கூட்டத்தில் பங்கேற்றார் திலகர்! விழிபிதுங்கி நிற்கும் திகா அணி!!
‘மத்திய வங்கி ஊழல் குறித்து என்னிடம் கேள்வி எழுப்புவதில் பயன் இல்லை’
எம்.பி.பதவி யாருக்கு? முடிவெடுப்பதில் ஐ.தே.க. திணறல்!
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜோன்அமரதுங்கவை நியமிப்பதற்கு கட்சி தலைவர் முடிவெடுத்துள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அதனை ஐ.தே.க.மறுத்துள்ளது.
அதேவேளை, தேசியப்பட்டியல் விவகாரம் குறித்து இவ்வாரத்துக்குள் கட்சி இறுதி முடிவை எடுக்கும் எனவும், அடுத்த சபை அமர்வின்போது புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம் செய்வார் எனவும் ஐதேக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நோபல் பரிசுக்கு ரஷ்ய ஜனாதிபதியின் பெயர் பரிந்துரை!
அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் மிகவும் கவுரவமான பரிசாக கருதப்படும் இந்த விருதுக்கு மேற்படி துறைகளில் சிறந்து விளங்கும் பலரும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ரஷியாவின் பிரபல எழுத்தாளர் செர்ஜெய் கோம்கோவ் இந்த பரிந்துரையை செய்ததாக கடந்த 10 ஆம் திகதி அறிவித்து இருந்தார்.
இந்த பரிந்துரை தொடர்பாக கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த விருதுக்கு முற்றிலும் வேறுபட்ட மக்கள் பரிந்துரைக்கப்படுவது உங்களுக்கு தெரியும். இவை அனைத்தும் அந்தந்த முயற்சிகளுடன் தொடர்புடையவர்கள் முன்வைக்கும் முயற்சிகள். இந்த விவகாரத்தில் அந்த எழுத்தாளர் பரிந்துரைத்துள்ளார். பரிந்துரைக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது.
அந்தவகையில் இந்த பரிந்துரையை விருதுக்காக தேர்வு செய்யப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். இல்லையென்றாலும் எந்த பிரச்சினையும் இல்லை. இது குறித்து வேறு எதுவும் கூறுவது கடினமானது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல்-அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதி நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வேயை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.பி. மீண்டுவர பிரபலங்கள் பிரார்த்தனை
பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் எஸ்.பி.பி.க்கான பிரார்த்தனை தொடர்ந்து நடந்து வருகிறது.
நடிகர் மகேஷ் பாபு
சார் உங்களுக்காக வேண்டுகிறேன் விரைவில் வாருங்கள் என தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வேண்டியுள்ளார்.
நடிகர் சல்மான்கான்
எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என என் அடிமனதில் இருந்து வாழ்த்துகிறேன். தமக்காக பாடியதற்கு நன்றி என டுவிட்டரில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் வேண்டியுள்ளார்.
இசையமைப்பாளர் தமன்
இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், இது மீண்டும் பிரார்த்தனைக்கான நேரம் என்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என அவருடைய அனைத்து ரசிகர்களும் மீண்டும் ஒரு முறை பலமாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிராசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக வேண்டும் எனவும், விரைவில் குணமாகி அவர் வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனக்கு நம்பிக்கை இருக்கு, உலகிற்கு சந்தோஷத்தை கொடுத்த அவர் மீண்டும் வருவார் எனக் கூறியுள்ளார்.
‘ஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை மீண்டும் விற்க முயற்சி’
வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சுமார் 3 லட்சத்து 24 ஆயிறம் ஆணுறைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த ஆணுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பழைய வடிவத்திற்கு கொண்டுவந்து மீண்டும் புதிதான ஒன்று போல பேக் செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான காணொளியில் வியட்நாமின் வட பின் டுஆங் மாகாணத்தில் உள்ள ஒரு கிடங்கில் நடந்த சோதனையில் 360 கிலோ எடை கொண்ட பல பைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் இருந்தன.
இந்த கிடங்கிற்கு உரிமையாளர் என நம்பப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு கிலோ ஆணுறைகளுக்கு 0.17 டாலர்கள் கொடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது போன்ற பயன்படுத்தப்பட்ட எத்தனை ஆணுறைகள் ஏற்கனவே சந்தையில் விற்கப்பட்டுள்ளனவா என்று விசாரணை நடைபெறுகின்றது.
பெங்களூரை வீழ்த்தி வெற்றிக்கனியை ருசித்தது பஞ்சாப்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 6ஆவது போட்டியில் பஞ்சாப் – பெங்களூர் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேஎல் ராகுலில் (69 பந்தில் 132 ரன் – நோட் அவுட் ) அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது,
பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் – ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது.
முதல் ஓவரை காட்ரெல் வீசினார். ஓவரின் 4-வது பந்தில் படிக்கல் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோஹ்லி களம் இறங்காமல் ஜோஷ் பிலிப்பை களம் இறக்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் 2-வது ஓவரின 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் 3-வது ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.5 ஓவரில் 53 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே டி வில்லியர்ஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆர்சிபி 8.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து திணறியது.
பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே நிதினாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுந்தர் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஷிவம் துபே 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயேஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷோனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
69 பந்துகளில் 7 சிக்சர்கள் 14 பவுண்டரிகள் உள்பட 132 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
’20’இற்கு எதிராக குவியும் மனுக்கள் – நேற்று -6 இன்றும் தாக்கல்!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி அரசியல் செயற்பாட்டாளரும், முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் உயர்நீதிமன்றத்தில் நேற்று (24) மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் மட்டுமல்லாது ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புடனேயே நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறுகோரியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் இந்த மனுவில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதனை சவாலுக்குட்படுத்தி நேற்று முன்தினம் (23) உயர்நீதிமன்றத்தல் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள்சக்தி ஆகியவற்றின் மனுக்களும் இதில் அடங்கும்.
இந்நிலையிலேயே 7ஆவது மனுவை கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ளார். நேற்று மாத்திரம் 6 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. மேலும் சில அமைப்புகளும் அடுத்துவரும் நாட்களில் மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.
‘நினைவேந்தல் உரிமையை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம்’
“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.”
– இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளைமறுதினம் சனிக்கிழமை (26) யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், எதிர்வரும் திங்கட்கிழமை (28) வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று அறிவித்துள்ளன. இதையடுத்தே இரா.சம்பந்தன் மேற்படி அறைகூவலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் இன்றிரவு மேலும் தெரிவித்ததாவது:-
“இறந்தவர்களை நினைவுகூர்வது ஜனநாயக உரிமை. அதை எவரும் தடுக்கவே முடியாது. ஒரு மனிதர் எந்த வழியில் உயிரிழந்தாலும் அவரை அவரது சமூகம் நினைவுகூர உரித்துண்டு. இதைத் தடுத்து நிறுத்துவது சர்வாதிகாரச் செயல்.
தற்போதைய ஆட்சியில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ்பேசும் சமூகத்தினரை இலக்குவைத்து அராஜகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு. இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி உயிர்நீத்தவரே தியாக தீபம் திலீபன். 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டி இறுதியில் உயிர்நீத்த அவரின் தியாகத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அவரை நினைவுகூர தமிழ்பேசும் சமூகத்துக்கு முழுமையான உரிமையுண்டு. அந்த உரிமை கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்” – என்றார்.
கல்கந்த தோட்டத்தை மறந்து மலையக பிரதிநிதிகள்
உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழும் மஸ்கெலியா, காட்மோர் கல்கந்த தோட்ட மக்களின் தனி வீட்டு கனவு ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கல்கந்த தோட்டம் மஸ்கெலிய நகரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இது ஒரு தனியாருக்கு சொந்தமான தோட்டாகும். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்தோட்டத்திற்கு தனி வீட்டு திட்டம் என்பது ஒரு எட்டா கனியாகவே காணப்படுகின்றது.
உயரமான ஒரு மலை பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக குடியிருப்புகளுக்கு மேலுள்ள மண் மேட்டில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு கற்பாறைகள் உருண்டு வீடுகளுக்கு சேதம் விளைவித்ததையடுத்து 47 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் காட்மோர் பாடசாலையில் இடம்பெயர்ந்தனர்.
மீண்டும் ஒரு மாதம் கடந்த நிலையில் அவர்கள் அபாய வளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். மாற்றிடங்களில் தனி வீடுகள் அமைத்து தருவதாக தேர்தல் காலத்தில் மக்கள் பிரதிநிதிகளால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எந்நேரத்தில் வேண்டுமானாலும் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் தாம் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் மேலும் சிலர் தோட்டத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை பிரதிநிதிகள் மறந்துவிட்டார்கள் எனவும் எனவே, புதிய அரசாங்கத்திலாவது தமக்கு உரிய தீர்வு வேண்டும், பாதுகாப்பான இடங்களில் உரிய வகையில் வீடுகள் வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
( சாமிமலை நிருபர் _ சே. ஞானராஜ்





