Home Blog Page 3847

வடக்கு, கிழக்கு போராட்டத்துக்கு அருட்தந்தை சக்திவேல் ஆதரவு

நினைவேந்தல் உரிமைக்காக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அறவழியிலான போராட்டங்களுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் என்று அரசியல் கைதிகளின் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், நினைவேந்தல் உரிமையை அரசாங்கம் தடுக்க முற்படுவது மனித உரிமை மீறலாகும் என மேற்படி அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதென்பது மக்களுக்கான உரிமையாகும். அந்த உரிமையை எவரும் தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் இங்கு தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்பதற்கு இதுமற்றுமொரு சான்றாகும். எனவே, நினைவேந்தல் உரிமையை வெல்வதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம்.
தியாகி திலீபன் என்பவர் காந்தியவழியில் போராடி மடிந்தவர் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். ” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

குரல் அரசனின் உடல் இன்று நல்லடக்கம்

உலகப்புகழ் பாடகர் எஸ்.பி.பியின் உடல் இன்று, சென்னை அருகே, தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், நேற்று மாலை, அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு, இசை மழை வழங்கியவருக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.எஸ்.பி.பி.,யின் உடல், நேற்று இரவு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று முற்பகல் 11: மணிக்கு, பண்ணை வீட்டின் ஒரு பகுதியில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

டெல்லி வெற்றிநடை – மண்கவ்வியது சென்னை!

அசத்தலான பந்து வீச்சினால் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நேற்றிரவு நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ஓட்டங்கள் அடித்தது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 64 ரன்னிலும், தவான் 35 ரன்னிலும் அவுட்டாகினர். ரிஷப் பண்ட் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ரன்னிலும், வாட்சன் 14 ரன்னிலும் அவுட்டாகினர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது.

ஜாதவ் 26 ரன்னிலும் டூ பிளசிஸ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி 15 ரன்னில் அவுட்டானார்.

டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தியது. பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ரன்கள் எடுக்க முடியவில்லை.

இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

‘மெல்லிசை மௌனித்துவிட்டது’ – ஜீவன் தொண்டமான் இரங்கல்

“பாடும் நிலா” என்று பலராலும் பாராட்டப்படும்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மரணச் செய்தி எம்மை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தமது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளிலும் பாடி இரசிகர் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டு பரவசப்படுத்திய அந்த இனிமையான குரல் தற்போது எம்மை விட்டு பிரிந்திருக்கின்றது.

உலகில் பிறந்த மனிதர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டு வாழ்வதுண்டு. இவ் உலகில் பிறந்த அனைவருக்கும் இறப்பு என்பது நிச்சயிக்கப்;பட்ட ஒன்றாகும். சிலரது இறப்பினை நாம் ஒரு சம்பவமாகவே கருதுகின்றோம். ஆனால் சிலரது இறப்பு எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடுகின்றது. அந்த வகையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு எம்மை ஆராத்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது.

அமைதியான சுபாவம் கொண்ட அவர் எல்லாரினது அன்புக்கும் பாத்திரமானவர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் பலவற்றில் இசைவானை ஆக்கிரமித்துக் கொண்ட அந்த இசைபுயல் இன்று பிரிந்து சென்றுள்ளது. திரை இசை உள்ளங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வேளையில் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், திரை உலகத்தினர், பன்மொழி ரசிகர்கள் அனைவரோடும் எமது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்து கொள்கின்றோம் என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

உடரதல்ல தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அனுசா ஆதரவு!

நிர்வாகத்தின் கெடுபிடிகளும் தொழிற்சங்கங்களின் அசாதாரண போக்கினாலும் உடரதல்ல தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் முடிவு பெறாமல் உள்ளதை அவதானிக்க முடிகிறது என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்திற்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கு மேல் போராடி இன்று உண்ணாவிரதம் இருந்து வரும் மேற்படி தோட்டத் தொழிலாளர்களை இன்று சந்தித்த அனுஷா சந்திரசேகரன் மேலும் இது சம்பந்தமான கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,

இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் மலையகத்திற்கு தலைமை கொடுப்பதாக கூறிக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்க தலைமைகள் இவ்விடயத்தில் தலையிடாமல் இருக்கின்றன.

நிர்வாகத்தின் நெருக்கடியான முடிவுகளால் தொழிலாளர்கள் மாற்று வழி இன்றி தாங்களே தங்களின் பிரச்சனைகளின் தீர்வுக்காக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்கள்.இந்த நிலைமையை தொடர விடுவது தொழிலாளர்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளையே கூட்டும்.

ஆகவே இவ்விடயத்தில் கட்சி பேதங்களை மறந்து தேர்தல் காலத்தில் மேடையில் கூறியதுபோல் சகல மக்களின் பிரச்சினைகளையும் நேர்மையாக கையாண்டு இந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு மலையக தொழிற்சங்கங்கள் முன்வரவேண்டுமென்றும்.

நிர்வாகங்களின் முறையற்ற போக்குகளுக்கும் மக்களின் பிரச்சினைகளில் தொழிற்சங்கங்கள் வேதம் காட்டும் செயலுக்கும் நிரந்தர முடிவு எட்டப்பட வேண்டும்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்கள் நலனில் அக்கறை காட்டி செயற்படுவது போன்று தேர்தல் முடிந்த பின்னரும் நாம் அவர்களின் பிரச்சனைகளில் இணைந்திருக்க வேண்டும் வெற்றி பெறுவது மட்டும் தான் எனது நோக்கம் என்று செயற்படுவதும் நிர்வாகங்களை தொழிற்சங்க திட்டங்களுக்கு அமையவாவது கட்டுப்படுத்தாமல் விடுவதும் எமது தொழிலாளர்களுக்குப் செய்யும் அப்பட்டமான துரோகமாகவே அமையும் எனவும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

‘மறைந்தது பாடும் நிலா’ – எஸ்.பி.பி. கடந்துவந்த பாதை….

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சாதனை படைத்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரை ரசிகர்களின் நெஞ்சங்களைத் தாலாட்டும் குரல் வல்லமை படைத்தவர்.

இந்திய திரையுலகில் பின்னணி பாடகர்களுக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. முஹம்மது ராபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கே.ஜே. ஏசுதாஸ், டி.எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, லதா மங்கேஷ்கர் என நீளும் புகழ்பெற்ற வரிசையில் முன்னணி சில பெயர்களில் இடம்பெறத் தக்கவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எனப்படும் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்.

தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கொனேட்டம்பட்டுதான் எஸ்.பி.பியின் சொந்த ஊர். 1946 ஜூன் 4ஆம் திகதி  பிறந்த, எஸ்.பி.பி., சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்ததால், அதன் சில கூறுகளைக் கற்றுக்கொண்டிருந்தார்.

பிறகு, பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்ஸில் இணைந்து பொறியியல் படிப்பை படித்தார்.

படிக்கும் காலத்திலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாலசுப்ரமணியம், 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெற்றார். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணியும் பாடகர் கண்டசாலாவும்.

இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியானது. இதற்குப் பிறகு தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த ‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடலைப் பாடினார்.ஆனால், அந்தப் படம் வெளியாகவேயில்லை. நடுவில் கன்னட திரைப்படங்களில் பாட ஆரம்பித்திருந்தார் எஸ்.பி.பி.

தமிழில் இவர் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்தான்.

இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பாகவே ‘இயற்கையெனும் இளைய கன்னி’ பாடலை சாந்தி நிலையம் படத்திற்காகப் பாடியிருந்தார். அந்தப் படம் 1969 மே 23ஆம் திகதி  வெளியானது. ஆனால், “அடிமைப்பெண்” மே 1ஆம் தேதியே வெளியாகிவிட்டதால், தமிழில் எஸ்.பி.பி பாடி முதலில் வெளியான பாடல், ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்தான். இதற்குப் பிறகு மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார் எஸ்.பி.பி.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களில் டி.எம். சௌந்தர்ராஜனின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரு உச்ச நட்சத்திரங்களுக்குமே டி.எம்.சௌந்தர்ராஜனே பாடிக்கொண்டிருந்தார்.

உச்ச நட்சத்திரங்கள் இருவருக்கும் வேறு குரலை பாட வைத்தால் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற தயக்கம் இயக்குனர்களுக்கும் இசை அமைப்பாளர்களும் இருந்ததால், நீண்ட காலமாக டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு மாற்றே இல்லை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் அடிமைப் பெண் படத்திற்குப் பிறகு, எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறனால் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார் எஸ்.பி.பி.

1970களின் பிற்பகுதியில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார் எஸ்.பி.பி. இளையராஜா – எஸ்.பி. பாலசுப்ரமணியம் – எஸ். ஜானகி என்ற இந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.

சுருக்கமாகச் சொன்னால், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா பாடல்களில் கடந்த நூற்றாண்டின், கடைசி முப்பது ஆண்டுகள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினுடையது.ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தார்.

1980ல் வெளிவந்த சங்கராபரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படம் சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம். எஸ்.பி. சாஸ்த்ரீய இசையை முறைப்படி படித்தவர் இல்லை என்றாலும் இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி.

தெலுங்கில் சிரஞ்சிவி நடித்த படங்களுக்கும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கும் பெரும்பாலான டைட்டில் பாடல்கள் எஸ்பிபி பாடியதுதான்.

எஸ்.பி.பி. தன் பாடல்களுக்காகத்தான் பெரிதும் அறியப்பட்டவர் என்றாலும் அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும்கூட. தவிர, நல்ல நடிகர், சிறப்பான பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.

ஒரு சிறந்த பாடகராக அறியப்பட்டதாலோ என்னவோ, கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார் என்பது பலரால் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. குறிப்பாக தமிழில் அவர் நடித்து, இசைமைத்த “சிகரம்” திரைப்படம், இதில் உச்சகட்டம்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால தொழில் வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 14 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

பின்னணி பாடுவதில் மட்டுமல்லாமல், திரைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பங்களிப்புக்கு இணையாக வெகு சிலரையே காட்ட முடியும். இப்போதும் ஒவ்வொரு இரவிலும் அவரது குரலைக் கேட்காமல் தூங்கச் செல்லும் இல்லங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அவர் இருக்கிறாரா, மறைந்துவிட்டாரா என்பதெல்லாம் இதில் பொருட்டே இல்லை. மறைந்தாலும் அவரின் இசை வாழும். பாடல் செவிகளுக்கு விருந்தளிக்கும்.

நன்றி பிபிசி தமிழ்

மறைந்தது பாடும் நிலை!

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74). திரையுலகில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய அவருக்கு கடந்த மாதம் 5 ஆம் திகதி  கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார்.இந்த நிலையில் கடந்த மாதம் 13 ஆம் திகதி அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தியும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்தார். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று மோசம் அடைந்தது. இதுகுறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில்,

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் திகதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு எக்மோ உள்ளிட்ட இதர உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசம் அடைந்தது. இதையடுத்து அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலமானார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன் பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிப்பு!

பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். தற்போது இந்த ஆலோசனையில் எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்ரி, மற்றும் அவரது மகன் சரண், மகள் பல்லவி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் எஸ்.பி.பி.யை காண இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வைத்தியசாலைக்கு வர உள்ளதால், அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மருத்துவமனை தரப்பில் விரைவில் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

1000 ரூபா கிடைக்குமா, கிடைக்காதா? 14 நாட்களுக்குள் முடிவு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் தமது முடிவை அறிவிப்பதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, தொழில் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா இரு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளார்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் , கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரமுகர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று தொழில் அமைச்சர் நடைபெற்றது.

இதன்போதேபெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரினால் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாரங்களில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது தீர்மானங்களை அறிவிக்காவிடத்து அரசாங்கம் தமது முடிவை அறிவிக்கும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டதாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

‘ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேற்குலக நாடுகளுக்கு வாக்களிக்க இலங்கை மறுப்பு’

ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கத்துவம் பெறுவதற்காக முன்னிலையான மூன்று மேற்குலக  நாடுகளுக்கு வாக்களிப்பதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்கமுடியாது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், நானும் பேரவைக்கு தெளிவாக அறிவித்துவிட்டோம்.அதுமட்டுமல்ல எம்மால் செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே ஏற்போம் என்ற என்பதையும் கூறிவிட்டோம்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எமது நாட்டின் மேற்படி கொள்கையை, நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். தேவையற்ற தலையீடுகளுக்கு அடிபணியமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இது சிறப்பானதொரு அறிவிப்பாகும். நாடு தொடர்பில் சிந்தித்து முவெடுப்பதற்குரிய தைரியம் அவருக்கு இருக்கின்றது.

அதேவேளை, ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு அங்கத்துவ  நாடுகளை தெரிவுசெய்வதற்கான அண்மையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அங்கத்துவத்தை பெறுவதற்கு மூன்று மேற்குலக நாடுகளும் முன்னிலையாகின. இம்மூன்று நாடுகளுக்கும் எமது வாக்கை பயன்படுத்த முடியாது என்பதை எமது பிரதிநிதி தெளிவாக அறிவித்துவிட்டார்.  இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி வழங்கியிருந்தார். மேற்படி மூன்று நாடுகளும் இலங்கை தொடர்பில்  கடுமையாக செயற்பட்டுள்ளன.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...