கொழும்பில் இருந்து மலையகப் பகுதிக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொல்பிட்டிய பொலிஸாரால், கலுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர், பொல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கடந்த 06ஆம் திகதி பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதித் தடை சோதனையின் போதே கலுகல பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்துச் சிக்கியுள்ளார்.
ஹட்டன் – டிக்கோயா, வனராஜா தோட்டம் கீழ் பிரிவைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியைச் சோதனையிட்ட போது, சந்தேகநபரின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவர் கொழும்பில் இருந்து போதைப்பொருளைக் கொண்டுவந்து மலையகப் பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










