அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், உலகம் முழுவதும் உள்ள குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கான விசா நேர்காணல் முன்பதிவுகளை (immigrant visa appointments) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்க அரசு குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகளுக்காக புதிய உலகளாவிய பயிற்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிக்காக விசா சேவைகளுக்கான நேர்காணல் நேரங்கள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார ஊடகத் தொடர்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் தற்போது தீவிரமான நாடுகடத்தல் நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிலரின் விசாக்கள் மற்றும் Green Card ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அரசியல் கருத்துக்கள் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிரான பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சில விசா விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகள் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக டிரம்ப் கூறி வருகிறார்.
எனினும், அவரது நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு நீதிமன்றங்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை இடைநிறுத்தியிருந்த டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை அமெரிக்க நீதிபதி ஒருவர் ரத்து செய்தார். அந்த நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிற்சி எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது அதன் முழுமையான விவரங்கள் என்ன என்பது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தவில்லை. எனினும், எதிர்காலத்தில் அமெரிக்க அரசின் பொது நல உதவிகளை அதிகமாக நம்பியிருக்கக்கூடிய விண்ணப்பதாரர்களை அடையாளம் காணவும், விசா விண்ணப்பதாரர்களை முழுமையாகவும் ஒரே மாதிரியான நடைமுறையிலும் மதிப்பீடு செய்யவும் தூதரக அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் குடியேற்ற விசா நேர்காணலுக்கான திகதிகளைப் பெற்றிருந்த சில விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களது நேர்காணல்கள் மாற்றியமைக்கப்படுவதாக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. புதிய நேர்காணல் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பாகுபாடானவை என்றும், கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டரீதியான உரிமைகளை மீறுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இனச் சிறுபான்மையினருக்கு அமெரிக்காவில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும், இன அடையாளத்தின் அடிப்படையில் சந்தேகப்படுத்தப்படுவது குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
2024ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவதை முக்கிய வாக்குறுதியாக டிரம்ப் முன்வைத்திருந்தார். ஆனால் அவரது நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சட்டபூர்வமான குடியேற்றத்தையும் கடினமாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில வேலைவாய்ப்பு விசாக்களுக்கு புதிய மற்றும் அதிகமான கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளமை இதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த இடைநிறுத்தம் அனைத்து அமெரிக்க விசாக்களுக்கும் பொருந்தாது. இது குடியேற்ற விசா (Immigrant Visa) விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் முன்பதிவுகளை மட்டுமே குறிக்கிறது.
