ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: சட்டவிரோதமாக தங்குபவர்களை வெளியேற்ற அரசு அதிரடி

 

ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக புதிய அமுலாக்க நடவடிக்கைகளை லேபர் அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச மாணவர்கள் காலவரையறையின்றி தங்குவதை தடுக்கும் வகையிலும் விசா விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புலம்பெயர்வு விதிகளின் மாற்றங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) இன்று வெளியிட்டார்.

இதற்கமைய நிகர வெளிநாட்டு புலம்பெயர்வை (NOM) நடப்பு நிதியாண்டில் 2 லட்சத்து 45 ஆயிரமாகவும் , 2027-28 நிதியாண்டில் 2 லட்சத்து 2 ஆயிரமாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பரில் 2 லட்சத்து 99 ஆயிரமாக இருந்த நிகர வெளிநாட்டு புலம்பெயர்வு, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 2 லட்சத்து 92 ஆயிரமாக க் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிபர திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

விசா இல்லாதவர்களை வெளியேற்ற, மெல்போர்னில் உள்ள முன்னாள் தனிமைப்படுத்தல் மையத்தை (quarantine facility) தடுப்பு முகாமாக மாற்றுவதற்கும், கூடுதலாக 100 அமுலாக்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

“அமெரிக்காவின் ICE முகமையால் பிற நாடுகளில் நடத்தப்படுவதைப் போன்றதொரு நடவடிக்கை இதுவல்ல” என்று டோனி பர்க் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சக வழிகாட்டுதல்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி, சுகாதாரம், கட்டுமானம், கல்வி மற்றும் சட்ட அமுலாக்கம் உள்ளிட்ட தட்டுப்பாடு நிலவும் திறன் சார்ந்த துறைகளின் விசா விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள்.

மருத்துவ உதவியாளர்கள் (paramedics), மின்சாரப் பணியாளர்கள் (electricians) மற்றும் ஆசிரியர்கள் இதில் அடங்குவர். அத்துடன் பாதுகாப்பு, நீர்வளம், விவசாயம், மீன்வளர்ப்பு துறையினருக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் விசாக்களை மாற்றிக்கொண்டே இருப்பதைத் (visa hopping) தடுக்கவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 3 லட்சத்து 37 ஆயிரம் சர்வதேச மாணவர் விசாக்களில் 45 ஆயிரம் விசாக்கள் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டன. புதிய விதிகளின்படி, பெரும்பாலான மாணவர்கள் தனியாகவே வர வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை வழங்கும் புலம்பெயர்வு முகவர்களுக்கு புதிய நடைமுறைகளுக்கமைய சட்ட ரீதியாக தண்டனை வழங்கப்படும்.

சுற்றுலா விசாக்களுக்கு “மேலும் தங்குவதற்கு அனுமதியில்லை” (no further stay) என்ற நிபந்தனை சேர்க்கப்படும். இதன் மூலம் சுற்றுலா விசாவில் வந்துவிட்டு இடைக்கால விசாவில் (bridging visa) நாட்டில் தங்குவது தடுக்கப்படும் என உள்துறை அமைச்சு விடுத்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையில் ஆள்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க தொழில் மற்றும் விடுமுறை விசாக்களின் 2 மற்றும் 3-ஆம் ஆண்டுகளுக்கு குலுக்கல் முறை (ballot system) அறியமுகப்படுத்தப்படவுள்ளது.

இவர்களுக்கான விண்ணப்ப செயலாக்க நேரம் 3 மாதங்களாக நிலைப்படுத்தப்படும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியாவைச் சேர்ந்த பயணிகளுக்கு வரம்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வெறுப்புப் பேச்சுகள் மற்றும் குடும்ப வன்முறைகளை ஒழிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் நடத்தை சோதனைகள் (character test) புதுப்பிக்கப்படும்.

ஆஸ்திரேலிய நாட்டின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புலம்பெயர்வு முறையைச் சீரமைப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் டோனி பர்க் கூறியுள்ளார்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் வன் நேஷன் கட்சி பெற்று வரும் ஆதரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் வருகை குறித்து மக்களிடையே எழுந்துள்ள கவலைகளைக் கருத்தில் கொண்டு லேபர்கட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles