Home Blog Page 842

பொருளாதாரத்தை மீட்க மாற்றுவழி இருப்பின் முன்வைக்கவும் – பேச்சு நடத்த தயார்!

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத் திட்டத்தைத் தவிர்த்து வேறு மாற்று வழிகள் இருப்பின் எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவு இல்லாத குழுக்கள் மக்கள் முன்னிலையில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது வெறும் வார்த்தைகளால் முடியாத செயல் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

“ 2023 ஆம் ஆண்டு வரி விதிப்பின் மூலம் பெறப்பட்ட அரச வருமானம் 3201 பில்லியன் ரூபாவாகும். நிவாரணங்கள், சம்பளம் மற்றும் அரச கடன்கள் ஆகியவற்றிற்காக திறைசேரியிலிருந்து செலவிடப்பட்ட தொகை 4394 பில்லியன் ரூபாவாகும். அரச செலவில் எப்பகுதி குறைக்கப்படும் என்பதை மாற்றுக் கருத்துள்ள குழுக்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகள் இல்லை என ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டார். 2022 இல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி மக்களுக்குத் தெரியும்.

அதிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தினால் இலங்கையின் பொருளாதாரம் இன்று சாதகமான நிலையை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு தொடர்பில் குறிப்பிடுவதாயின், வரிப் பணம் உட்பட மொத்த அரச வருமானம் 3201 பில்லியன் ரூபாவாகும். அதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் 1550 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கத்தினால் 923 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்தினால் 169 பில்லியன் ரூபாவும், மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் 20 பில்லியன் ரூபாவும் பங்களிப்புச் செய்துள்ளன. இந்தத் தொகை திறைசேரிக்குக் கிடைத்த வருமானம் ஆகும். ஆனால் கடந்த வருடம் திறைசேரியால் செலவிடப்பட்ட பணத்தின் அளவு 4394 பில்லியன் ரூபாவாகும்.

நிவாரணங்கள், அரச கடன்கள், அரச ஊழியர்களுக்கான சம்பளபம் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், திறைசேரியில் இருந்து 13,292 பில்லியன் ரூபா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படுகிறது. எரிவாயு வரிசைகள் இல்லை. தடையற்ற மின் விநியோகம் இருக்கிறது. அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த செயற்பாடுகள் மூலம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு மாற்றாக வேறுவழி எதுவும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

அதிகாரத்தைப் பெறுவதற்காக மேடைகளில் சில குழுக்கள் பல்வேறு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டாலும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு என்ன வேலைத் திட்டத்தை மேற்கொள்வோம் என்பதை அந்தக் குழுக்கள் மக்களுக்குக் கூற சொல்ல வேண்டும். நிவாரணப் பகுதியை குறைக்கிறார்களா? இல்லை என்றால் அரச கடன் பகுதியை குறைக்கிறார்களா? அல்லது அரச உழியர்களின் சம்பளத்தில் கைவைக்கிறார்களா? என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆட்சியில் பங்கேற்ற காலம் மிகக் குறைவு. அப்போது, தாங்கள் வெற்றி பெற்ற திஸ்ஸமஹாராம பிரதேச சபையை உரிய முறையில் நிர்வகிக்க முடியாததால் மீண்டும் அடுத்த அரசியல் குழுவுக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தீர்மானித்தனர்.

2003ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த சட்டமூலத்தில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக வைத்திருப்பது மற்றும் அரச கடனை 60% ஆக பேணுவது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால், பின்னர் வந்த அரசாங்ககளால் அதைச் செயல்படுத்த முடியவில்லை.

இதனால், 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார்” என்று அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

பொகவந்தலாவையில் கத்திக்குத்து – இளைஞன் காயம்!

பொகவந்தலாவை பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல்வேளையில் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

பொகவந்தலாவ, பெற்றோசோ தோட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பொகவந்தலாவை நிருபர் – சதீஸ்

மேபீல்ட் தோட்டத்தில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இருவர் கைது!

திம்புல – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் எனக் கூறப்படும் 60 வயது நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த 40 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால் , சட்ட வைத்திய அதிகார பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது பல தடவை குறித்த 60 வயது நபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை மற்றும் அதற்கு 40 வயதுடைய நபர் உதவி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்ற பதில்நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

நுவரெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!

நுவரெலியாவில் இரு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (11) இடம் பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் இன்று  (12) காலை வர்த்தக நிலையங்களுக்கு வந்தபோது அவை  உடைக்கப்பட்டமை தெரியவந்ததுடன் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

ஒரே உரிமையாளரின் இரண்டு வர்த்தக நிலையங்களான பல்பொருள் வர்த்தக நிலையமும் , விவசாய மருந்து வர்த்தக நிலையத்தின் பின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளையும் சில பெறுமதியான பொருட்களையும்  கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இக்கொள்ளை இடம்பெற் போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறக்கத்தில் இருந்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கண்காணிப்புக் கமராவில் பதிவான காட்சியின் உதவியினைக் கொண்டு தடயவியல் பொலிஸாரோடு இணைந்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா நிருபர்

லிந்துலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த பகுதியைச் சேர்ந்த பழனிவேல் செல்வகுமாரி (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பேருந்தில் பயணித்த பயணிகள், ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்

லிந்துலை, அகரகந்தை ஆற்றில் பெண்ணின் சடலம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள அகரகந்தை ஆற்றில், பெண்ணொருவரின் சடலம் காணப்படுகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் யார் என்பது தொடர்பில் இதுவரையும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என விசாரணைகளை ஆரம்பித்துள்ள லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கௌசல்யா

UPI முறை அறிமுகம் – 10,000 வணிக நிறுவனங்கள் இணைவு

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.

மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வெலிமடையில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நால்வர் கைது!

வெலிமடை நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கினர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7:30 மணியளவில், வெலிமடை இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியை சோதனைக்கு உட்படுத்தியபோது, கெப் வாகனத்தில் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தில் இருந்தவர்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, கெப் வண்டியில் இருந்தவர்கள் பொலிஸ் சார்ஜென்டை தாக்கிவிட்டு கெப் வண்டியுடன் தப்பிச் செல்ல முற்பட்டதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன தெரிவித்தார்.

வெலிமடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கெப் வண்டியையும், நிலையத்திற்கு வந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்ததுடன், அங்கிருந்த மேலும் இரு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரும் இன்று (12) பிற்பகல் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பொலிஸார் அவர்களை கைது செய்ததாகவும் அவர்கள் வெலிமடை மற்றும் ஊவா பரணகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“பணம் கொடுத்தால் சகாரா பாலைவனத்திலும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவார்கள்”

“தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் யாழ் தலைமைகள் கலந்து பேசி பொது முடிவெடுக்க வேண்டும் .” – என்று யாழ். முற்றவெளி சம்பவம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம்.

அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பௌத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள்.

கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள்.

இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.
இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம்.

இன்று, கொழும்பில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்தும் நடக்கும். யாரும் வந்து முறைப்படி பார்க்கலாம். அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. கொழும்பை போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இலட்சக்கணக்கில் கூட உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி.

யாழில் கலாச்சார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டு கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம். இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதை செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்கு பணம் இல்லை.

அடுத்து, “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது.

ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம்.

இணைய பாதுகாப்புச் சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

இலங்கையின் நாடாளுமன்றம் உயர் நீதிமன்றத்தின் பரிந்தரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

மிகவும் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனிப்பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் உயர் நீதிமன்றம் இது நாடாளுமன்றாத்தில் மூன்றில் இரண்டு பெருமான்மையினால் நிறைவேற்றப்பட வேண்டுமென கூறியிருந்தது.

”இணையதள பாதுகாப்புச் சட்டத்தை கவனமாக ஆராய்ந்த பின்னர், அதிலுள்ள பல பிரிவுகள் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக இல்லை என்பதும் அதில் பல அம்சங்கள் விடுபட்டுள்ளன” என்பதையும் அவதானிக்க முடிவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழு கூறுகிறது.

உயர்நீதிமன்றத்தின் உத்தவிற்கு அமையவே இந்த இணையதள பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த விடயத்தை ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக 51 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தீர்ப்பை அறிவித்தது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ செயற்பாட்டுக் குழுக்கள் உட்பட பலர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவ்வகையில் “மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமே இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்ற முடியும்” என் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது மாத்திரமின்றி அந்த சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதை தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியுமெனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்ததாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது அந்த மசோதாவிலுள்ள 56 பிரிவுகளில் 31 திருத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கண்டறிந்திருந்தது. எனினும், இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என ஆணைக்குழு கூறியுள்ளது.

சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், இணையதள பாதுகாப்புச் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை ஆணைக்குழு விபரித்துள்ளது. “அந்த மசோதாவில் இருந்த 30 பிரிவுகள் அரசியல் சாசனத்தின் பிரிவு 12 (1) இசைவாக இல்லை, மேலும் சில அம்சங்கள் பிரிவு 14 (1) (அ) ஆகிய பிரிவுகளுக்கு எதிராக உள்ளன” எனக் கூறியுள்ளது. அந்த திருத்தங்கள் செய்யப்படாத நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு ஏற்ற வகையில் அந்த சட்டம் இயற்றப்படாமை குறித்து ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்று அதை செயல்படுத்த தவறியமை, அந்த சட்டத்தின் தற்போதைய வடிவம் குறித்தும், நாடாளுமன்றத்தில் தேவையான அளவிற்கு வாக்குகளை பெறாமை குறித்தும் ஆழ்ந்த கவலை எழுகிறது” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் எல் டி பி தெஹிதெனிய கூறியுள்ளார்.

”ஆக்கபூர்வமாக நிறுவன ரீதியாக சீர்த்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஈடுபடாமல், இதை முன்னெடுத்துச் செல்லுவது குறித்து நாங்கள் அரசை எச்சரித்திருந்தோம்” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கையில் “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கவும், எதிர்ப்புகளை ஒடுக்கவும் அரசின் ஆயுதங்களில் புதிதாக சேர்ந்துள்ள ஒரு விடயம்.” இதுவென விமர்சித்துள்ளது.

அதேபோன்று அப்பிள், அமெசான், கூகள் மற்றும் யாஹூ போன்ற அமைப்புகளை உறுப்பினராகக் கொண்டுள்ள ஆசிய இணையதள கூட்டமைப்பு இந்த சட்டத்தில் பரந்துபட்ட திருத்தங்கள் தேவை எனவும், இந்த சட்டமானது நாட்டிற்கு வரக்கூடிய முதலீடுகளை பாதிக்கும் எனவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

செய்தி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச கைது!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

0
தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏதும்...

சோமரத்ன ராஜபக்சவை சர்வதேச விசாரணைக்கு தயார்படுத்துங்கள்!

0
" தேசபந்து தென்னகோன் விவகாரத்தில் மட்டுமல்ல தமிழினப் படுகொலைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கும் நீதி விசாரணை வேண்டும். எனவே, இந்த செம்மணி விவகாரத்தில் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை சர்வதேச விசாரணைக்கு தயார்படுத்த வேண்டும்."...