செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், குழந்தைகளை இலக்காகக் கொண்ட புதிய இணைய அபாயங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளின் சாதாரண புகைப்படங்களை மாற்றி, பாலியல் ரீதியாக தவறான அல்லது துஷ்பிரயோகத்தைக் காட்டும் போலியான படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னர், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் பெரும்பாலும் உண்மையான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களாக இருந்தன. ஆனால் தற்போது, குழந்தையின் ஒரு சாதாரண புகைப்படம் மட்டுமே இருந்தாலும், AI மூலம் மிகவும் நம்பகமாகத் தோன்றும் தவறான உள்ளடக்கங்களை உருவாக்க முடியும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குழந்தைகளின் தனியுரிமை, கௌரவம், மனநலம் மற்றும் உணர்ச்சி நலனுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இணையத்தில் அச்சுறுத்தல் அல்லது அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்களா என்பதை பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் கவனிக்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக,
பெற்றோர் அருகில் வந்தவுடன் திரையை மூடுதல் அல்லது மறைத்தல்
திடீரென privacy settings மாற்றுதல் அல்லது இரகசிய கணக்குகள் உருவாக்குதல்
பயம், குற்ற உணர்வு, மனஅழுத்தம் அல்லது தனிமைப்படுதல்
இணைய உரையாடல்கள் குறித்து வழக்கத்திற்கு மாறாக இரகசியம் காப்பது
போன்ற மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பாதுகாக்க குடும்பங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுடன் இணைய அபாயங்கள் குறித்து வயதுக்கு ஏற்ற வகையில் திறந்த மனதுடன் பேசுதல், சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை பகிரும்போது தனியுரிமை அமைப்புகளை பயன்படுத்துதல், அறிமுகமில்லாதவர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் அல்லது படங்களைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்துதல் மற்றும் parental controls பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும், இணையத்தில் ஏதேனும் தவறான சம்பவம் ஏற்பட்டால் குழந்தைகள் பயமின்றி பெற்றோரிடம் தெரிவிக்கலாம் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
“டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது விழிப்புணர்விலிருந்தே ஆரம்பிக்கிறது” எனக் கூறியுள்ள பொலிஸார், தொழில்நுட்பம் வளர வளர பெற்றோரும் பராமரிப்பாளர்களும் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.










