தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தான் எதிர்கொண்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே 29 எம்எல்ஏ.க்களுடன் வலுவான அரசியல் பயணத்தைத் தொடங்கியது.
ஆனால், அதன்பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக் கூட்டணியாக களம் கண்டு தோல்வியை சந்தித்தது.
2021-ல் அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. வரும் தேர்தலில் 7 தொகுதிகள் வரையிலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2028 T20 உலகக் கிண்ணம்: நேரடியாகத் தகுதி பெற்ற 12 நாடுகள்!
2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள 12 அணிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இத்தொடரை இணைந்து நடத்துவதால், அவை போட்டியை நடத்தும் நாடுகள் என்ற அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
ஏனைய அணிகள் தரவரிசை மற்றும் கடந்த தொடரின் செயல்பாடுகளின் அடிப்படையில் இடம்பிடித்துள்ளன.
நேரடியாகத் தகுதி பெற்றுள்ள 12 அணிகள்:
அஸ்திரேலியா (போட்டியை நடத்தும் நாடு)
நியூசிலாந்து (போட்டியை நடத்தும் நாடு)
இந்தியா
இலங்கை
தென்னாபிரிக்கா
இங்கிலாந்துமேற்கிந்தியத் தீவுகள்
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
பங்களாதேஷ்
அமெரிக்கா
அயர்லாந்து
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், மீதமுள்ள 8 இடங்களுக்கான அணிகள் பிராந்திய தகுதிச் சுற்றுப் போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.
இந்த 12 அணிகளில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ICC தரவரிசையின் அடிப்படையில் கடைசி நேரத்தில் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
பதுளை, பசறை பள்ளகெட்டுவ பகுதியில் அமைந்துள்ள நியூபாக் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீப கால மழை காரணமாக கொழுந்து பரிமாற்ற அளவு குறைந்துள்ளதாகவும், இதனால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அதிக கொழுந்தை பறிக்குமாறு அழுத்தம் கொடுத்து, பணிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், நாளாந்த ஊதியம் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதும் தொழிலாளர்களின் முறைப்பாடாகும்.
இந்த நிலைமையை எதிர்த்து, நியூபாக் மேல்பிரிவு, நியூபாக் கீழ்பிரிவு மற்றும் கோஸ்டா பிரிவுகளில் சேர்ந்த சுமார் 150 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனைக்கு சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளும், தொழில்சங்க பிரதிநிதிகளும் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், பேச்சுவார்த்தைகள் எவ்வித பயனுமின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜரதினம் சுரேஷ்குமார்
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நெதர்லாந்து!
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சுமுகமான, ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், கூட்டாண்மைக்கான புதிய வழிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும், தொடர்ச்சியான உரையாடலுக்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் நெதர்லாந்தின் துணைத் தூதுவர் இவான் ருட்ஜென்ஸும் (Iwan Rutjens) கலந்து கொண்டார்.
இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இந்த வருடம் முதல் அதை 3 வருடமாக மாற்றியுள்ளனர். அதன்படி 2026-29-க்கான நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி போட்டியின்றி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் ஏற்கெனவே இச்சங்கத்தில் தலைவராக இருந்தவர். நடப்பு தலைவராக இருந்த ஆர்.வி.உதயகுமார் பொதுச் செயலாளராகவும் செயலாளராக இருந்த பேரரசு பொருளாளராகவும் துணைத் தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
5 பேர் கொண்ட இணைச் செயலாளர்கள்,மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் எழில், சரண், சுந்தர்.சி, ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் என்ற நம்பி ஆகியோர் இணைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 17 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமா?
ஈரான்மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க படைகளுடன் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்திவருகின்றார் என தெரியவருகின்றது.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் – தெஹ்ரான் இடையேயான பேச்சு ஜெனீவாவில் நடைபெறுகின்றது.
இந்த நிலையில், உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவிகிதத்தைக் கையாளும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை திங்கள்கிழமை முதல் பிரம்மாண்ட போர் பயிற்சியைத் தொடங்கியது.
இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று, ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ஹார்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த உலகளவிலான பதற்றத்துக்கு மத்தியில், எஃப்-35, எஃப்-16, எஃப்-22 ரகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி 13 போர்க் கப்பல்கள், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போh்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டவையும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது.
இதனிடையே, புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், “ஜெனீவாவில் ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பல விஷயங்களில் உடன்பாடு எட்டவில்லை. அதுகுறித்து இரு வாரங்களுக்குள் மீண்டும் ஈரானியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண டிரம்ப் முன்னுரிமை அளிக்கிறார். ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது புத்திசாலித்தனமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும், ஈரானில் நடந்த போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதமும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியது.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி கட்டுப்பாடு குறித்து விதிக்க ஒப்புக்கொள்வோம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. அணுசக்தி மட்டுமின்றி, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
இலங்கை, சிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!
ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று களம் காண்கின்றன.
சூப்பர்-8 சுற்றுக்கான அணிகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அணிகளின் தற்போதைய நிலை மற்றும் அடுத்த கட்டத்திற்கான தயாரிப்பை மதிப்பீடு செய்ய இன்றைய போட்டி பலப்பரீட்சையாக அமையும்.
இந்தப் போட்டி Colombo (RPS) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும்.
அதேவேளை, 37-ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி இந்தியாவின் கொல்கத்தாவில் அமைந்துள்ள Eden Gardens மைதானத்தில் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே சூப்பர்-8 சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளதால், இப்போட்டியின் முடிவு அடுத்த கட்ட முன்னேற்றத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இருப்பினும், அணியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
அதேவேளை, 39-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதவுள்ளன.
மரக்கறி விலைப்பட்டியல் (19.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு, தனது அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது:-
“அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டத்தரணி தம்பதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது, நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாரிய கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்றும், இது ஒரு தனிப்பட்ட ரீதியிலான சம்பவம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது வேடிக்கையாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது.
அமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருக்கு அரசு வழங்கும் ஒரு ‘பச்சைக்கொடி’ போன்றதாகும்.
பட்டப்பகலில் மக்கள் நடமாடும் வீதிகளில் அரங்கேற்றப்படும் கொலைகளை, ‘இயற்கையான நிகழ்வுகள்’ எனக்கூறி நியாயப்படுத்த அரசு முயல்கின்றதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம்.” – என்றார்.
நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், நடப்பு ஆண்டின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சுமார் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டார். இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள அரசு, மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேலும் தெரிவித்தார்.















