Home Blog Page 3842

முதல் வெற்றியை பதிவுசெய்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை சாய்த்து ஐதராபாத் அணி முதலாவது வெற்றியை பெற்றது.

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டெல்லி அணியில் அவேஷ் கானுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் முகமது நபி, விருத்திமான் சஹா நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன், அப்துல் சமத் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். டெல்லி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இருவரும் முதல் 5 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்த ஓவரில் வார்னர் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்தனர். வார்னர்-பேர்ஸ்டோ கூட்டணி உடையாமல், பவர்-பிளேயில் எடுத்த மந்தமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு மத்தியில் வார்னர் ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும், பேர்ஸ்டோ கேட்ச் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து ரன்ரேட்டை உயர்த்துவதில் தீவிரம் காட்டிய வார்னர் 45 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அமித் மிஸ்ராவின் சுழற்பந்தில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து பந்து கையுறையில் லேசாக உரசியபடி விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச்சாக சிக்கியது. அடுத்து வந்த மனிஷ் பாண்டே (3 ரன்) நிலைக்கவில்லை. 3-வது விக்கெட்டுக்கு வில்லியம்சன் நுழைந்தார்.

ஸ்கோர் சீரான வேகத்திலேயே நகர்ந்தது. பேர்ஸ்டோ 53 ரன்களில் (48 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்ட வில்லியம்சன் 41 ரன்களில் (26 பந்து, 5 பவுண்டரி) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா, காஜிசோ ரபடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பிரித்வி ஷா 2 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னிலும், ஷிகர் தவான் 34 ரன்னிலும் (31 பந்து, 4 பவுண்டரி), ஹெட்மயர் 21 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 28 ரன்னிலும், ஸ்டோனிஸ் 11 ரன்னிலும் நடையை கட்டினர்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் போட்ட கிடுக்குபிடியில் சிக்கி டெல்லி அணி தடம் புரண்டது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழலில் மிரட்டிய ரஷித்கான் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

3-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்? கசிந்தது பெயர் பட்டியல்!

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் லீக்காகி இருக்கிறது.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் திகதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்காகி உள்ளது.

லீக்கான பட்டியலில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ஆர்ஜே அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போது இந்த லிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 4 ஆம் திகதி தெரியவரும்.

தோட்ட மக்களுக்கு லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகள்!

தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4, 000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 669 ஆகும். உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்போது ஏற்படும் நடைமுறை பிரச்சினைகள் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கு காரணமாகுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட மக்கள் வாழும் லயன்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் இத்திட்டத்தின் நன்மைகளை விரைவாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமென ஜனாதிபதியும், பிரதமரும் சுட்டிக்காட்டினர்.

தோட்ட மக்கள் வாழும் சூழலிலிருந்தே அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமென ஜனாதிபதி  குறிப்பிட்டார். வீடமைப்பு திட்டமிடலை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதன் மூலம் நிர்மாணப் பணிகளின் தரத்தை சிறப்பாக பேண முடியுமென்றும் ஜனாதிபதி   குறிப்பிட்டார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (29) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்ததாக தனியார் தோட்ட நிறுவனங்களும் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

தோட்ட வீடுகள் மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, சுகாதாரம்இ கல்வி, விவசாயம்,வீடமைப்பு, விளையாட்டு உள்ளிட்ட அமைச்சுக்களின் உதவியை பெற்று, தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தோட்ட முன்பள்ளி பாடசாலைகள்இ ஆரம்ப பாடசாலைகள், சுகாதார தேவைகளுக்காக மருத்துவ நிலையங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி   குறிப்பிட்டார்.

தோட்டங்களை அண்மித்து வாழும் இளைஞர், யுவதிகளுக்கு Nஏஞ மட்ட சான்றிதழை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொழில் பயிற்சியை வழங்கி, தொழில் வாய்ப்புக்களை வழங்குவதன் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. தோட்டங்களை அண்மித்ததாக உள்ள 438 சுகாதார நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வந்து, சிறந்த சேவையை தோட்ட மக்களுக்காக துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி   தெரிவித்தார்.

பண்டாரவளை, ஹட்டன், நுவரெலியா மற்றும் எல்ல பிரதேசங்களை மையப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தோட்டங்களும் கிராமங்களும் துண்டிக்கப்படாத வகையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இல்லை – பிரதமர் அறிவிப்பு

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று 2020.09.29 தெரிவித்தார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து என்ன?

பிரதமர்: அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது அல்லவா?

பிரதமர்: அனைத்து கட்சிகளுக்கும் அது தொடர்பில் குழுக்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில் நாம் அனைவருடனும் அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடினோம். எதிர்க்கட்சியும் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிகிறேன்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா?

பிரதமர்: இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது.

ஊடகவியலாளர்: இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின்போது 13ஆவது திருத்தத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து.

பிரதமர்: தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம்.

ஊடகவியலாளர்: புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரவுள்ளீர்களா?

அமைச்சர் உதய கம்மன்பில: புதிய அரசியலமைப்பு வரைவொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும்.

பிரதமர்: அரசியலமைப்பு முழுவதும் மாற்றம் செய்யப்படின் வாக்கெடுப்பிற்கு செல்வது அவசியமாகும். ஆனால், எமக்கு அந்த மக்கள் ஆணை தெளிவாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: 19ஆவது அரசிலமைப்பை நீக்க வேண்டும் என்றே எமக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அது குறுகிய கால தீர்வு. புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவது நீண்ட கால தீர்வாக அமையும்.

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வு பெற போவதில்லை.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை என்று ஒரு தரப்பு கூறும்போது, 20இற்கு 20 எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பிரதமர்: எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கியுள்ளனர். கட்சிகளுக்கும், தனி நபர்களுக்கும் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட கூடும். எமக்கு நிலையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்றது. அதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

ஊடகவியலாளர்: கொவிட்-19 காரணமாக உலகின் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது? வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியுமா?

பிரதமர்: உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் என்ன இடம்பெற்றாலும் உரிய நேரத்திற்கு கடன்களை செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: தேங்காய் குறித்து ஒரு பாரிய பிரச்சினை காணப்படுகிறது.

பிரதமர்: தேங்காய் தொடர்பில் எப்போதும் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டது. எமக்கு நுகர்வோர் முக்கியம். அதனால் கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான முன்மொழிவு சிறப்பானதாகும். அதனை முறைப்படி அமைச்சரவையில் முன்வைப்போம்.

ஊடகவியலாளர்: அரசாங்கம் வர்த்தமானி வெளியிடுகிறது. பின்னர் மீண்டும் திரும்பப் பெற்று கொள்கிறது என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

பிரதமர்: அதன் மூலம் வெளிப்படுவது ஜனநாயகமே தவிர வேறொன்றும் இல்லை. தேங்காய் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அது குறித்து அறிவிப்பேன்.

ஊடகவியலாளர்: மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மஞ்சளை இறக்குமதி செய்ய முடியாதா?

பிரதமர்: உள்ளூர் விவசாயிகள் தற்போது மஞ்சளை பயிரிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எம்மால் அதைரியப்படுத்த முடியாது. அதனால் உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை தைரியப்படுத்த வேண்டுமாயின் நாம் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்ல வேண்டும். வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாம் மஞ்சள் இறக்குமதி செய்தால் விவசாயிகள் மஞ்சள் பயிர்செய்கையை கைவிட்டுவிடுவார்கள்.

ஊடகவியலாளர்: வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன.

பிரதமர்: உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யுமாறு கூறியுள்ளோம். உதிரிப் பாகங்களை கொண்டுவருவதில் எவ்வித தடங்கல்களும் இல்லை.

ஊடகவியலாளர்: விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?

பிரதமர்: கொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டே அதனை செயற்படுத்த வேண்டும். நாம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை என்பவற்றை கருத்திற் கொண்டு அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்து கொள்ளும் செயற்பாட்டின் போது வதிவிடம் குறித்த பிரச்சினை காரணமாக பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்படாமல் நியாயமற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமைச்சர் விமல் வீரவன்ச: அமைச்சரவையில் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தேர்தல் பட்டியலில் பெயர் பதியப்பட்டிருப்பது போதுமானது என்று சுற்றறிக்கையில் திருத்தம் செய்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்: சட்டவிரோத இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா?

பிரதமர்: சட்டவிரோத மீனவ பிரச்சினையை இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளோம். நாடு என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் கடற்படையினருக்கு அறிவித்துள்ளோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்திய பிரதமருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட போதிலும், அவரிடமிருந்து தெளிவான பதிலொன்று கிடைக்கவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதன் மூலம் தீர்வு காணலாம் என்ற கோரிக்கைக்கு இந்திய பிரதமரும் சம்மதித்தார்.

பிரதமர்: திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா?

பிரதமர்: அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்.

ஊடகவியலாளர்: எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் இரகசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா?

பிரதமர்: எம்.சி.சி. தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவரை அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இடம்பெறாத நிலையில் அப்படியொரு பிரச்சினை குறித்து ஏன் பேச வேண்டும்?

ஊடகவியலாளர்: 20இற்கு ஆதரவாக கைகளை உயர்த்துவதற்கு அரசாங்கத்தில் இணைத்து கொள்வதற்கு உறுப்பினர்களுக்கு பதவிகளை வழங்குவீர்களா?

பிரதமர்: எமக்கு 150 காணப்படுகிறது. பதவிகளுக்காக வரும் உறுப்பினர்கள் தற்போது இல்லை. இதனையும் சொல்ல வேண்டும். நான் என்றால் 19இற்கு வாக்களிக்கவில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச: 20இற்கு எதிர்ப்பு தெரிவிக்க பாராளுமன்ற எதிர்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் யார் என்று தேடிப்பார்த்தால் எமக்கு யார் ஆதரவு வழங்குவார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை?

பிரதமர்: அது எனது கவனத்திற்கானதொன்று. (சிரிப்புடன்)

அமைச்சர் விமல் வீரவன்ச: குழுவின் பரிந்துரைகள் கிடைத்தன. அவை கலந்துரையாடப்பட்டு, பிரதமரின் திருத்தங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஒருமித்த கருத்தொன்றை எட்டியுள்ளோம்.

ஊடகவியலாளர் போதைப்பொருள் வர்த்தகம் சமூகத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வொன்று எடுக்கப்படுமா?

பிரதமர்: நாம் இந்த ஆபத்து குறித்து அறிந்து சோதனைகளை ஆரம்பித்துள்ளோம். தற்போது இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிய மட்டத்திலானோரே சிக்குகின்றனர். இதில் பிரதானமானவர்களையே கைது செய்ய வேண்டும். நாம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம். அவர்களை கைது செய்வதன் மூலம் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க முடியும்.

ஊடகவியலாளர்: தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதை செயற்படுத்துவீர்களா?

பிரதமர்: நாமே அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அதற்கான அறிவுறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர்: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது அமைச்சர்களினால் பணிகள் இடம்பெறாத காரணத்தினாலா?

பிரதமர்: அப்படி ஒன்றும் இல்லை. ஜனாதிபதி கிராமங்களுக்கு பயணிப்பது என்பது இன்று நேற்று இடம்பெற்ற விடயமல்ல.

அமைச்சர் விமல் வீரவன்ச: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது தவறான விடயமா?

ஊடகவியலாளர்: மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றதா?

பிரதமர்: அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சட்டத்திற்கு அமையவே சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த: கடந்த அரசாங்கம் போன்று நாங்கள் நீதிமன்ற செயற்பாடுகளில் தனிப்பட்ட தலையீடுகளை மேற்கொள்ள மாட்டோம்.

அமைச்சர் விமல் வீரவன்ச: முந்தைய அரசாங்கம் ஊழல் தடுப்பு குழுவொன்றை நியமித்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்கி. அதற்காக ரூபாய் 3 கோடி செலவிடப்பட்டது. அதன்படி ஊழல் தடுப்பு குழுவினாலேயே ஊழல் செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் அவரை நியமித்தவர்களே பொறுப்பு கூற வேண்டும்.

ஊடகவியலாளர்: பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட இன்று அமைச்சு பதவிகளிலுள்ள பலர் வீணாக சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பீர்களா?

பிரதமர்: தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் எதுவும் சிந்திக்கவில்லை. நாம் ஒன்றுக்கு ஒன்று செய்யும் விருப்பம் கொண்டவர்கள் அல்லர். நாம் ஒருபோதும் பழிவாங்கியதில்லை. மற்றுமொரு விடயம், எதிர்காலத்தில் அனைத்து தேர்தல் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 100 வீடுகளை கொண்ட மாடி குடியிருப்பு வீட்டு திட்டமொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்.

குறித்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

’13’ பாதுகாக்கப்படவேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து!!

” அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும். மாகாணசபைகளுக்கு அதிஉச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்பதே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.” – என்று  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  அறிவித்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்,இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான காணொளிமூல கலந்துரையாடல் கடந்த  (26) நடைபெற்றது. இதன்போது 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கவேண்டியது அவசியம் என பாரத பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்று அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

” 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் மாகாணசபை முறைமையை உருவாக்குவதற்காக 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.எனவேதான் அந்த சட்டம் தொடரவேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி விடுத்திருக்ககூடும்.

வடக்கு, கிழக்கில் நிலவிய போர்சூழலை முடிவுக்குகொண்டுவந்து அரசியல் தீர்வாகவே மாகாணசபைமுறைமை உருவாக்கப்பட்டது.அது அமுல்படுத்தப்பட்டவிதம் குறித்து மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.இதன்காரணமாகவே மாகாணசபை முறைமை வேண்டும் என ஒரு தரப்பும், அது அவசியமில்லை என மேலுமொரு தரப்பும் இன்று கருத்து வெளியிட்டுவருகின்றன.

அதேபோல் கடந்த ஈராண்டுகளாக மாகாணசபைகள் இயங்கவில்லை. இதனை பயன்படுத்தியும் மாகாணசபைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற கருத்தாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.

எதுஎப்படியிருந்தாலும் அதிகாரப்பகிர்வு குறித்த எமது கொள்கை மாறவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது.

அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாணசபை முறைமையிலுள்ள சிற்சில குறைப்பாடுகளை சரிசெய்வதற்காக அதனை மீளாய்வுக்குட்படுத்துவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. கடந்தகாலங்களில் இருந்த தடைகள், குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உரிய வகையில் அந்த பொறிமுறை இயங்கவேண்டும்.” – என்றார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 20 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 20 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,230 ஆக அதிகரித்துள்ளது.

120 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.

’18 குளவிக்கூடுகள் – உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் தோட்ட மக்கள்’

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. நாளாந்தம் குறைந்தபட்சம் இரண்டு சம்பவங்களாவது பதிவாகின்றன. இந்நிலையில் 18 குளவிக்கூடுகளை கடந்தே நாளாந்தம் மஸ்கெலியா, முத்துமலை தோட்ட மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்கின்றனர்.

இவ்வாறு குளவிக்கூடுகள் இருப்பதால் அச்சத்துக்கு மத்தியிலேயே செல்வதாகவும், அவற்றை அகற்றி பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

” மஸ்கெலியா நகருக்கு செல்லும் பிரதான பாதையிலேயே இவ்வாறு குளவிக்கூடுகள் காணப்படுகின்றன. இதனால் நகருக்கு செல்லும் மக்களும் நகர பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் பயணிக்கின்றனர். பல தடவைகள் குளவிக்கொட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ” – என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக குறித்த வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் ராஜ்அசோக் கருத்து வெளியிட்டபோது, இக்குளவிக்கூடுகளை அகற்றுமாறு ஏற்கனவே பிரதேச சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மஸ்கெலியா பிரதேச சபையோ அல்லது தோட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமை வருத்தமளிக்கின்றது.” – என்றார்.

நீலமேகம் பிரசாந்த்

மாத்தளை மாவட்டத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – 20 ஏக்கர் காணி ஒதுக்கீடு!

மாத்தளை மாவட்டத்தில் புதிதாக தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இப் பல்கலைக்கழக நிர்மாணிப்புக்காக மாத்தளை பிரதேசத்தில் 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான நாளக பண்டார கோட்கொட தெரிவித்தார்.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பபல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
 
சிறு ஏற்றுமதி திணைக்களக் காரியாலயம் அமைந்துள்ள பண்டாரபொல பிரதேசத்தில் இதற்கான காணிஒதுக்கப்பட்டுள்ளது.
 
மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழில் நுட்பத்துறையில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களையும் நிபுணத்துவத்தையும் அளித்தல் போன்ற விடயங்கள் இப்பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நானுஓயாவில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு! பலகோணங்களில் விசாரணை!!

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயின்ற –  டெஸ்போட்ச் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

” மகள் நேற்றிரவு (28) 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும்போது மகளை காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்.” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஊர் மக்களும் இணைந்து தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று (29) காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாக கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர்.

மரணபரிசோதனைக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது. நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

‘சுனாமியில் காணாமல்போன 5 வயது சிறுவன் 16 வருடங்களின் பின் தாயை தேடிவந்த கண்ணீர் கதை…’

சுனாமியில் பாதிக்கப்பட்டு அன்றைய தினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய நிலையில் மாளிகைக்காட்டில் வசிக்கும் அபுசாலி சித்தி கமாலியா எனும் தனது தாயைத் தேடி வந்து சேர்ந்துள்ளார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியரான நான் சுனாமியன்று வைத்தியசாலைக்கு கடமைக்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் சுனாமியினால் ஐந்து வயதில் காணாமல் போன என்னுடைய மகன் இன்று என்னிடம் வந்தடைந்திருப்பது உச்சகட்ட மகிழ்ச்சியை தருகிறது.
என்னுடைய மகன் உயிருடன் இருக்கிறார் என்று சிலரும், மரணித்து விட்டார் என்று பலரும் என்னிடம் நேரடியாகவே கூறியிருந்த போதிலும் நான் என்னுடைய முயற்சியை தளரவிடாமல் 16 வருடங்களாக ஏக்கத்துடன் போராடினேன். இன்று என்னுடைய போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

சுனாமி தாக்கி மூன்று நாட்களின் பின்னர் என்னுடைய சகோதரியின் கணவரான ஓய்வு பெற்ற பிரதேச செயலாளரிடம் ஒருவர் வந்து எனது மகன் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூறினார். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது என்னுடைய மகனை அங்கிருந்து யாரோ அழைத்துச் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்தோம். அது எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. நான் யாரை சந்தித்தித்தாலும் என்னுடைய மகனின் புகைப்படத்தை காட்டி விளக்கம் சொல்வேன். எங்கு என்னுடைய மகன் இருக்கிறான் என்று கேள்விப்பட்டாலும் அங்கு சென்று தேடுவதை பழக்கமாக கொண்டிருந்தேன்.

என்னுடைய போராட்டத்தில் என்னுடைய உறவுகள் பலரும் பலவகையான உதவிகளையும் செய்தார்கள். ஆனால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயம் எனக்கு எவ்விதமான உதவிகளையும் செய்யவில்லை. பொலிஸாரும் கூட என்னை கடும் தொனியில் மிரட்டினார்கள்.

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் என்னை கடுமையாக மிரட்டி சிறையில் அடைக்கப் போவதாக எச்சரித்த அந்த நாள் இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கு என்னுடைய ஏக்கங்களை வார்த்தைகளில் சொல்லி விட்டு வந்தேன். கொழுப்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் முறையிட்டேன். அதுவும் கைகூடவில்லை. வசந்தம் தொலைக்காட்சி முதல் நிறைய ஊடகங்களில் இது பற்றி பேசியுள்ளேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு என்னுடைய மகன் ஒரு சிங்களப் பாடசாலையில் கல்வி கற்பதாக என்னுடைய சிங்கள நண்பி ஒருவர் எனக்கு தெரியப்படுத்தினார். அவரின் உதவியுடன் அந்த பாடசாலைக்குச் சென்று என்னுடைய மகனை காண பல வகையான முயற்சிகளை செய்தேன். அந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அவரை எனக்கு காட்ட மறுத்து இன்று பாடசாலைக்கு வரவில்லை என்று மறுத்து விட்டார்கள்.

பல நாட்களாக சிங்களப் பெண்மணி போல ஆடையுடுத்து என்னுடைய வேலைகளையும் விட்டுவிட்டு ஏக்கத்துடன் அந்த வீதிகளில் மகனை காண அலைந்து திரிந்தேன்.

விற்பனை பிரதிநிதி போல, தொழில் வழங்குனர் போல, பிச்சைக்காரி போல பல வேஷங்கள் போட்டு அலைந்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருந்தது என்னுடைய மகன் என்னிடம் வந்து சேரும் நாள் வரும் என்று. பல கஷ்டங்களையும் அவமானங்களையும் இதற்காக நான் சந்தித்துள்ளேன். என்னுடைய கணவர் என்னுடன் இல்லை, அவர் வேறு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். அதனால் தனியாகவே என்னுடைய தேடும் படலம் தொடர்ந்தது.

அன்று அரசியல்வாதிகள் முதல் ஜனாதிபதி வரை என்னுடைய பிரச்சினைகளை தெரியப்படுத்தினேன். பயன் இல்லை. நிறுவனம் ஒன்றின் மூலம் மகனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட நான் அங்கு வேறு ஒருவர் போல சென்று என்னுடைய மகனை சந்தித்தேன். அவருடன் தொழில்வழங்குவர் போல பேசி மகனின் தகவல்களை பெற்றுக் கொண்டேன். மகனும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

பின்னர் தொலைபேசியில் நாங்கள் பேசிக் கொண்டோம். எனக்குத் தெரிந்த அவருடைய அங்க அடையாளங்களை பற்றி விரிவாக பேசி என்னுடைய மகன்தான் என்பதை உறுதிப்படுத்தி கொண்டேன். பின்னர் அவரை வளர்த்த அந்த சிங்கள சகோதரியிடம் கொழும்புக்கு வேலைக்கு போகப் போவதாக கூறி விட்டு அவர் என்னை தேடி வந்துள்ளார். அழகான என்னுடைய மகன் எனக்கு திருப்பி கிடைத்துள்ளான்.

மக்காவுக்கு சென்று பிராத்தித்த என்னுடைய பிரார்த்தனை வீண் போகவில்லை. விரைவில் நான் அவரை இஸ்லாமிய சடங்குகள் செய்து மக்காவுக்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளேன். எனது மகனை வளர்த்த அந்த தாய்க்கு எதிர்காலத்தில் என்னால் முடியுமான உதவிகளை செய்யத் தயாராக உள்ளேன்.”

இவ்வாறு அந்த தாயார் தெரிவித்தார்.

மகனிடம் பேச எத்தனித்த போது அவர் மிகப்பெரும் சங்கடத்தில் உள்ளதாலும் தமிழை பேச முடியாமல் திணறுவதாலும் ஒழுங்காக பேச முடியாமல் தவித்தார். இருந்தாலும் சிங்கள மொழியில் என்னால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். தனது தாயை வந்தடைந்தது சந்தோசமாளிப்பதாக கூறினார். அவர் அழும் நிலையில் இருப்பதால் அவரிடம் தொடந்து எதுவும் கேட்க முடியவில்லை.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...