விறுவிறுப்பான ஆட்டத்தில், அசத்தலான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய கேப் வெர்டே (Cape Verde) அணியை, கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட Own Goal உதவியுடன் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு (Last 16) தகுதி பெற்றுள்ளது.
தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே, மியாமி மைதானத்தில் திரண்டிருந்த 64,478 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இருமுறை அர்ஜென்டினாவின் முன்னிலையைச் சமன் செய்து மிரட்டியது.
கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியின் 6-வது நிமிடத்தில், லியோனல் மெஸ்ஸி உதைத்த கார்னர் பந்தை கிறிஸ்டியன் ரொமேரோ ஹெடர் செய்ய, அது கேப் வெர்டே தடுப்பாட்ட வீரர் டினே போர்ஜஸின் கையில் பட்டு ‘சுய கோலாக’ மாறியது.
இதன் மூலம், வரும் செவ்வாய்க்கிழமை அட்லாண்டாவில் எகிப்து அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பை அர்ஜென்டினா உறுதி செய்தது.
முன்னதாக, ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி இந்தத் தொடரில் தனது 7-வது கோலை அடித்து அர்ஜென்டினாவை முன்னிலைப்படுத்தினார். ஆனால், ஆட்டத்தின் ஒரு மணி நேரத்தை நெருங்கிய போது டெராய் டுவார்டே கோல் அடித்து அதனைச் சமன் செய்தார்.
இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியின் 2-வது நிமிடத்தில், லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஒரு பவர்புல் ஷாட் மூலம் கோல் அடித்து அர்ஜென்டினாவை மீண்டும் 2-1 என முன்னிலைப்படுத்தினார்.
ஆனால், கேப் வெர்டே அணி அசராமல் 103-வது நிமிடத்தில் சிட்னி லோப்ஸ் கப்ராலின் அபாரமான கோல் மூலம் மீண்டும் 2-2 என ஆட்டத்தைச் சமன் செய்தது.
மூன்று முறை உலக சாம்பியனான அர்ஜென்டினாவிடம் கேப் வெர்டே தோற்றிருக்கலாம், ஆனால் அவர்களின் கூட்டு முயற்சியும் விடாமுயற்சியும் உலகக் கோப்பையில் ஒரு மறக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளது.
உலகத் தரவரிசையில் 67-வது இடத்தில் உள்ள கேப் வெர்டே, குரூப் சுற்றில் ஸ்பெயின், உருகுவே மற்றும் சவூதி அரேபியாவுக்கு எதிராக டிரா செய்தது போல அர்ஜென்டினாவையும் திணறடித்தது.
