இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என்ற நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டிச்சங்குளம் காட்டுப் பகுதிக்குத் தேன் எடுப்பதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே காட்டு யானையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அவரைக் குடும்பத்தினர் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டமடு பகுதியில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மற்றுமொரு காட்டு யானையின் தாக்குதலில் நாவக்காடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் வட்டமடு பகுதியில் உள்ள வயல்வெளிப் புறத்தில் தனது மாடுகளுக்குப் புல் வெட்டிக் கொண்டிருந்த போதே, திடீரெனக் காட்டில் இருந்து வெளிப்பட்ட காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை திருக்கோவில் வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றது.
திருக்கோவில் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் மற்றும் மனித – யானை மோதல்கள் காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் கவலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
