கம்பளையில் பாடசாலை காணியில் பாதாள அறை: விசாரணை முன்னெடுப்பு

கம்பளை நகரில் அமைந்துள்ள பௌத்த வித்தியாலய வளாகத்தில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு கட்டமாகச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன. இதன் போது, பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை கழிவுநீரை வெளியேற்றுவதற்காக மைதானத்திற்கு அருகில் குழி ஒன்றைத் தோண்டியபோது, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என நம்பப்படும் பாரிய நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பாடசாலை அதிபரினால் கம்பளை பொலிஸ் நிலையத்திலும், வலயக் கல்விப் பணிமனையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக, இப்பாடசாலைக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள காணியினை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சில தினங்களாகத் துப்புரவு செய்து வந்துள்ளனர். இதன்போது, சிற்றுண்டிச்சாலையின் கழிவுநீரை வெளியேற்றுவதற்காகச் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு குழி தோண்டிய சந்தர்ப்பத்தில், கீழே கான்கிரீட் தளம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர். அது ஒரு பழைய கழிவுநீர்க் குழியின் பகுதி என நினைத்து, அதில் துளையிட்டு கழிவுநீர்க் குழாயைச் செலுத்தியுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில், பாடசாலை வேலிக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் அங்கு வந்து, தமது வீட்டு அறையின் மின்விசிறிக்கு அருகில் கழிவுநீர்க் குழாய் ஒன்று நீட்டிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்று ஆராய்ந்த போதே உண்மை வெளிவந்தது. கம்பளை – கண்டி வீதியில் அமைந்துள்ள மேற்படி பாடசாலை மைதானத்திற்கு அடியில், அந்த வீட்டிற்குச் சொந்தமான 40 அடி நீளமுள்ள நிலத்தடி அறையின் ஒரு பகுதி, பாடசாலை மைதானத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. எனினும், குறித்த பகுதி தங்களது வாகன நிறுத்துமிடமும், சேமிப்பு அறையும்தான் என்று வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், தற்போதைய பாடசாலை நிர்வாகம் செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய, அரசுக்குச் சொந்தமான காணியில் 20 வருடங்களுக்கும் மேலாக இந்த இரகசிய அறை எவ்வாறு இயங்கி வந்தது என்பது தொடர்பாகக் கம்பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles