Home Blog Page 3950

சொற் சமர் உக்கிரம்!திகாவுக்கு பதிலடி கொடுத்தார் பிரபு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான முத்தையா பிரபுவுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரத்துக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது.

பிரச்சார மேடைகளில் இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.

முத்தையா பிரபுவை, பரசூட் வேட்பாளர் என்றும், பெட், போல் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி வாக்கு கேட்கும் அவருக்கு, மக்கள் வாக்களிக்ககூடாது என திகாம்பரம் பிரச்சாரம் முன்னெடுத்துவருகிறார்.

மறுபுறத்தில் திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது ஆமை வேகத்திலேயே வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது எனவும், மலையக மக்களுக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை எனவும் முத்தையா பிரபு பதிலடி கொடுத்துவருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட முத்தையா பிரபு,

” நான் பெட்,போல் வழங்கி பிரச்சாரம் முன்னெடுப்பதற்கா திகாம்பரம் கூறுகிறார். அவர்தான் நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக இருக்கிறார். அவர் ஒன்றும் செய்யாததாலேயே எம்மால் செய்யவேண்டியுள்ளது.” – என்றார்.

‘அண்டா’ அரசியல் நடத்தும் கலாநிதியை கைகட்டி நிற்கவைப்பேன் – அனுசா சபதம்

” உருளைக்கிழங்கு பயிரிட்டு லாபம் பெருவதற்கோ குடிநீரை விவசாயத்துக்குக் களவாடுவதற்கோ அல்லது கிடைக்கும் சிற்றூழியர்கள் நியமனத்தை லட்சக்கணக்கில் விற்பதோடு அண்டாவையும் குண்டாவையும் கொடுத்து சேவையென புகழ்ச்சியடைவதற்காகவோ நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

மெராயா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின்போது, இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” மலையக இளைய தலைமுறையினரின் அடையாளத்துக்காகவும் இன்னும் 10 வருடங்களில் எம் சமூகம் அதற்குறிய அடையாளங்களுடனும் வாழ வேண்டுமென்ற நோக்கத்துடனேயே நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் மலையகத்தின் ஒரே ஒரு பெண்ணாக துணிந்து களமிறங்கியள்ளேன்.

பணமும் பந்தாவும் அரசாங்க நிதி ஒதுக்கீடும்தான் முக்கியமென்று என் தந்தை அரசியலில் இறங்கவில்லை கோடி கோடியாக சம்பாதித்து சொத்துக்கள் குவித்திருக்கும் நிலையை என் பாட்டனார் என் தந்தைக்கு விட்டுச்சென்றிருந்தார் – ஆனால் தன் சொத்துக்களை மட்டுமல்ல தனது இளமைக்காலம் முழவதையும் என் தந்தை நம் சமூக செயற்பாடுகளில் முற்றாக இழந்தார். தந்தையாகி எம்மைவிட்டு வருடக்கணக்கில் சிறையில் இருந்தார்.

இன்று சம்பாதிப்பதுதான் எனது நோக்கமென்றால் ஒரு சட்டத்தரணியாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் ஆனால் அது என் தந்தைக்கும் அவரை நம்பிய விசுவாசிகளுக்கும் ஏன் எனக்கு நானே செய்துக் கொள்ளும் துரோகமாகவே அமையும்.

ஆகவே தான் என் தந்தையின் அடையாளத்துக்காக களத்தில் இறங்கியுள்ளேன். எத்தனை வியாபாரிகள் வந்து தடுத்தாலும் என் பயணத்தை நிறுத்த முடியாது.
எத்தனை அல்லக்கைகலாலும் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது.
ஓய்வெடுக்க வேண்டியவர்களின் கோழைத்தனமான செயற்பாடுகளைக் கண்டு நான் ஒரு போதும் ஓடி ஒழிய மாட்டேன். ஒரு பெண்ணுடன் மோதும் பணமுதலைகளைக் கண்டு பின் வாங்க மாட்டேன்.

எல்லா பெண்களிடமும் தன் பலவீனத்தை காட்டுவது போல இந்த வீரனின் மகளிடம் விளையாட்டு காட்ட முற்பட்டால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தை கற்பிப்பேன்.  என்னுடன் கருத்து ரீதியாக மோதமுடியாத கலாநிதிகள் நிச்சயம் என்முன் கைகட்டி நிற்கச்செய்வேன் என்றும் கூறினார்.

‘கொரோனா’வால் தொழில் இழந்தவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா – ஐ.தே.க.!

“கொவிட்- 19 தொற்றின் பாதிப்பாக ஒரு மில்லியனுக்கும்  மேற்பட்டோர்தொழில்களை இழக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொழில் இழந்த சகலருக்கும் 10000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழில்களை இழந்து நாடு திரும்புவோருக்கும்  இந்த நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் பல தலைப்புகளின்கீழ் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘பிரச்சினைகளின் முடிச்சுகளை அவிழ்க்கும் திட்டம்’ எனும் தலைப்பின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

பொருளாதார நெருக்கடிகளால் சிரமப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு அவர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சுயதொழில் வருமானங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழில் இழந்தவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இணையான வருமான வழிகளை உருவாக்கப்பட வேண்டும்.

அரசாங்கத் தொழிலில் இடைநிறுத்தப்பட்டுள்ள சகல கொடுப்பனவுகளும் மீள வழங்கப்படும்.

என்டர்பிறைசஸ் ஸ்ரீ லங்கா யோசனை முறைமையின் கீழ் 50 மில்லியனுக்கு குறைந்த கடன் பெற்றவர்களுக்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கான சலுகைக்காலம் வழங்கப்படும்.

சமூகத்தில் பாதிக்கப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு 10000 ரூபாய்க் கொடுப்பனவு வழங்கப்படும்.

இலங்கையில் சகல தொழில்முயற்சியாண்மைகளும் பாதுகாக்கப்படும். அதற்காக வர்த்தக சந்தையில் காத்திரமான செயற்றிட்டங்கள் மற்றும் ஆபத்தான நிதி செயற்றிட்டங்கள் ஆகியன சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக தனியார் துறைகளுக்கு வழங்கப்பட்டு நிதி பெற்றுக்கொள்ளப்படும்.

கொவிட்-19 ஆசிய அபிவிருத்தி வங்கியின் 20 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண செயற்திட்டம், அத்தகைய சமாந்தரமான செயற்திட்டம் ஊடாக ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு மேலதிகமாக அரசாங்கம் ஊடாக தனியார் வியாபாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்படும்.

இந்த நிதியங்கள் மற்றும் செயற்திட்டம் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், சிறு தொழில ;முனைவோர்கள் மற்றும் சுயதொழில் தொழில்முனைவோர்களை பலமாக்குவோம். அதற்கான நிதி உதவிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கு நீண்ட கால அரச பிணை முறிகளை அந்த தொழில்முனைவோர்களுக்கு வழங்குவோம்.” என்றுள்ளது.

இப்படி மேலும் பல திட்டங்களும் உள்ளன.

‘கொரோனா’ வை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்போம்’ – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (2020.07.16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் ,

கொவிட் தொற்று முதன் முதலாக வந்தபோது அதனை கட்டுப்படுத்த முடியுமானதாயிற்று. கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழு, அத்தியவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு, அரச துறை, சுகாதார துறை, இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். விசேடமாக உளவுத்துறை மற்றும் சுகாதார துறை ஆகியன செய்த அர்ப்பணிப்பை இங்கு நிச்சயம் நினைவுகூற வேண்டும்.

இக்காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்து வருகின்றனர், அது தொடர்பாக உங்களது இங்கு நிபுணர்கள் தெளிவுபடுத்துவர். நாங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்தவர்கள். அதனால் எதிர்காலத்தில் மக்களை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேர்தல் காலம் என்பதால் கொரோனா இரண்டாவது அலை நிலவிவருகிறது என தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் பீதியில் உள்ள நிலையில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தாது செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகும்.

ஊடகவியலாளர்: சுகாதார ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடாமை தேர்தலுக்கு இடையூறாகக்கூடும் என தேர்தல் ஆணையாளர் கூறுகின்றார்.

பிரதமர் – உண்மையில் அந்த வர்த்தமானியை வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட் வருகிறது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி – தேர்தல் குறித்த ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிட தயார். நாளை அல்லது நாளை மறுதினம் வர்த்தமானி வெளியிடப்படும்.

ஊடகவியலாளர் – தேர்தலுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகள் மாத்திரமா? வர்த்தமானியில் வெளியிடப்படும்.

சுகாதார அமைச்சர் – தேர்தல் ஆணையம் முதன்மையான ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரியுள்ளது. தேர்தல் ஆணையம் கோரியுள்ள தேர்தலுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அந்த வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் தேவையான சுகாதார ஆலோசனைகள் அனைத்தையும்

வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்போம். தேர்தல் ஆணையம் எழுத்து மூலமாக கோரியுள்ள ஒழுங்குவிதிகள்  நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளரும் அறிவித்துள்ளார். எனவே அதற்கு நாம் முக்கியத்துவமளித்துள்ளோம்.

ஊடகவியலாளர் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் கூட்டங்களை நடத்துவதை நிறுத்தினாலும், கொரோனா நிலைமையுடன் தேர்தல் கூட்டங்களை நடத்துவது அபாயமானது தானே.

பிரதமர் – சமூகத்தில் கொரோனோ வைரஸ் தொடர்பில் தோன்றிய பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் கூட்டங்களை நடத்துவதை மூன்று தினங்களுக்கு நிறுத்தியது. சுகாதார சட்ட விதிகளை கடைப்பிடித்து நாம் இன்று முதல் மீண்டும் தேர்தல் கூட்டங்களை ஆரம்பிக்கின்றோம்.

ஊடகவியலாளர் – சில சில மாகாணங்களை முடக்குவதற்கான அவசியம் உள்ள போதிலும், தேர்தல் காரணமாக, அந்த பிரதேசங்களை முடக்காதிருப்பதாக குற்றச்சாட்டொன்று அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமர் – நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை.

‘இந்தியாவிலிருந்து மலையகத்துக்கு ஆசிரியர்கள்’

தபால்மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதை காணமுடிகின்றது. தபால்மூல வாக்குகள்தான் வெற்றிபெறும் தரப்பை ஆரம்பத்தில் தீர்மானிக்கும். எனவே, இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிப்பயணம் அரம்பித்துவிட்டது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டன் டிக்கோயா பகுதியில் இன்று (16) மதியம் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” மலையகத்தில் நாம் கணித, விஞ்ஞான பாடசாலைகளை உருவாக்கினோம். அனைத்து பௌதீக வளங்களையும் கொடுத்தோம். ஆனால், சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது. எனவே,  கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்ககூடிய 100 ஆசிரியர்களை இந்தியாவில் இருந்து வரவழைப்போம் என நான் யோசனை முன்வைத்திருந்தேன். பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்தன. இதனால் திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

எதிர்காலத்தில் இந்திய ஆசிரியர்களை வரவழைக்ககூடியதாக இருந்தால் அதனை நிச்சயம் செய்வோம். அவ்வாறு இல்லாவிட்டால் இங்குள்ளவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படவேண்டும். நான் மாகாணசபையில் இருக்கும்போது இவ்வாறான பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை., சர்வமத தலைவர்களிடமும் ஆசியும் ஆதரவும் திரட்டி வருகின்றோம். நான் இந்து சமயத்துக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளேன். எதிர்காலத்திலும் ஆற்றுவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

5 ஆம் திகதிக்கு பிறகு நானே அமைச்சர் – அரவிந்தகுமார் சூளுரை

” எதிர்வரும் 5ஆம்  திகதி நடைபெறவுள்ள தேர்தலில்,  ஐக்கிய மக்கள் சக்தி அமோகமாக வெற்றியடைந்து பலம் பொருந்திய ஆட்சியை அமைப்பதுடன், பதுளை மாவட்டத்தில் நானும், தம்பி வடிவேல் சுரேசும் பாரிய வெற்றியையும் ஈட்டுவோம். அவ் வெற்றியின் அடிப்படையில், நான் அமைச்சு பதவியைப் பெற்று, அப்பதவியுடனேயே மீண்டும் எமது மக்களை சந்திப்பேன்.”

இவ்வாறு பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

ஹப்புத்தளைப் பகுதியின்இ சர்வட்டி குறிஞ்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மூன்றலில்  (இன்று) 16.07.2020ல் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கடந்த நான்கு வருடங்களில் நான் எமது மக்களுக்கு ஆற்றிய சேவைகளை 24 பக்கங்களைக் கொண்ட விபரக்கொத்தினை பத்திரிகை வடிவில் தயாரித்து, எமது மக்களிடம் சமர்ப்பித்திருக்கின்றேன்.  அந்த நான்கு வருடங்களில் எனக்கு அரசினால் கிடைக்கப்பெற்ற நான்கு கோடி ரூபா நிதி உள்ளிட்ட எனது முயற்சிகளினால் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபா நிதியுடன், பல கோடி ரூபா நிதியில் எமது மக்களுக்கு சேவையாற்றியுள்ளேன்.
அச் சேவைகளின் தொகுப்பினை மக்களிடம் வழங்கியுள்ளேன். அதனை எமது மக்கள் பார்வையிட்டுக் கொள்ள முடியும்.  அந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக நான் ஆற்றிய மக்கள் சேவைகள் குறித்த தொகுப்பினைப் பார்த்த எமது மக்கள் வியப்பும் பிரமிப்பும் அடைந்துள்ளனர். அதனை எமது மக்களே நேரடியாக என்னிடம் கூறி வருகின்றனர்.
மக்கள் எனக்கு வழங்கிய ஆணைக்கமைய பாரிய சேவைகளையாற்றிவிட்டே மீண்டும் ஆணையைப் பெற மக்களிடம் வந்துள்ளேன். எனது சேவைகளை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பேன். இதற்காகவே எமது மக்களிடம் மீளவும் வந்திருக்கின்றேன்.
ஆகவே,  எமது மக்கள் தொழிற்சங்க, அரசியல் பேதங்களுக்கப்பால்,  சமூக ரீதியில் ஒன்றிணைந்து  எனது வெற்றியை உறுதிப்படுத்துவார்களென்ற பாரிய நம்பிக்கை எனக்குண்டு.
என்னை பொறுத்தவரையில் எனது மனசாட்சிக்கு விரோதமாக நான் எதனையும் செய்யவில்லை. சுயநலம் மற்றும் தன்னலம் என்பது என்னிடம் கிடையாது. எனது குடும்ப நலன்கள் குறித்து சிந்தித்ததும் கிடையாது. 24 மணித்தியாலயங்களும் மக்களைப் பற்றிய சிந்தனையுடனேயே, நான் இருந்து வருகின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே இருப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றேன்.
இத்தேர்தல் முக்கியமானதொரு தேர்தலாகும். எமது சமூகத்திற்கான அரசியல் பிரதிநிதித்துவங்கள் அவசியமாகும். எமது பிரதிநிதித்துவங்கள் மக்கள் மன்றங்களில் இல்லாது போனால், நாம் அரசியல் அனாதைகளாகிவிடுவோம். ஆகவே எமது மக்கள் கிரமமாகவும், முறையாகவும் நடந்து கொள்ளல் வேண்டும்.” – என்றார்.
எம். செல்வராஜா, பதுளை.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் அறுவர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 06 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,OO7 ஆக அதிகரித்துள்ளது.

656  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக இருக்கின்றது.

அனுதாப ஓட்டு திரட்டும் முயற்சியில் அனுசா – லோரன்ஸ் குற்றச்சாட்டு

” மலையக இளைஞர்களை தவறாக வழிநடத்தாதீர்கள், பிழையான தகவல்களை கொண்டு செல்லாதீர்கள். மலையக மக்கள் முன்னணி என்றுமே இளைஞர்களை தவறாக வழிநடத்தியது இல்லை. தோல்வியை கண்டு பயந்து போயிருக்கின்றவர்கள் எங்கள் மீது பழி சுமத்துகின்றார்கள். ஆனால் உண்மையான நிலைமை என்ன என்பதை மக்கள் அறிவார்கள்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ்  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சுயேச்சை குழுவில் போட்டியிட்டுக் கொண்டு எங்கள் மீது பொய்யான பழி சுமத்தி அதன் மூலம் அனுதாபத்தை பெற்றுக் கொண்டு வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்கின்றார்கள். ஏன் எங்களை விமர்சனம் செய்கின்றீர்கள், நீங்கள் இதுவரை இந்த மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதை மக்களிடம் கூறி வாக்குகளை வாங்க முயற்சி செய்யுங்கள்.
அக்கரபத்தனையில் உண்மையில் நடந்தது எங்களுடைய மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரான கிளாசோ அக்கரபத்தனை கீழ் பிரிவை சேர்ந்த பாலகிருஸ்ணன் பாலசுப்பிரமணியம் என்பவரே தாக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிசார் கோடரி சின்ன ஆதரவாளர்கள் மூவரை கைது செய்து அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த பொழுது அவர்களை இன்று வரை (17.07.2020) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுவே உண்மையான சம்பவம் எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி மலையக இளைஞர்களை பிழையான வழியில் கொண்டு செல்ல வேண்டாம்.இன்று மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் குடும்பங்கள் நீதிமன்றத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அழைந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டும்.
எனவே ஒற்றுமையாக இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களை தேர்தலுக்காக பிழையான வழியில் கொண்டு சென்று அவர்களுடைய ஒற்றுமையை இல்லாது செய்துவிட வேண்டாம் . உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தேர்தலை மாத்திரம் மையப்படுத்தி மக்களை பளிக்கடாவாக பயன்படுத்தாதீர்கள்.” – என்றார்.
.

மின் கட்டணம் தொடர்பான விசேட அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக மின் பாவணையாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன மேற்படி தகவலை வெளியிட்டார்.

” கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மின் கட்டணத்திற்காக மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த குழுவின் சிபாரிசு திறைசேரியின் அதிகாரிகள் மூலம் தொடர்ந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில்  பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணப் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல்.

 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவனையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்துவதை தாமத்தினால் மின்துண்டிப்பு மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

‘புதிய அரசில் அமைச்சுப் பதவிகள் பெறும் எண்ணம் இல்லை’

“புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, ‘அரசியல் தீர்வு கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும் எனச் சொல்ல முடியாது.

அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது அத்தியாவசிய தேவை. புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச எமக்குப் பலம் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சுப் பதவி தொடர்பான சுமந்திரனின் இந்தப் பேச்சு அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன.

இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசில் அமைச்சுப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளுமா என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, “புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையே இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றிப் பேச வேண்டிய அவசியமும் இல்லை” என்று உறுதியாகப் பதிலளித்தார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...