இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை – அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நாளை (05.05.2026) “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டம் இடம்பெறுகின்றது.
கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் முற்பகல் 11.01 மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகும் என ஏற்பாட்டுக்குழுவான “நாம் மலையகம்” அமைப்பு அறிவித்துள்ளது.
மலையக சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடக அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பல தரப்பினரும் மேற்படி அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நீலகாமம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தொழிலாளர் குடியிருப்பொன்றை பிரத்தியேக பாதுகாப்பு படையைக்கொண்ட தோட்ட நிர்வாகம் அண்மையில் அடித்து நொறுக்கியது. இச்சம்பவம் ஒட்டு மொத்த மலையகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கறுப்பு ஆடை அணிந்துகொண்டு, முகத்தைமூடும் வகையிலான தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டு தோட்டத்துக்குள் புகுந்த கும்பல், வன்முறையைக் கையாண்டே வீட்டை அடித்து நொறுக்கியது.
நாட்டில் சட்டம், ஒருங்கை கையாள்வதற்கு காவல்துறை இருக்கையில், தண்டனை வழங்க நீதிமன்றம் செயற்படுகையில் பிரத்தியேக பாதுகாப்பு குழு, சட்டம், ஒழுங்கை கையில் எடுத்தமை அடக்குமுறையின் உச்ச கட்டம், ஜனநாயக விரோதச் செயல் என பலரும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் நீலகாமம் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகோரியும் நாம் மலையகம் அமைப்பின் ஏற்பாட்டில் நீலகாமம் தோட்டத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்போது “நீலகாமம்” பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மலையக மக்களின் அரசியல், பொருளார மற்றும் சமூக விடுதலையின் முக்கிய அங்கமான காணி உரிமையை வென்றெடுக்கும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதிகோரியும், பெருந்தோட்டப்பகுதிகளுக்கு கூலிப்படை வேண்டாம் என வலியுறுத்தியும் கொழும்பில் அறவழிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.










