சட்டவிரோத மதுபானமான கசிப்பு 6,375 மில்லிலீற்றருடன் பெண்ணொருவர் பசறை, எல்டப் தோட்டப் பகுதியில் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் 43 வயதுடையவர் எனவும், பசறை, எல்டப் தோட்டம், கீழ்ப்பிரிவு வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மடுல்சீமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் வசித்து வரும் வீட்டிற்கு அருகிலுள்ள அவரது பழைய வீட்டுக்கு பின் பகுதியில் பொலிஸார் சோதனையிட்ட போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,375 மில்லிலீற்றர் கசிப்பு மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஜித் பண்டார ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், மடோல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரஸிக வீரகோன் தலைமையிலான குழுவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.










