Home Blog Page 72

“சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை”

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார்.

இன்று (11) பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

நாம் அனுபவித்த துன்பங்களை நமது பிள்ளைகள் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இந்த வேலைத்திட்டத்தின்போது பொறுமையாக காத்திருக்க யாருக்கும் நியாயமான உரிமை இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இவ்விடயத்தில் தன்னைப் பற்றி தான் உறுதியளிப்பதாகவும்,மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என்ற வகையில் அனைவருக்கும் உள்ள பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய அளவிலான அரசியல் தலைமை, செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு பரந்த பிரச்சாரத்தின் ஊடாக சமூகத்தில் இந்த அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வலையமைப்பை அகற்றவும், புனர்வாழ்வு வாய்ப்புகளை வலுப்படுத்தவும், போதைப்பொருள் பயன்பாட்டைக் கைவிட விரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பரவலான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் அந்த மக்களை அதிலிருந்து விடுவித்து அவர்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மாகாண வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 91,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதோடு,1818 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் நீண்டகால விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 1566 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இக்குறுகிய காலத்தில் இலங்கை பொலிஸார் ஆற்றிய தீவிர பங்களிப்புக்காக நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றிய 62 பொலிஸ் அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதியின் கைகளினால் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க:

” இங்குள்ள அனைவரும் பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்கள்.நாம் எத்தகையை தொழிலில் ஈடுபபட்டாலும் அனைவருக்கும் நாட்டைப்பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்பு உள்ளது. அது என்ன? இருப்பதை விட சிறந்த நாடாக மாற்ற வேண்டும்.

எமது பிள்ளைகளுக்கு இதனை விட சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இது தான் எம் அனைவருக்கும் உள்ள எதிர்பார்ப்பாகும். அந்தப் பயணத்தில் நாம் பல துறைகளில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். எமக்கு எவ்வாறான பொருளாதாரம் உரித்தானது என்று அனைவரும் அறிவோம்.

30 வருடங்களாக யுத்தத்தினால் தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக கூறினோம். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்னர் நாடு வங்குரோத்து அடைந்தது. உண்மையான காரணம் யுத்தமல்ல. நாம் பின்பற்றிய பொருளாதார கொள்கையும் மோசடிகளும் லஞ்ச ஊழல்களும் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாக அமைந்தன. அவ்வப்போது பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்களை கூற முயன்றோம்.

எமது பொருளாதார பின்னடைவுகளை பல்வேறு காரணங்கள் காட்டினோம். சிலவேளை யுத்தத்தையும் சிலவேளை இயற்கை அனர்த்தங்களையும் தொற்றுநோய்களையும் காரணங்காட்டினார்கள்.

வீழ்ச்சிகளுக்கு காரணம் தேடினார்கள். ஆனால் எந்த நிலைமைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய பொருளாதரத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்தம் வெடிக்கும் நிலை ஏற்பட்ட போது எமது நாடு வீழ்ச்சியடையும் என கருதினார்கள். மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்ட போது எமது நாடு வீழும் என நினைத்தார்கள். அமெரிக்கா எமது நாட்டுக்கு வரிவிதித்த போது நாடு வீழ்ச்சியடையும் என்றார்கள்.

டித்வா சூறாவளி ஏற்பட்ட போது எமது நாடு சரிவடையும் என்று கருதினார்கள். அவ்வாறான எந்தவொரு நிலைமையிலும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் நாம் பணியாற்றுகிறோம்.

டித்வா சூறாவளி நிலைமையில் நாடு பின்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பலமாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நிதி ஒழுங்கையும் பொருளாதாரத்தையும் தயார்படுத்தினோம். உலக வங்கி அறிவித்துள்ளவாறு 4.1 பில்லியன் டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது. 1.2 டிரில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது எமது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 4% ஆகும். எமது பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பட்ட சேதத்தை தாங்கிக் கொள்ளும் வகையிலான பொருளாதாரத்தை நாம் உருவாக்கினோம். 50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை இந்த டித்வா சூறாவளி அனர்த்தத்தில் இருந்து மீள்வதற்காக ஒதுக்கினோம். அதற்காக ஒரு சதம்
கூட கடன் வாங்கவில்லை. பணம் அச்சிடவில்லை.எமது திறைசேரிக் கணக்கில் 120 000 கோடி பணம் இருந்தது. அதில் 50 000 கோடியை இதற்காக ஒதுக்கினோம்.

நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். பலமான பொருளாதாரத்தை நோக்கிய திசைக்கு செல்கிறோம்.

அடுத்ததாக எமது நாட்டில் பலமான வெளிநாட்டுக் கொள்கைக்குப் பிரவேசிக்க வேண்டும். உலகில் வெளிப்படையாக அமைதியாக இருப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் மோதலுடன் கூடிய உலகமே காணப்படுகிறது. வர்த்தக சந்தையை பகிர்வதில் யுத்தம் நடைபெறுகிறது. இந்த மோதல் நிறைந்த உலகில் எமது நிலைகளை பாதுகாத்து எந்தத் தரப்பின் பக்கமும் சாயாது
சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இது எமது நாட்டை கட்டியெழுப்புவதில் முக்கியமான காரணியாகும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான அரச சேவை அவசியம். முன்னேற்றகரமான மற்றும் பலமான அரச சேவையை உருவாக்க அயராது பாடுபடுவோம். டிஜிட்டல்மயமாக்கல், அரச தேவைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல்,வாகனங்கள் வழங்கி சிறந்த அரச சேவையை உருவாக்க வேண்டும். அரச சேவையை ஈர்ப்புள்ள இடமாக மாற்ற வேண்டும்.

2025 இல் அரச சேவை சம்பளத்தை உயர்த்துவதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கினோம். 2026 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்குவதற்காக மேலும் 11 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். சம்பள உயர்வின் மூன்றாம் கட்டத்திற்காக 2027 இல் மேலும் 11 ஆயிரம் கோடி செலவாகும். சம்பள உயர்விற்காக மாத்திரம் 33 ஆயிரம் கோடி செலவிட வேண்டும்.அரச சேவையை ஈர்ப்புள்ள இடமாகவும் அரச சேவைக்கு திருப்தியான வாழ்வையும் வழங்கும் நோக்கம் எமக்குள்ளது.

மாவட்ட செயலாளர் முதல் கிராம அலுவலர் வரையான அரச பொறிமுறையானது எமது நாட்டின் இருப்பின் முக்கியமான காரணியாகும். பொலிஸ் , முப்படை என்பன எமது நாட்டின் இருப்பின் பிரதானமானவையாகும். உங்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினை இருப்பதை நாம் அறிவோம். இராணுவத்திலுள்ளோரின் உணவு கூப்பன் தொடர்பான பிரச்சினை, பொலிஸாரின் இடர் கொடுப்பனவு என்பன தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். எமக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள். 2027 மூன்றாவது சம்பள உயர்வை வழங்கிய பின்னர் வரவு செலவுத்திட்ட செலவுகள் குறித்து கவனம் செலுத்தி எஞ்சிய கொடுப்பனவுகள் தொடர்பில் ஆராய்வோம். நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான அரச பொறிமுறை அவசியம்.

அடுத்து சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பிரஜையொருவருக்கு அநீதி நடந்தால் அவர் எங்கு செல்ல வேண்டும். அவர் பொலிஸிற்குச் செல்வார். தனக்கு நடந்த அநீதிக்கு அவர் நீதியை எதிர்பார்ப்பார். அவர் நீதிமன்றத்தை நாடுவார். அநீதிக்கு நீதியை எதிர்பார்ப்பார்.

அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் இது மிகவும் அத்தியாவசியமானது. எனவே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம். சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சட்டம் சிலந்திவலையைப் போன்றது என்பார்கள். சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும் பெரியவை தப்பித்துக் கொள்ளும் என்பார்கள்.

இவ்வாறு தான் பொதுமக்கள் மத்தியில் சட்டம் தொடர்பான நம்பிக்கை காணப்படுகிறது. ஆனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். ஒருவருக்குள்ள அதிகாரம் ,செல்வம் என்பவற்றினால் சட்டத்தில் இருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கக் கூடாது. பணம்,அதிகாரம் இருந்தால் மட்டுமன்றி நியாயமாக சட்டம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு எழவேண்டும்.

சட்டம் தன்னிடம் வர முடியாது.தன்னிடம் அதிகார வளையம் இருக்கிறது என சட்டத்தை புறக்கணிக்கும் சிலர் இருந்தார்கள். அவ்வாறான நாட்டினால் முன்னோக்கிச் செல்ல முடியாது. அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சட்டத்திற்க அஞ்ச வேண்டும். அந்த நிலை எமது நாட்டில் இல்லை.

2026 ஆம் ஆண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர்கொடுக்கும் வருடமாக இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்.அனைவரும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் முன்னேறியது கிடையாது.

சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகளின் அதிகாரம் மேலோங்கியிருக்கும்.சட்டம் இல்லாத இடத்தில் குற்றவாளிகள் உச்சத்தில் இருப்பார்கள். இது தான் நிஜம். அவ்வாறான நாட்டினால் முன்னேற முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திய நாட்டை உருவாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,அமைச்சின் செயலாளர், பொலிஸ் மாஅதிபர்,முப்படை அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். கருப்பு நாடுகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.

சட்டத்தின் வீழ்ச்சியே அந்த நாடுகளில் காணப்படுகின்றன. சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகள் நீச்சலடிப்பார்கள்.சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் நாட்டை நாம் உருவாக்குவோம். எமக்கு எவ்வாறான நாடு தேவை. நாம் பெற்ற துன்பங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது. நாம் எதிர்கொண்ட சவால்களை எமது பிள்ளைகளும் முகங்கொடுக்காத நாடு அவசியம்.

இதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான சவால் எமது பிள்ளைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பதாகும். நான் முன்பு குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவை என்ற போதும் அவை அனைத்தையும் வெற்றி கொண்டாலும் பயனிருக்காது. கிராமங்கள் தோரும்
இந்தப் போதைப் பொருள் வியாபித்துள்ளது. ஹெரோயின் தூரப் பகுதிகளில் இருந்து பிடிபட்டுள்ளன.

போதைப் பொருளுக்கு அடிமையாவதில் முதலில் அந்தப் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து தாய் தந்தையர்கள் பலியாகின்றனர். அடுத்து அவரின் குடும்பம். போதைப் பொருளுக்க அடிமையானவரின் குடும்பமானது முழு ஊருமே நிராகரிக்கும் குடும்பமாகிறது. அந்தப் பெற்றோரின் எதிர்பார்ப்பு முழுமையாக வீழ்ச்சியடைகிறது.குழந்தை பிறக்கும் போதே அந்த பேற்றோருக்கு பாரிய எதிர்பார்ப்பு இருக்கும். பிள்ளை போதைப் பொருளுக்கு அடிமையாகாத சமூகத்தினால் புறக்கணிக்கப்படாத நபராக இருப்பார் என்று,

சகோதரியினால் திருமணம் செய்து கொள்ள முடியாது. முழுக் குடும்பமும் பாதிக்கப்படும். கிராம மக்களும் அச்சமடைவர். பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். முழு சமூகமும் பாதிக்கப்படும். எனவே நாம் என்ன செய்ய வேண்டும். எந்த பிள்ளையும் இந்த அச்சுறுதலுக்கு பலியாகாத சமூகத்தை உருவாக்க வேண்டும். எந்தவொரு தாயோ குடும்பமோ பாதிக்கப்படாத சமூகத்தை உருவாக்க வேண்டும். இந்த அச்சுறுத்தல் இதனோடு நின்றுவிடாது.

அண்மைக் காலத்தில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. இந்த துப்பாக்கி சூடுகளின் முழுமையான பின்னணி என்ன? போதைப் பொருள் சந்தையை பகிர்ந்து கொள்வதற்கான மோதலே உள்ளது. மாத்தறையில் போதைப் பொருள் வர்த்தகம் செய்பவர் களுத்துறைக்கு வந்தால் அங்கு தாக்கப்படுவார். களுத்துறை நபர் கம்பஹவிற்கு சென்றால் அங்கு தாக்கப்படுவார்.

இவ்வாறான சட்டவிரோத ஆயுதக் குழுக்கள் உருவாக இந்த போதைப் பொருள் காரணமாக அமைந்துள்ளது. எனவே எமது பிள்ளைகள் சட்டவிரோதமான ஆயுதங்களை கையாளும் நிலை உருவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவோர் 20-30 வயதுடையோர். அவர்கள் ஆயுதக் குழுக்களின் அங்கத்தவர்களாக மாறியுள்ளனர். அவர்கள் பெருமளவு பணத்தை திரட்டுகின்றனர்.

பொதுவாக குடு , ஹெரோயின் ஒரு கிலோ ஒன்றரை கோடியாகிறது. 200-300 கிலோ ஹெரோயின் பிடிபடுவதை நீங்கள் அறிவீர்கள். 200 கிலோவின் பெறுமதி எவ்வளவு இருக்கும்? 300 கோடி ரூபா பெறுமதியாகிறது. இந்த வலையமைப்புடன் எந்தளவு பணம் புலங்குகிறது என்று தெரிகிறதா?

அண்மையில் 2100 கிலோ கிராம் பிடிபட்டது. 3000 கோடி பெறுமதியுடையது. இந்த பணத்தினால் என்ன செய்கிறார்கள். இந்தப் பணம் அரச பொறிமுறைக்குள் நுழைகிறது. சில பலவீனமான அதிகாரிகள் அந்தப் பணத்திற்கு விலைபோகின்றனர்.

பல இலட்சம் செலவிட்டு திருட்டுத்தனமாக கடவுச் சீட்டு தயார் செய்கிறார்கள். பல இலட்சம் செலவிட்டு திருட்டுத் தனமாக வாகனத்தை பதிவு செய்கின்றனர். இலட்சங்களை செலவிட்டு
சட்டத்தில் இருந்து தப்ப முயல்கிறார்கள். இறுதியில், இந்தப் பணத்தினால் என்ன நடக்கிறது? அரச பொறிமுறையை சீர்குலைக்கிறது.

அது அத்துடன் நின்றுவிடுவதில்லை. அவர்கள் அரசியலுக்குள்ளும் நுழையத் தொடங்குகிறார்கள். சில பிரதேச சபைத் தலைவர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் அந்தப் பணத்தைச் செலவிட்டு கட்சிகளை உருவாக்குகிறார்கள். பிரதேச சபை , மாகாண சபை,பாராளுமன்ற அதிகாரம் அந்த போதைப் பொருளுடன் தொடர்புள்ள வலையமைப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பொறிமுறை எந்தளவு அழிவு வரை செல்கிறது என்பதை உணர வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களுக்குப் பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இன்னும் சில காலம் செல்லும்போது, போதைப்பொருள் வர்த்தகர்களே அரசியல்வாதிகளாக மாறிவிடுவார்கள்.

கட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே பல பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. அவர்கள் பிரதிநிதித்துவப்படுவதை அறிவோம். இதனை இவ்வாறு வளர விட முடியாது.

ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கும், உங்கள் அனைவருக்கும் ‘நடப்பது நடக்கட்டும்’ என்று ஒதுங்கி இருக்க முடியும். எமது பிள்ளை இன்னும் பாதிக்கப்படவில்லை தானே என இருந்து விடலாம். எமது வீட்டில் இந்தப் பிரச்சினை இல்லையென கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இந்த அழிவு ஒரு கிராமத்தையோ, வீட்டையோ, குடும்பத்தையோ விட்டுவைக்காமல் தேசிய அளவில் பரவும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அப்படியாயின் நாம் என்ன செய்யவேண்டும்.

கண்டு கொள்ளாமல் இருப்பதா? அல்லது மோத வேண்டுமா? ஒதுங்கி நிற்பதற்கு நம் எவருக்கும் நியாயமான உரிமை கிடையாது. எனவே, இதனைத் தோற்கடிக்க நாம் அனைவரினதும் தலையீடு அவசியம். என்னைப் பற்றி என்னால் உறுதியளிக்க முடியும். அதேபோல் எமது அரசாங்கம் இது குறித்து ஏகோபித்த, பின்வாங்காத தீர்மானத்தில் இருக்கிறது.

எமது அரச அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் என நாம் அனைவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர் மறைந்திருப்பவர் அல்ல, அவர்கள் இனி சமூகத்தில் ஒளிந்திருக்கவில்லை. ஆனால், அவர்கள் சமூகத்தைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் எமது சிறைச்சாலை அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.அண்மையில் குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்கையில் நான் சுதந்திரமான மனிதன் என்று அவர் சொன்னார். அவர் அந்த சமயம் தடுப்புக் காவலில் இருந்தார். தன்னை சிறையில் அடைப்பதால் தான் சுதந்திரமான மனிதன் என அவர் நினைக்கிறார். அவருக்கு சிறையில் சுதந்திரமாக இருக்க முடிகிறது . பல தடவைகள் சிறைக் கூடங்களில் சோதனை செய்தோம்.பல தடவைகள் கைபேசிகள் பிடிபட்டன. தொடர்புகள் இருப்பதாக தகவல் கிடைத்தன.இவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.

ஜனநாயகம், மனித உரிமைகள் இவை அனைத்தையும் நாம் மதிக்கிறோம். இவை அனைத்திற்கும் மேலாக மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாம் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே, அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க நாம் தயாராக உள்ளோம். இதனை தொடர்ந்து முன்னெடுக்க எமக்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம்.

நாடு முழுவதும் கிராம அலுவலகர் மட்டத்தில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களை’ ஆரம்பித்துள்ளோம். கிராமத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இதற்குப் பலியாவது எமது பிள்ளைகள் தான். எவரும் பிறக்கும்போது போதைப்பொருளுக்கு அடிமையாகும் தேவையுடன் பிறப்பதில்லை. அவர் போதைக்கு அடிமையாவதை தடுக்க சமூகம் தவறிவிட்டது. சட்டத்தை பாதுகாக்கும் நிறுவனங்கள் போதைப் பொருட்கள் கிடைக்கும் வழிகளை தடுக்க தவறிவிட்டன.மதத்தலைவர் ,பிக்குமார், மௌலவிமார் ,குருக்கல் வழங்கும் போதனைகள் இந்த அச்சுறுத்தலுக்கு அடிமையாவதைத் தடுக்க போதுமானதாக இருக்கவில்லை. எனவே, இதற்கு அடிமையாவது அந்த இளைஞனுடைய தவறு மாத்திரம் தானா.

நம் அனைவருக்கும் கைவிட முடியாத ஒரு பொறுப்பு இருக்கிறது. அவருக்கு போதைப் பொருள் கிடைக்கும் வழியை தடுக்க பொலிஸினால் முடியவில்லை. எமது மதம் எமது போதனைகளினால் அவர்கள் பலியாவதை தடுக்க முடியவில்லை. எமது சமூகமும் தவறிவிட்டது. அப்படியாயின் போதைக்கு அடிமையானவர் மீது விரல் நீட்டுவதைப் போன்றே எமக்கும் பொறுப்பிருப்பதை உணர வேண்டும்.

இதில் இருந்து மீள்வதற்கான வழி என்ன? நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தயாராக வேண்டும். அரசியல் அதிகார பீடமாக நாமும், பொலிஸார், முப்படையினர் என நாம் அனைவரும் ஒரே சக்தியாக இதற்கு எதிராக அணிதிரள வேண்டும். அரச அலுவலகங்களில் இந்த அச்சுறுத்தலை நீக்குவதற்கு திட்டம் தயாரித்துள்ளோம். இந்த அச்சுறுத்தல் பல இடங்களில் பரவியுள்ளன. கிராமம் கிராமமாக இதனை ஒழிக்க வேண்டும். சில காலத்தினுள் இதனை சாதிக்க முடியும் என நான் கருதவில்லை. இதற்கு சில வருடங்கள் நீடிக்கக்கூடிய, பின்வாங்காத நீண்டகால வேலைத்திட்டம் அவசியம். போதைப்பொருள் நாட்டிற்குள் வரும் வழிகளை நாம் முடக்க வேண்டும். அதற்காக குறிப்பாக கடற்படையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.அண்மையில் கடற்பரப்பில் பாரியளவு போதைப் பொருட்களை கடற்படை கைப்பற்றியது. அதேபோல் நிலப்பரப்பில் விநியோகிக்கப்படும் வலையமைப்பை முடக்குவோம். அதற்காக எமது பொலிஸார் அதிரடிப்படையுடன் இணைந்து சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பாரிய பணியை ஆற்றி வருகின்றனர்.இதனுடன் தொடர்புள்ள குற்றவாளிக் குழுக்களை கைது செய்ய வேண்டும். பலர் கைதாகியுள்ளனர். பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கைது செய்யவேண்டும். அதேபோல், இதனால் பாதிக்கப்பட்டவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாடு முழுவதும் புனர்வாழ்வு நிலையங்களை அமைப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது. எமது மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் அனைவரையும் இணைந்து ஒரு தேசிய சபை நிறுவப்பட்டுள்ளது. அதில் பரந்தளவில் ஆராயப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு மீண்டும் அவரது வாழ்வை பெற்றுக்கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

உங்கள் உறவினர் ஒருவர் அடிமையான குடும்பத்திற்குச் சென்று பாருங்கள். நண்பரின் வீட்டுக்குச் சென்று பாருங்கள். தற்பொழுது அடிமையானவரை புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் வாழும் நாம், இந்த பேரழிவு குறித்து நன்கு அறிந்துள்ள நாம், இதிலிருந்து எமது பிள்ளைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நாம் முன்வராவிட்டால், வேறு யார் முன்வருவார்கள்? இதனை நாமே செய்ய வேண்டும். எனவே, நாம் ஒன்றிணைந்து இந்தப் பேரழிவைத் தோற்கடிப்போம்.

இதில் எமது மகா சங்கத்தினருக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். உங்களது போதனைகளில் ஒரு 5-10 நிமிடங்கள் இந்தப் பேரழிவு குறித்து சமூகத்திற்கு ஒரு செய்தியை வழங்கினால், எம்மால் ஒரு பாரிய சமூகக் கருத்தை கட்டியெழுப்ப முடியும். பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் இந்தச் செய்தியை சமூகத்திற்குக் கொண்டு சென்றால், இதனை ஒரு சமூக நிலைப்பாடாக மாற்ற முடியும். எனவே, இது அரசாங்கம், பொலிஸ், இராணுவம் ஆகியவற்றின் பணி மாத்திரமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினதும் பணியாக மாற வேண்டும். எம்மால் இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எனவே, ஒதுங்கி நிற்காமல் இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க முன்வருமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை முழுமையாக நீக்கிய அரசாங்கம் நாம். இந்தப் பணியைச் செய்வதற்கு பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் நாம் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். எமக்குக் காப்பாற்றுவதற்கு போதைப்பொருள் வியாபாரிகளோ கடத்தல்காரர்களோ எவரும் இல்லை. எனவே, உங்களது தொழில்முறை கௌரவம், பதவியின் பொறுப்பு மற்றும் உங்களது கடமையை நிறைவேற்ற முன்வாருங்கள். அதற்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் நாம் பெற்றுத் தருவோம்’’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ரணில், சஜித் சங்கமித்ததும் வலுவான கூட்டணி மலரும்!

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்த பின்னர் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அது சாதகமான திசையை நோக்கி பயணிக்கின்றது. சிறந்த பிரதிபலன் கிடைக்கும் என நம்புகின்றோம்.

கிராம மட்டங்களில் பிளவுபட்டிருக்கும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என கோரிவருகின்றனர்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளது.

நாம் இரு தரப்பும் இணைந்த பின்னர் வலுவானதொரு பொது எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.” – என்றார் ருவான் விஜேவர்தன.

உலகக்கிண்ண தொடரில் உச்சகட்ட பரபரப்பு: சுப்பர் ஓவர்வரை சென்ற ஆட்டம்: போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்!

T 20 உலகக்கிண்ண தொடர்பில் இன்று நடைபெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்  மற்றும் தென் ஆப்பிரிக்கா   அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக Quinton de Kock 59 ஓட்டங்களையும், Ryan Rickelton 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் Azmatullah Omarzai 3 விக்கெட்டுகளையும் Rashid Khan 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது.

அதிரடியாக விளையாடியRahmanullah Gurbaz 42 பந்துகளில் 84 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

அதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது.

இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 2 ஆவது சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்கள் அடித்தது.

இதையடுத்து 24 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய தூதுக்குழுவுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

“ பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்களை இதன்போது விபரமாகப் பேசினோம்.” என்று சுமந்திரன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு பிரயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி தரப்பில் இருந்து கோரப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.

தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி!

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப்பெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையிலேயே அவர்களை ஜனாதிபதி இன்று நேரில் சந்தித்தார்.

முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நுவரெலியா சென்றார்.

அங்கு செல்லும் வழியிலேயே தொழிலாளர்களைச் சந்தித்து, சிநேகர்பூர்வமாக கலந்துரையாடினார்.

தமக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களை, தேயிலை மலைக்கே சென்று ஜனாதிபதி சந்தித்ததை பலரும் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: 12 பேருக்கு மரண தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கே கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 41 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 37 பேர்தான் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள்.

மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருவர் 12 பேருக்கும் மரண தண்டனை விதித்தனர். ஒருவர் 37 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், மேலும் நால்வருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 23 பேர் வழக்கிலிருந்து நிரபராதிகளாக கருதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், காலி முகத்திடலில் (கோல்பேஸ்) அறவழியில் போராடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள்மீது ராஜபக்ச அணியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பலரும் களமிறங்கினார்கள். நாடு முழுவதும் வன்முறையும் வெடித்தது.

இந்நிலையில் நிட்டம்புவ நகரில் வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

கொழும்பில் இருந்து தமது ஊர் நோக்கி செல்லும் வழியிலேயே குழுவொன்றினால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

மலையக காந்தி கே. இராஜாலிங்கம் ஐயாவின் 63 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் கே. இராஜலிங்கம் ஐயாவின் 63ஆவது நினைவு தினம் இன்று (11) மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

புசல்லாவை, சங்குவாரி தோட்டத்தில் – அன்னாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, பெருந்தலைவர் நினைவுகூரப்பட்டார்.

புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் T. கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் சிவசாமி வீரப்பன் பங்கேற்று அன்னாரின் பண்புகள், போராட்ட மனப்பாங்கு மற்றும் சமூக நீதி மீதான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார்.

குடும்பத்தின் சார்பில் C. ஜெயகுமார் கலந்து கொண்டு, தலைவரின் நினைவுகளை பகிர்ந்தார்.

நிகழ்வை ஆசிரியர் கமலநாதன் (கமல்) தொகுத்து வழங்கினார். ஆசிரியர் S. புவனேந்திரன், சுயாதீன ஊடகவியலாளர் இராமசந்திரன் சனத் உள்ளிட்டோர், பெருந் தலைவரின் சேவைச் சுவடுகளை நினைவுகூர்ந்தனர்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் கே. சண்முகராஜ் உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

63 ஆண்டுகள் கடந்தாலும், அவரது சேவை, தியாகம், நேர்மை ஆகியவை புதிய தலைமுறைக்கு வழிகாட்டியாகத் தொடர்கின்றன.

 

 

 

கனடாவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்ளர் ரிட்ஜ் நகரத்தில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பள்ளியைச் சோதனை செய்ததில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதியில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட 8 பேரில் உள்ள பெண்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டம்ளர் ரிட்ஜ் பள்ளி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

17 ஆம் திகதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வருகின்றார்.

டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் பிரான்சுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.

இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் இருதரப்பு நலன்கள் சார்ந்த விடயங்கள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு – 2026’ நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி , பிரான்ஸ் ஜனாதிபதி மேம்ரான் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்க அச்சுறுத்தல் எதிரொலி: 37 ஆண்டு கால வழக்கத்தை தவிர்த்த கமேனி!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஆண்டுதோறும் பெப்ரவரி 8 அன்று விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மரபை கைவிட்டுள்ளார்.

ஈரானில் முன்பு இருந்த மன்னராட்சியை வீழ்த்துவதற்காக 1979, பெப்ரவரி 8-ம் திகதி விமானப்படை அதிகாரிகள் குழு, ரூஹோல்லோ கோமேனிக்கு விசுவாசமாக இருப்பது என சத்தியப் பிரமாணம் எடுத்தனர்.

இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பெப்ரவரி 8-ம் திகதி, ஈரான் உச்சத் தலைவர், விமானப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

தற்போதைய உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனி, ஈரான் உச்சத் தலைவர் பொறுப்பை ஏற்ற 1989 முதல் இந்த மரபை பின்பற்றி வந்துள்ளார். கரோனா காலகட்டத்தில்கூட இந்த மரபு பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், முதல் முறையாக இந்த ஆண்டு இந்த மரபை உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கைவிட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மவுசவி, பெப்ரவரி 8-ம் 8-ம் தேதி விமானப் படைத் தளபதிகளைச் சந்தித்துள்ளார். ஈரான் இண்டர்நேஷ்னல் எனும் இதழ் இதனை தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தச் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தன்னை தற்காத்துக்கொள்வதற்காக அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தீவிரமாக இருப்பதன் காரணமாக இந்த மரபு கைவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஈரான் மீது எந்த தாக்குதல் நிகழ்ந்தாலும் அது மத்திய கிழக்கு முழுவதும ஒரு பரந்த மோதலை தூண்டும் என்று அமெரிக்காவை ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும், ஈரான் மீது தாக்குதலை தொடுப்பதற்கான நகர்வை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. ஈரானில் உள்ள அமெரிக்கர்கள், பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்தது.

மேலும், யுஎஸ்எஸ் அபிரஹாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர் கப்பலை, கடந்த மாத இறுதியில் அரபிக் கடலுக்கு அனுப்பியது. மேலும், ஜோர்டானில் உள்ள விமானப் படைத் தளத்துக்கு பன்னிரெண்டு எஃப் 15 ரக போர் விமானங்கள், ஒரு எம்.க்யூ-9 ஆளில்லா விமானம், தரத் தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடுக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...

“மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி”!

0
நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல்...