சிவப்பு நிறமாக மாறிய ஸ்பெயின்: 165 தொன் தக்காளிகளை வீசி கொண்டாட்டம்

ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான ‘லா தொமத்தினா’ (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

புதன்கிழமை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில், லொறிகள் மூலம் கொண்டுவரப்பட்ட சுமார் 165 தொன் பழுத்த தக்காளிகள் மக்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன.

வெண்நிற ஆடைகளை அணிந்திருந்த மக்கள், பின்னணியில் ஒலித்த பாப் இசைக்கு ஏற்ப ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர்.

கொண்டாட்டத்தின் போது கட்டிடங்கள் சேதமடைவதைத் தடுக்க பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டிருந்தன. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த ஆண்டு விழாவுக்கு 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தனர். சமீபத்திய ஆண்டுகளில் இதில் பங்கேற்பவர்களில் சுமார் 40 சதவீதமானோர் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் என ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு வெளியான ‘ஜிந்தகி நா மிலேகி தொபாரா’ என்ற பாலிவுட் திரைப்படத்திற்குப் பிறகு, இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமை நடைபெறும் இந்த ‘லா தொமத்தினா’ திருவிழா, 1945-ஆம் ஆண்டு உள்ளூர் மக்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு சிறிய உணவுப் சண்டையாகவே தொடங்கியது.

பிரான்சிஸ்கோ பிராங்கோ ஆட்சியின் போது விதிக்கப்பட்ட தடையையும் தாண்டி, பின்னநாட்களில் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் இது உலகப் புகழ்பெற்ற விழாவாக உருவெடுத்தது.

Related Articles

Latest Articles