நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல், காடு போல் மண்டிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி ஒருவரை, புதர்களுக்குள் மறைந்திருந்த பாம்பு ஒன்று திடீரென தீண்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சக பெண் தொழிலாளர்கள் அவரை மீட்டு, உடனடியாக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரம்யலதா குமார்ராஜ் என்ற 57 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவரது சடலம், நேற்று மதியம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக சோளங்கந்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கை
தேயிலைத் தோட்டங்கள் காடுகளாக மண்டியுள்ளதே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் எனத் தோட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தோடக் கம்பனிகள் உடனடியாகத் தேயிலைத் தோட்டங்களைத் துப்பரவு செய்து, தங்களது பாதுகாப்பான தொழில் சூழலை உறுதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.யோகா










