ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்

‘நம்பியோ’ (Numbeo) நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டு அரையாண்டுக்கான நாடுகளின் போக்குவரத்து நெரிசல் சுட்டெண்ணின் (Traffic Index) படி, ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய சுட்டெண்ணில் இலங்கை 254.5 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் (246.2), ஈரான் (215.3), இந்தியா (205.1), இந்தோனேசியா (191.1) ஆகிய நாடுகள் உள்ளன.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, இப்பிராந்தியத்தில் ஐந்தாவது அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது ஆசியா முழுவதும் அதிகரித்து வரும் வீதி நெரிசல் சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இப்பிராந்தியத்தின் முதல் 10 இடங்களில் உள்ள எஞ்சிய நாடுகளாக ஜோர்டான், துருக்கி, லெபனான், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவான போக்குவரத்து நெரிசலைப் பதிவு செய்துள்ளன.

உலகளாவிய ரீதியில், 320.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நைஜீரியா மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இலங்கை மூன்றாவது அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ், கென்யா ஆகிய நாடுகள் உலகளாவிய ரீதியில் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பயண நேரம், போக்குவரத்து நெரிசலால் வீணாகும் நேரம், எரிபொருள் விரயம், பயணத்தின்போது வெளியேறும் கார்பன் டை ஒக்சைட் உமிழ்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த ‘நம்பியோ போக்குவரத்து சுட்டெண்’ ஒட்டுமொத்த போக்குவரத்து நெரிசலை அளவிடுகிறது.

Related Articles

Latest Articles