ஈரானின் முன்மொழிவை நிராகரித்தார் ட்ரம்ப்: தாக்குதலை தொடர திட்டம்?

ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மீண்டும் திறந்து மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இத்திட்டம் குறித்து அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பதிலுக்காக ஈரான் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஈரான் இந்த ராஜதந்திர முயற்சியை முன்வைத்தது.

கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டால், ஏழு நாட்களுக்குள் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பாதையைத் திறக்கவும், பிராந்தியத்தில் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும் என்று ஈரான் தெரிவித்திருந்தது.

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் (Hormuz) நீரிணை வழியே எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் தனது எதிரி நாடான சவூதி அரேபியாவுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஹோர்முஸ் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும், ஒப்பந்தத்தை எட்டவும் அமெரிக்கத் தரப்பில் தீவிர விருப்பம் இருந்தால், தற்போது அனைத்தும் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா ஒப்புக்கொண்டால், ஈரானின் அணுசக்தித் திட்டம் உட்பட இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் தலைப்புகளில் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம் என்று அராக்சி கூறினார்.

முன்னதாக, மத்தியஸ்தர்கள் மூலமான பேச்சுவார்த்தைகள் நேர்மறையானவை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்த போதிலும், ஈரானின் கோரிக்கைகள் குறித்து ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் சந்தேகத்தைக் கொண்டிருந்ததாகவும், மீண்டும் தாக்குதலைத் தொடரவே அவர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles