2030 இல் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், 10 பில்லியன் டொலர் வருவாய் இலக்கு
2030-ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்கு 10 பில்லியன் டொலர் சுற்றுலா வருவாயை ஈட்டுவது மற்றும் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது ஆகிய இலக்குகளை அடைவது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுற்றுலாத்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, சிகிரியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு 10 புதிய அனைத்துலக விமான நிறுவனங்கள் சிறிலங்காவுக்கு விமான சேவைகளைத் தொடங்கியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதுடன், இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தேசிய பூங்காக்களை, வன வளங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள உலகளாவிய விளம்பரப் பரப்புரைகளின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
சுற்றுலாத்துறையை முறைப்படுத்தும் நோக்கில், அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிட சேவை வழங்குநர்களையும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யக் கட்டாயப்படுத்துவதன் மூலம், அவர்களை உரிய சட்டக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், இலங்கையின் சட்ட நடைமுறைகளை மீறி வெளிநாட்டினரால் நடத்தப்படும் வணிகங்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
…………………
27 நிறுவனங்களுக்கு தடை

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளை நடத்திச்சென்ற 27 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த நிறுவனங்களின் பெயர்கள் வௌிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளில் ஈடுபடுதல், அதனை பராமரித்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
…………………..
பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நாடு நகர்கின்றதா?

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் புதிய சட்டமூலங்கள் காரணமாக நாடு ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி, ஒரு கட்சி ஆட்சியைக் கொண்ட பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நகர்கின்றதா என்ற பாரிய அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையான விசனம் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இஷார ஹர்ஷண என்ற இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோதே உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 13 (4) உறுப்புரையின்படி பொலிஸ் காவலில் உள்ள ஒருவரின் உயிர், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் சட்டரீதியான கடமையாகும்.
ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான, சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.
அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலங்கள் குறித்து எச்சரித்த அவர்,
“அரசால் கொண்டுவரப்படவுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியன மக்களின் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியாகக் கூடும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்கள் ஊடாகச் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தவே அரசு முயற்சிக்கின்றது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக இருக்க வேண்டுமே தவிர, ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமையக் கூடாது.
அரசின் இத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகளைத் தோற்கடிப்பதற்குத் தேவையான உயர்மட்டத் தலைமைத்துவத்தை மக்கள் சக்தியுடன் இணைந்து வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.
………………..
ஜே.வி.பியின் செயலர் ரில்வின் சில்வாவுடன் இந்திய தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், தற்போதைய பிராந்திய அரசியல் நிலவரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், எதிர்காலப் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இந்தியத் தூதுவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரும் கவனம் செலுத்தினர்.
……………
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை நீச்சல் போட்டி: 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று ஈழத்தமிழ் மாணவி தனுஜா சாதனை

தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருச்சி அணி சார்பில் கலந்துகொண்ட ஈழத்தமிழ் மாணவி ஜெ. தனுஜா, கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பணப்பரிசுகளையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தலைநகர் சென்னையில் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
இந்தப் போட்டியில் திருச்சி மாவட்ட அணி சார்பாகக் கல்லூரி மாணவர்களுக்கான இரு வேறு நீச்சல் பிரிவுகளில் களமிறங்கிய ஈழத்தமிழ் மாணவியான ஜெ. தனுஜா, இரண்டு பிரிவுகளிலுமே இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினார்.
இதன் மூலம் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இந்திய ரூபாய பணப்பரிசினையும் அவர் தட்டிச் சென்றுள்ளார்.
இதேபோன்று தனுஜாவின் 10 வயதுடைய இளைய சகோதரியான டிலாஜினியும் திருச்சி அணி சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கான போட்டியில் பங்கேற்றிருந்தார்.
வயதில் மூத்தோருக்கான இந்தப் பிரிவில் போட்டியிட்ட போதிலும், 100 மீற்றர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் 11 ஆம் இடத்தையும், 200 மீற்றர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் 9 ஆம் இடத்தையும் பிடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்துவரும், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயக்குமார் – அருள்ஜோதி தம்பதியரின் புதல்விகளே தனுஜா மற்றும் டிலாஜினி ஆவர்.
இவர்கள் இருவரும் நீண்டகாலமாகப் பாடசாலை, கல்லூரி, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய மட்டத்திலான இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுப் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
………………..
ரூ.454 மில்லியன் பெறுமதியான கொக்கைன், எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது

ரூ.454 மில்லியன் பெறுமதியான 5.12 கிலோகிராம் கொக்கைன் மற்றும் 13.17 கிலோகிராம் எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் 46 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவலின்படி, தொழில்முறையில் பொறியியலாளரான குறித்த சந்தேகநபர், புதன்கிழமை (28) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டாரில் இருந்து இயங்கும் கத்தார் எயார்வேஸ் விமான சேவையின் QR 654 விமானம் மூலம் பாரிஸிலிருந்து டோஹா ஊடாக இலங்கைக்கு வந்த சந்தேகநபரை, மேலதிக சோதனைக்காக சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது, அவரது பயணப் பொதிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவை கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி போதைப்பொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்போது, சுமார் 256 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5,121 கிராம் கொக்கைன் போதைப்பொருளும், சுமார் 23,000 மாத்திரைகளுக்குச் சமமான 13,173 கிராம் எக்ஸ்டசி போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 198 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த வீதிமதிப்பு சுமார் 454 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களையும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
……………
ஹோமாகம பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த தவறிய குற்றச்சாட்டில் ஹோமாகம பொலிஸ் நிலைய பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 25ம் திகதி ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பீ.டீ.இஷார ஹர்ஷ குமார என்ற நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் குறித்த பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்தார். இதற்கான விசாரணைகளை பொலிஸ் நிலைய பரிசோதகர் மேற்கொள்ளத் தவறியுள்ளார்.
சந்தேக நபர் சிறைக்கூண்டில் இருக்கும் போது அவர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கத் தவறியமை, சந்தேக நபரை உரிய முறையில் சோதனை செய்யாமை மற்றும் கைதுக்கான பதிவுகள் சரியான முறையில் இடம்பெற்றுள்ளதா என்பதை உரிய முறையில் ஆராய்ந்து பார்க்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த பொலிஸ் பரிசோதகர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன் ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு பொலிஸ் கைதின் அடிப்பiடையில் சட்டத்திற்கு புறம்பாக இருவரை தடுத்து வைப்பதற்கு இடமளித்தமை உள்ளிட்ட காரணத்திற்காகவும் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹோமாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.ஆர்.எஸ். பிரஜான் சேனாநாயக்க நேற்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
……………
நீர்கொழும்பு சிறை வன்முறை- மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5, மற்றும் 6 ஆம் நாள்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு , வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறையில், சிறைச்சாலை அவசரகால பதில் நடவடிக்கை படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளும், 22 கைதிகளும் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்துள்ளனர்.
1996-ஆம் ஆண்டின் 21-ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 14-வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தச் சம்பவம் குறித்து ‘HRC/SUOMOTU/05/2026’ என்ற முறைப்பாட்டு இலக்கத்தின் கீழ், ஆணைக்குழு தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஆணைக்குழுவின் தலைமையக அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், அவர்கள் நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை ஆகியவற்றிற்குச் சென்று, காயமடைந்து அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு — அதாவது வெலிக்கடை, அங்குனாகொலபெலஸ்ஸ, பூஸா, தும்பற, வாரியபொல, குருவிட்ட, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொனராகல, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கு — மாற்றப்பட்டனர்.
ஆணைக்குழுவின் தலைமையக அதிகாரிகள், அந்தந்த பிராந்திய பணியக அதிகாரிகளுடன் இணைந்து, இந்தச் சிறைச்சாலைகள் அனைத்திற்கும் சென்று, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இது தவிர, இந்தச் சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, சிறைச்சாலைகள் திணைக்களம், காவல்துறை மற்றும் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றிலிருந்து 22 அதிகாரிகளை ஆணைக்குழு அழைத்திருந்தது.
விரிவான விசாரணைக்குப் பிறகு, ஆணைக்குழு தனது பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை ஒக்ரோபர் 27 ஆம் நாள் வெளியிட்டது.
இந்த அறிக்கையின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
