22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது ‘டித்வா’ புயலைப் போன்ற மற்றொரு பாரதூரமான பேரழிவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடன் வத்தளை மொனார்க் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Rhythm of the Night’ இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்திற்கு மரண அடி கொடுக்க அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. ஜனநாயகத்தின் பிரதான தூண்களான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றையும் வலுவிழக்கச் செய்து, நீதித்துறையை பலவீனப்படுத்தி நிறைவேற்றுத்துறையின் கீழ் கொண்டுவரும் பெரும் சதித்திட்டமே இந்தத் திருத்தமாகும். இது நாட்டில் ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்கும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.
நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்படும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். இல்லையெனில், சுதந்திரமாக அரசியல் செய்யவோ அல்லது கருத்துகளைத் தெரிவிக்கவோ முடியாத சூழல் ஏற்படும். 220 லட்சம் மக்களின் அரசியல் மற்றும் சமூக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அதிகாரப் பகிர்வில் சமநிலையைப் (Checks and Balances) பேணவும் தனிநபர் சுதந்திரம் மிகவும் அவசியமானது.
காலநிலை மாற்ற அச்சுறுத்தல்கள்:
இலங்கை காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் என்ற ரீதியில், நாடு எதிர்கொள்ளவிருக்கும் பெரிய சவால்கள் குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். ‘எல் நினோ’ (El Niño) மற்றும் ‘லா நினோ’ (La Niña) தாக்கங்கள் காரணமாக வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற காலநிலை அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், வழக்கத்தை விடவும் அதிக முன்னாயத்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறை காலாவதியாகிவிட்டது; அது தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானதாக இல்லை.
எனவே, புதிய கோணத்தில் சிந்தித்து, பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்னரே அதன் தாக்கங்களைக் குறைக்கும் நவீன வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும். சுனாமி மற்றும் டித்வா பேரழிவுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
