தமிழ் பேசும் மக்களுக்காக 6 அரசியல் கட்சிகள் சங்கமம்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி: காணி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண தீர்மானம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் புதிய கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கூட்டணியின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக ஒன்றிணைவை அறிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தேசம் முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களையும் உரிமைகளையும் கருத்திற்கொண்டே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் தற்போதைய சூழலில் ஒன்றிணைவது அவசியமானது என்றும், இந்த ஒற்றுமை எக்காரணம் கொண்டும் குலையாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய இணக்கப்பாட்டின் படி, காணி உரிமை உள்ளிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் ஒன்றிணைந்து தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இப்புதிய கூட்டணி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிதைந்து போகாத ஒரு வலுவான கூட்டணியாக இருக்கும் எனவும் தலைவர்களால் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles