதமர் கூறினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பவித்ரா வன்னிஆராச்சி,

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன உள்ளிட்ட சீன உயர்மட்ட குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

தாதியர் இருவருக்கு கொரோனா – மூடப்பட்டன சிகிச்சை அறைகள்!

ஹொரண வைத்தியசாலையின் 5 மற்றும் 9 ஆம் சிகிச்சை அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. குறித்த வைத்தியசாலையில் பணியாற்றிய இரு தாதியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாதியர்கள் இருவரும் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு தாதியரில் ஒருவரின் கணவர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றும் நபர் எனவும் அவருக்கு, அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ஹொரணை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...