ரோஹிங்கியா இனப்படுகொலைக்கு மியான்மார் பொறுப்பு; சர்வதேச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கு அந்நாட்டு அரசே பொறுப்பு எனத் தீர்ப்பளித்துள்ள சர்வதேச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், அவர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரோஹிங்கியா மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பங்களாதேஷில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். இந்த நடவடிக்கைகளின்போது சுமார் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் காம்பியா தாக்கல் செய்த வழக்கில், மியன்மார் அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசுக்கு எதிராக இனப்படுகொலை குற்றத்தை உறுதிப்படுத்திய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானது என்பதுடன், அதற்கு மேல்முறையீடு செய்ய முடியாது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, மியன்மார் அரசு இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குதல், அழிக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்குதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ, உளவியல் ரீதியான மறுவாழ்வு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், இடம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், தன்னார்வத்துடனும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், மியான்மாரில் தற்போது நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ரோஹிங்கியா மக்களின் பாதுகாப்பான மீள்குடியேற்றம் உடனடியாக சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இனப்படுகொலைத் தீர்ப்பு ரோஹிங்கியா மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான முக்கிய சட்ட அங்கீகாரமாக அமைந்துள்ள போதிலும், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் பல்வேறு சவால்கள் தொடர்ந்தும் காணப்படுவதாக Al Jazeera தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles