மலையக மக்களுக்காக குரல் கொடுப்பவரே சஜித்: மனோ, திகாவுடன் பிரச்சினை இல்லை

“எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டணியிலுள்ள தமிழ் பேசும் பங்காளிக்கட்சிகளுக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. தமிழ் பேசும் மக்களுக்காக சஜித் பிரேமதாச குரல் எழுப்பிவருகின்றார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் உரிய தலையீடுகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே, மேற்படி மக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் தலையீடு தொடர்பில் பங்காளிக்கட்சிகளுக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. திருப்தியாகவே உள்ளன.

ஐக்கிய மக்கள் கூட்டணியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகள், பொதுமேடையொன்றை அமைத்திருந்தாலும் ஐக்கிய மக்கள் கூட்டணியாக செயல்படுவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர்கள் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தொடர்பில் அழுத்த குரலொன்றை எழுப்புவதற்காகவே அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அதில் எமக்கு பிரச்சினை இல்லை.” – என்றார் முஜிபூர் ரஹ்மான்.

Related Articles

Latest Articles