Home Blog Page 3651

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – ஒருவர் பலி!

வேகக்கட்டுப்பாட்டையிழந்த கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கரெவெட்டி – வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது-41) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாத்தளையில் 13 பேருக்கும், நுவரெலியாவில் 8 பேருக்கும் கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் நேற்று 13 தொற்றாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 189 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

வீட்டுத் திட்டத்துக்கு 10 பேர்ச்சஸ் காணி – ஜீவனுக்கு நன்றி தெரிவிப்பு

” பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு ஏற்கனவே கடந்த காலங்களில் வழங்கப்பட 07 பேர்ச்சஸ் காணிக்கு பதிலாக 10 பேர்ச்சஸ் காணியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கண்டி மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 7 பேர்ச்சஸ் காணியே ஒதுக்கப்பட்டிருந்தது. அந்நிலையில் குறித்த அளவை அதிகரித்துக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எமது தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் ஐயா மேற்கொண்டிருந்தார். அவரின் மறைவுக்கு பின்னர் இத்திட்டத்தை நிறுத்தாது, உரிய தரப்புகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்து இன்று எமது மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி உரிமை கிடைப்பதற்கு வழிசமைத்துக்கொடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

அவரின் கோரிக்கையின் பிரகாரமே பிரதமரால் இதற்கான அமைச்சரவைப்பத்திரம் முன்வைக்கப்பட்டு அதற்கு அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏனைய சமூகத்தினருக்கு இணையாக காணி உரிமையும் வாழும் சூழ்நிலை எமது மக்களுக்கும் கிடைத்துள்ளது. எனவே, இதற்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய எமது இராஜாங்க அமைச்சருக்கு கண்டி மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனி மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தனி வீட்டுத் திட்டத்துக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என்பது உறுதி. எமது கண்டி மாவட்ட மக்களுக்கும் இது பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்படும் எமது செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணம் மென்மேலும் வெற்றியளிக்க வாழ்த்துகளையும் கண்டி மாவட்ட மக்களின் சார்பில் சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

பசறை பகுதியில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பகுதியில் மேலும் 10 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆம் திகதி  215 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின்படி குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பாடசாலை மாணவர்களும், கொழும்பிலிருந்து வருகைத் தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓரிரு வாரங்களில் பசறை பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்திருப்பது அவதானிக்க முடிகிறது.

இதனால் பொதுமக்கள் தொற்றிலிருந்து பாதுகாப்புபெறுவதற்கான உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸாரும் பொதுசுகாதார அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

‘கம்பனிகளின் கொட்டத்தை அடக்க ஒன்றிணைவோம்’ – சதாசிவம் அறைகூவல்

தொழிற்சங்க, அரசியல் பேதங்களை மறந்து கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு பாடம் புகட்ட ஒன்றிணைவோம் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் இன்னும் பல உரிமைகளை,பெற்றுக்கொள்ள வழி வகுக்கும்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நுவரெலியா அலுவலகத்தில் நேற்று ( 27) புதன்கிழமை நடைபெற்ற தோட்ட கமிட்டித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில் சதாசிவம் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற 1,000 ரூபா சம்பளம் தொடர்பாக ஆராய்ந்ததில் எவ்வித முடிவுமின்றி கடந்த ஐந்து வருடங்களாக வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் தோட்டங்களில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் சக்தியை இழந்து போராட்டம் செய்வதற்குக்கூட முடியாமல் இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் பெருந்தோட் பகுதியில் தொழிலாளர்கள் தொழிற்சங்க போராட்டங்களும் தியாகங்களும் நடத்தி தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொண்டோம். அன்று தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்களாக இயங்கின. ஆனால் இன்று தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறியுள்ளதால் தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் படுகின்ற கஷ்டங்களையும் கம்பனிகளால் வஞ்சிக்கப்படுவதையும் பார்க்கின்ற பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இந்த கம்பனிகளின் அடாவடி தனத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் பாடம் கற்பித்து தொழிலாளர்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுப்பட்டு போராடுவதன் மூலமே தொழிலாளர்களின் உரிமைகளை பெறமுடியும்.

எனவே எதிர்காலத்தில் தொழிலாளர்களினதும் தோட்டங்களினதும் நிலைமையை மாற்றியமைத்து பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் தோட்டங்களைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் தலைமைகளும் ஒன்றுப்பட்ட சக்தியாக செயல்படும் பொழுது இந்த 1,000 ரூபா சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகுக்குமென கூறினார்.

மொட்டுகட்சிமீது மைத்திரி கடும் அதிருப்தி!

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படவில்லை – என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால்,  தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்படுவதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

” ஆம். அப்படியான பிரச்சினை இருக்கின்றது. அவர் கூறிய கருத்தில் பிழை இல்லை. எமக்கான கவனிப்பில் குறை உள்ளது.  ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் எதுவும் நடைபெறுவதில்லை.  உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளில் இருந்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. மற்றுமொரு தரப்பாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளன.” – என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் பிஸ்ரின் முகம்மது எழுதிய சகவாழ்வியம்

ஊடகவியலாளர் எம்.ஜே.பிஸ்ரின் முகம்மத் எழுதிய சகவாழ்வியம் என்ற நூல் வெளியீடு எதிர்வரம் 06ஆம் திகதி, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மாலை 3.30இற்கு வெளியீடு காணவுள்ளது.

இலங்கையில் மிக முக்கியமாக பேசப்பட வேண்டிய சகவாழ்வியம் குறித்த இலங்கையை மையப்படுத்திய உரையாடலாக இந்த நூல் அமைந்துள்ளது.

வீரகேசரியில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்து தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சிகளை தொகுத்து, வழங்கிய பிஸ்ரின் முகம்மத்தின் இந்த நூல் வெளியீட்டில் சிறப்பு அதிதியாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப் பிரிய கலந்துகொள்கிறார்.

இந்த நூல் வெளியிட்டில் கலந்தகொள்ள விருப்புவோம், சுகாதார பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, 0775070171 என்ற இலக்கத்தில் வரவை கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இன்றைய தேவையாக இருக்கும் சகவாழ்வு குறித்து பேசும் ஊடகவியலாளருக்கு பிஸ்ரின் முகம்மத்தின் நூல் வெளியிட்டிற்கு வாழ்த்துக்கள்.

ஆயிரம் ரூபா சம்பளமும், அஷ்டமத்து சனியும்..!

ஏழரை சனியைவிட எட்டாமிட சனியான அஷ்டமத்து சனியே மிகவும் ஆபத்தானது என்கிறது ஜோதிடம். பழி பாவம், வலி – வேதனை, ஏமாற்றம், காரிய தடைகள் போன்ற கெடுபலன்களை அது அள்ளி வழங்குவதால் இன்பம் விலகி – துன்ப மேகங்களே சூழ்ந்துகொள்ளுமாம்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாட் சம்பளம் ஆயிரம் ரூபா விவகாரத்திலும் அஷ்டமத்து சனி பாய்விரித்து படுத்திருப்பதுபோலவே ‘தொழிற்சங்க நகர்வுகள்’ அமைந்துள்ளன.

குறிப்பாக கூட்டாக களமிறங்கி ஒருமித்த நோக்கோடு – இலக்கை அடைவதற்காக சமராடவேண்டிய தருணத்தில் தொழிற்சங்கங்களோ ‘மற்றைய தரப்பு’மீது பழி பாவம் சுமத்தும் தந்திரத்தை கையாண்டுவருகின்றன. தொழிலாளர்களோ வலி – வேதனையாலும், ஏமாற்றத்தாலும் துடிதுடிக்கின்றனர்.

இந்நிலையில் சனியனை எதிர்த்து போராடி – பரிகாரம் செய்தேனும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்போம் என சூளுரைத்தவர்கள் தற்போது வாலை சுருட்டிக்கொண்டு ‘தந்திரோபாய பின்வாங்கலில்’ ஈடுபட தயாராகிவருகின்றனர்.

அதுமட்டுமல்ல இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும்…..இல்லை….இல்லை நாளை மறுதினம் கட்டாயம் கிடைக்கும் என்றெல்லாம் பழைய பல்லவியே பாடப்பட்டுவருகின்றது.

தொழிற்சங்கங்களிடம் உறுதியானதொரு சம்பள திட்டம்கூட இல்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களிடம் புரிந்துணர்வும் இல்லை. மூன்று சங்கங்களும் வெவ்வேறான நிலைப்பாட்டிலேயே உள்ளன. ஆனால் முதலாளிமார்களோ சம்பள திட்டத்தை முன்வைத்து – அதனை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களிடமும் சம்பள உயர்வுக்கான முன்மொழிவு இல்லை. இவ்வாறு உரிய திட்டம் எதுவும் இல்லாமல், ஆயிரம் ரூபா என்ற கோஷத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி தொழிற்சங்கங்கள் பிரிந்து நின்று – நீயா, நானா என அரசியல் சமரில் ஈடுபடுவதால் கடைசியில் கம்பனிகளுக்கே அது சாகமாக அமைந்துவிடும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் இம்முறையும் திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு தொடர்கின்றது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என தோட்டக் கம்பனிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.

அரசியல் மற்றும் தொழிற்சங்க பலத்தை பயன்படுத்தி ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடைவதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டாலும், கம்பனிகளின் உடும்புப்பிடியை அவற்றால் தகர்க்க முடியவில்லை.

அதேபோல பெருந்தோட்டங்களின் காணி உரிமை தம்வசம் இருந்தும், அவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. அமைச்சரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி ‘1000’ கூத்துகள் அரங்கேற்றப்பட்டாலும் தீர்வு உறுதியா என்பது கேள்விக்குறியே.

அமைச்சரவை தீர்மானம் என்பது இறுதி முடிவு அல்ல.இறுதி முடிவை நோக்கி நகர்வதற்கான ஆரம்ப புள்ளியே அது. எனவே, அமைச்சரவை தீர்மானித்துவிட்டது என்ற செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு அரசுக்கு சார்பாக காவடி தூக்கி அலகு குத்துவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது.

அத்துடன் தொழிலாளர்கள் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கோரிய நிலையில், ஆயிரம் ரூபாவரை என்ற சொற்பதத்தின் ஊடாக அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்காது என்பதனை அரசு உறுதிப்படுத்திவிட்டது.

கூட்டு ஒப்பந்தம் என்றால் என்ன?

வெள்ளையர்களிடமிருந்து 1972 இல் தேசியமயப்படுத்தப்பட்ட பெருந்தோட்டங்கள் 1990 காலப்பகுதியில் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. அதன்பின்னரே 1992 முதல் கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அரச – தனியார் துறையினருக்கான சம்பளமானது சம்பள நிர்ணயச்சபையினூடாகவே நிர்ணயிக்கப்பட்டாலும் -மலையகத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மேற்படி சபை தலையிடாது. கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

இதன்படி பெருந்தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பளத்தை தீர்மானிக்கும் முறைமையே கூட்டுஒப்பந்தம் எனப்படுகின்றது.

பொருளாதாரம் – வாழ்க்கைச்செலவு ஆகியவற்றுக்கேற்ப சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதாலேயே இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை இவ்வொப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. இருந்தும் அந்த சரத்துகளை தோட்டக்கம்பனிகள் கடந்த காலங்களில் பின்பற்றவில்லை. இதனால், ஒப்பந்தத்தின் முழுமையான நன்மையை தொழிலாளர்களால் நுகரமுடியாமலுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன தொழிலாளர்கள் சார்பிலும் சுமார் 23 கம்பனிகள் நிர்வாகத்தின் சார்பிலும் பேச்சுகளில் பங்கேற்கும். இதில் இரு அரச நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.

2013 முதல் 2019வரை ‘சம்பள உயர்வு’ பேச்சு

கடந்துவந்த பாதை…….

ஆரம்பகாலகட்டத்தில் பெருந்தோட்டத்துறையில் தொழில் புரியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான முறையிலேயே சம்பளம் வழங்கப்பட்டது.காலப்போக்கிலேயே இரு பாலாருக்கும் ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது. ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குரிய பேச்சுகள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும், பொதுத்தேர்தல் நெருங்கியதால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் ஆயிரம் ரூபா சம்பளம் அவசியமென்ற கோரிக்கை தேர்தல் குண்டாக வீசப்பட்டது.

அதன்பின்னர் ஏனைய தொழிற்சங்கங்களும் ஆயிரம் ரூபாவுக்காக குரல் கொடுத்தன. எனினும், கம்பனிகள் இணங்கவில்லை. அப்போதும் ஆயிரம் ரூபா வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வை வலியுறுத்திலும் மலையகத்தில் எட்டுத்திக்கலும் வெடித்த தொழிற்சங்க போராட்டங்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும், தலைநகரிலும் ஏன்! புலம்பெயர் நாடுகளில்வாழும் பாட்டாளி வர்க்கத்தினர் நேசக்கரம் நீட்டினர்.

இவ்வாறு 18 மாதங்களாக போராட்டங்கள் தொடர்ந்ததால் தொழிலாளர்களின் பொருளாதாரமும் ஆட்டம்காண தொடங்கியது. ஆரம்பத்தில் தொடர்,அதன்பின்னர் சுழற்றி முறையென போராட்டவடிவங்கள் உருமாறியதாலும், தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்திலும் இறுதியில் ஏனோதானோவென ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

2013 காலப்பகுதியில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு, அடிப்படை நாட் சம்பளமாக 450 ரூபா உட்பட நாளாந்த சம்பளமாக 630 ரூபாவை பெற்றனர்.

2016 இல் அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபாவும், வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 60 ரூபாவும், நிலையான கொடுப்பனவாக 30 ரூபாவும் ,உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவுமாக நாளொன்றுக்கு 730 ரூபா வழங்கப்பட்டது.

எனினும், 2019 இல் புதிதாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. விலைக்கேற்ற கொடுப்பனவாக 50 ரூபா வழங்கப்பட்டது. விலைக்கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு என்பன நீக்கப்பட்டன. இதன்படி நாளொன்றுக்கான சம்பளமாக 750 ரூபாவை தொழிலாளர்கள் பெற்றனர். கூட்டிக்கழித்து பார்த்தால் ஆயிரம் ரூபாவை எதிர்ப்பார்த்த தொழிலாளர்களுக்கு வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக கிடைத்தது என்பது கசப்பான உண்மையாகும்.

தற்போது அடிப்படை நாட் சம்பளமாக 700 ரூபாவை பெறும் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்தின் ஊடாக மேலும் 300 ரூபா அதிகரிக்கப்பட்டு ஆயிரம் ரூபாவை அடிப்படை நாட் சம்பளமாக எதிர்ப்பார்க்கின்றனர். இதற்காக 5 வருடங்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கின்றது.

இந்நிலையில் ‘அடிப்படை’ என்ற பதத்தைநீக்கிவிட்டு, தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளம் (அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கி) 2020 மார்ச் முதல் ஆயிரம் ரூபாவாக இருக்கவேண்டும் என 2020 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்திருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்பைக்கூட கம்பனிகள் ஏற்கவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் ஆயிரம் ரூபா தொடர்பான யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இதனை வழங்க மறுக்கும் கம்பனிகளின் முகாமைத்துவம் மறுசீரமைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கும் கம்பனிகள் பணிவதாக தெரியவில்லை. தம்மால் முன்வைக்கப்படும் தீர்வு திட்டமே நடைமுறைக்கு வரவேண்டும் என்பதில் முதலாளிமார் சம்மேளனத்தினர் உறுதியாக நிற்கின்றனர். அதாவது அடிப்படை நாட் சம்பளத்தை சொற்பள அளவு உயர்த்துவதற்கே கம்பனிகள் தயாராகவுள்ளன.

– ஆர்.சனத்

‘கொரோனா’வால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

43 மற்றும் 74 வயதுகளுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

1000 ரூபா குறித்து ஆராய பெப்ரவரி முதல் வாரத்தில் சம்பள நிர்ணய சபை கூடும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி மாதம் முதல் சம்பள உயர்வை வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக பெப்ரவரி முதல் வாரம் சம்பள நிர்ணய சபை கூட்டப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கான நடவடிக்கை சம்பள நிர்ணயசபை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையிலேயே சம்பள நிர்ணயசபை பெப்ரவரி முதல் வாரத்தில் கூடவுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (13.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்​கெடுப்பு

0
தவெக அரசுமீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று (12) நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால்...

மழை தொடரும்: மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய தினமும் கடும் மழை எதிர்பார்க்கப்படுகின்றது. மலையகத்தில் சில இடங்களில் காலை முதலே மழை பெய்துவருகின்றது. அதேவேளை, 8...