இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
அவர், திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட, சிறிலங்காவில் இந்தியாவின் பல்வேறு திட்டங்களைப் பார்வையிடுவார்.
முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட சிறிலங்காவில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
