ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
” இந்த ஒப்பந்தத்தைச் செய்வதற்கு, அவர்கள் மிகவும் வெற்றியடைந்துள்ள ஆபிரகாம் உடன்படிக்கையில் உறுப்பினராக இணைய வேண்டும் என்று மட்டுமே நான் கூறுகிறேன். ஆனால், இப்போது அவர்கள் அதைச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை உருவாக்குவதற்காக, வாஷிங்டனும் ரியாத்தும் புதன்கிழமை அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால் மறுநாளே சமூக வலைத்தளத்தில் புதிய நிபந்தனை ஒன்றை அறிவித்த ட்ரம்ப், சவூதி அரேபியா முதலில் இஸ்ரேலுடன் உறவைச் சீராக்க வேண்டும் என்று கூறினார். வெள்ளிக்கிழமையும் அவர் அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட்டிடம் (Chris Wright) இந்த உடன்படிக்கைகள் குறித்து தான் பேசவில்லை என்றும், “இருப்பினும் இது எப்போதும் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றுதான்; கிறிஸுக்கும் தெரியும், சவூதி அரேபியாவுக்கும் தெரியும்” என்றும் ட்ரம்ப் கூறினார்.
இருப்பினும், பாலஸ்தீன நாட்டிற்கான தெளிவான வழிமுறை உருவாகும் வரை இஸ்ரேலுடன் முறையான உறவை ஏற்படுத்த முடியாது என்பதில் ரியாத் நீண்டகாலமாக உறுதியாக உள்ளது. ஆனால், இதை தற்போதைய இஸ்ரேல் அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது.
இந்த புதிய அணுசக்தி ஒப்பந்தம் 30 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைச் சவூதிக்கு மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.










