ஈரானுடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் சவூதியுடன் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திட்டது அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தித் திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்க எரிசக்தித் திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் “அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்” என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது சவூதி அணுசக்தி திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்குப் “பெரிய அளவிலான அணுகலை” வழங்கும்.

ஒப்பந்தத்தின் முழுமையான உள்ளடக்கம் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்றாலும், சவூதி அரேபியா எதிர்காலத்தில் யுரேனியத்தைச் செறிவூட்ட இந்த ஒப்பந்தம் அனுமதிக்கக்கூடும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுரேனியம் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளாகவும், அதேவேளையில் அணு குண்டுகளைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.

ஏற்கனவே பதற்றமான ஒரு பிராந்தியத்தில், அமெரிக்கா இத்தகைய அனுமதியை வழங்குவது இதுவே முதன்முறை என்றும், இது எதிர்காலத்தில் அணுஆயுதப் பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒப்பந்தத்துடன் சேர்த்து “இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை” ஒன்றும் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க எரிசக்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“ஒன்றாக இணைந்த இந்த இரு உடன்படிக்கைகளும், அணுஆயுதப் பரவல் தடையை உறுதிசெய்வது உட்பட பல பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குகளை முன்னெடுக்கும் பல தசாப்த கால பல பில்லியன் டாலர் கூட்டாண்மைக்குச் சட்டப்பூர்வ அடித்தளத்தை அமைக்கின்றன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசாங்கமும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஒப்பந்தம் “இரு நாடுகளுக்கும் இடையே ஆற்றல் துறையில் நிலவும் ஒத்துழைப்பின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது” என்றும், கடந்த நவம்பரில் சவூதித் தலைவர் வோஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இது எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நீண்டகால பங்காளியான சவூதி அரேபியா, பல அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளதுடன், அவை ஈரானியத் தாக்குதல்களின் இலக்குகளாகவும் இருந்துள்ளன.

மேலும், யேமனில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதிக்கு எதிராக “கடல்சார் முற்றுகையை” அறிவித்த இரண்டு நாட்களிலேயே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, சவூதி அரேபியா இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவால் கட்டப்படும் செறிவூட்டல் மையத்தில் சொந்தமாக யுரேனியத்தைச் செறிவூட்ட அனுமதிக்கப்படலாம் என்று முந்தைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடையதாக இருக்கும். ஏனெனில் அமெரிக்க நிறுவனங்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் மையத்தைக் கட்டுவதில் ஈடுபடலாம்.

“இந்த ஒப்பந்தங்கள் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் பரவல் தடையின் மிக உயர்ந்த தரநிலைகளை உறுதி செய்கின்றன. அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட உலகின் சிறந்த அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானிகளை மட்டுமே இவை நம்பியுள்ளன” என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் “அமெரிக்க மற்றும் பிராந்திய பாதுகாப்பை” முன்னெடுப்பதுடன், “அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணுஆயுதப் பரவல் தடையின் உயர் தரநிலைகளைப் பேணுகிறது” என்றும் எரிசக்தி திணைக்களம் கூறியுள்ளது.

அதேவேளையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முதன்மைப் பங்காளியான இஸ்ரேலின் அணுசக்தி நிபுணர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள், இந்தத் திட்டம் இறுதியில் சவூதி அரேபியா அணு ஆயுதத்தை உருவாக்க வழிவகுக்கும் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles